Home முந்தைய இதழ்கள் 2021 நவம்பர் 2021 அறிவோம்: மூன்றாம் வினையூக்கி கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு!
வியாழன், 26 மே 2022
அறிவோம்: மூன்றாம் வினையூக்கி கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு!
Print E-mail

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

2021ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்-பட்டுள்ளது.

வெப்பம், உடல் வலி இவற்றை, தொடாமல் உணரும் சென்சார் பகுதியைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் பரிசுக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில், டேவிட் ஜூலியஸ், நரம்பின் முனைப் பகுதியிலுள்ள வெப்பத்தை அறியும் சென்சாரை அடையாளம் கண்டுபிடிக்கும் ஆய்வில் வெற்றி பெற்றார். இதற்காக மிளகாயும் மிளகும் சேர்ந்த கலவையை அவர் பயன்படுத்தினார்.

ஆர்டெம் படபூட்டியன், தோல் மற்றும் உள் உறுப்புகளில் இயந்திர தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் சென்சார்களைக் கண்டு-பிடித்தார். இதற்காக அழுத்தம்-உணர்திறன் செல்களை அவர் பயன்படுத்தினார். இந்தக் கண்டுபிடிப்புகள் தீவிர ஆராய்ச்சி நடவடிக்கை-களுக்கு விதை தூவியுள்ளன.

எளிதாகக் கூறவேண்டுமானால் நம் விரலால் சூடான பாத்திரத்தைத் தொடும் போது அந்தச் சூட்டை நாம் உணர்ந்தாலும் விரல் பாதிக்கப் படுவதில்லை. அதே சூடு நமது கை அல்லது உடலின் வேறு பாகத்தில் பட்டால் உடனடியாக அந்த இடம் பாதிக்கப்படும். இந்த வெப்ப வேறுபாட்டை நரம்புகள் எவ்வாறு மூளைக்கு எடுத்துச்செல்கின்றன, அதன் மூலம் பாதிப்புகள் எவ்வாறு கட்டுப்படுகின்றன என்பதை குறித்த விரிவான ஆய்வு ஆகும்.

வேதியியலுக்கான நோபல் பரிசு

ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகிய இரு விஞ்ஞானிகளும் வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis) கருவியை உருவாக்கியதற்காக இவ்வாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்-பட்டுள்ளது.

வேதியியலில் இருவித வினையூக்கிகளே (உலோகங்கள் மற்றும் நொதிகள்) உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாகக் கருதிக் கொண்டிருந்த சூழலில், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்-பட்டுள்ளது. இதுவரை வேதியியலில் இரண்டு வகை வினையூக்கிகளாக (Catalysts)) - உலோகம் (metal), நொதி (enzymes) ஆகியன மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால். தற்போது மூன்றாவது வகை வினையூக்கி இருக்கிறது என்று கண்டுபிடித்து இதற்கு ஏசிமெண்ட்ரிக் ஆர்கனோகேட்டலைஸிஸ் (a s y m m e t r i c
organocatalysis) என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு

புவி வெப்பம் அதிகரிப்பு குறித்து நாம் பலகட்டுரைகள், விளக்கப் படங்களைப் பார்த்திருப்போம். ஆனால், அதனை நுட்பமாக முதல்முதலாக ஆய்வுகளோடு விளக்கியவர்-களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான கூறுகளை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய அறிவியலாளர், கார்பன்_டை_ஆக்ஸைடு மூலம் புவி வெப்பநிலை எப்படி உயருகிறது என்பதை விளக்கிய அறிவியலாளர் உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்-கழகத்தைச் சேர்ந்த யுகரோ மனபே, ஜெர்மனியின் க்ளாஸ் ஹேஸல்மன், இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேரும் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

புவியின் வளிமண்டலத்தில் கார்பன்_டை_ ஆக்ஸைடு செறிவு அதிகரிக்கும்போது புவியின் மேற்பரப்பு வெப்பநிலை எப்படி அதிகரிக்கிறது என்பது குறித்து மனேபே ஆய்வு செய்திருக்கிறார். 1960-களில் பூமியின் பருவநிலை குறித்த மாதிரிகளை இவர் உருவாக்கினார். இன்றைய பருவநிலை மாதிரிகளுக்கு இவரது ஆய்வுகளே அடிப்படையாக அமைந்தன.

அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பருவநிலைக்கும் காலநிலைக்கும் இடையேயான தொடர்பை விளக்கினார் க்ளாஸ் ஹேஸல்மன். இயற்கையாகவும், மனித நடவடிக்கைகளாலும் பருவநிலையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இவர் தனது மாதிரிகள் மூலம் தெளிவுபடுத்தினார்.

1980இல், ஜார்ஜியோ பாரிசி சீரற்ற சிக்கலான பொருள்களில் மறைந்திருக்கும் வடிவங்களைக் கண்டுபிடித்தார். அவை இயற்பியலில் மட்டுமல்ல, கணிதம், உயிரியல், நரம்பியலில் உள்ள சீரற்ற சிக்கலான பொருள்களையும் மற்றும் நிகழ்வு-களையும் புரிந்துகொள்ளப் பயன்படுகின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு

ஊடகவியலாளர்களான ரெஸ்ஸா மற்றும்  முராடோவ் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது.

பிலிப்பைன்சிலும், ரஷ்யாவிலும் ஜனநாயகத்தைக் காக்க வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியதற்காக ஊடகவியலாளர்கள் மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகிய இருவரும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

"ஜனநாயகமும், ஊடகச் சுதந்திரமும் மேலும் மேலும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்-கொண்டிருக்கும் உலகில் இந்த லட்சியங்களுக்காக உறுதியாக நிற்கும் எல்லா ஊடகவியலாளர்-களையும் இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்து-கிறார்கள்” என்று விருது தேர்வுக் குழு கூறியுள்ளது.

ஒருபக்கம் அரசு சார்புடைய பெரும் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்கள் தொடர்ந்து அரசு அடக்குமுறை தொடர்பான செய்திகளை மறைத்து போலியான செய்திகளையே வெளியிட்டு மக்களைத் திசைதிருப்பி வரும்போது, இவர்கள் இருவரும் உண்மையை பல்வேறு அடக்கு-முறைகளுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் நடுவே தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கிய நோபல் பரிசு விருதை பெற்றுள்ள அப்துல் ரசாக், தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். தனது 21ஆம் வயதில்தான் இவர் இலக்கியம் சார்ந்து எழுதத் தொடங்கினார். பல நாவல்களை இயற்றிய அவர், அண்மையில் வளைகுடா நாடுகளில் அகதிகள் குறித்து எழுதியிருந்த புத்தகத்திற்காக நோபல் பரிசைப் பெறுகிறார்.

உள்நாட்டுப் போர், வறுமை, பஞ்சம், இயற்கைச் சீற்றம் இதுபோன்ற காரணங்களால் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வேறு நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச்செல்வார்கள். இவர்களை அகதிகள் என்றும் புகலிடம் தேடுவோர் என்றும் அடைக்கலக் கோரிக்கையாளர் என்றும் கூறுவார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அய்ரோப்பா-விற்கு அடைக்கலம் தேடி ஆயிரக்கணக்கானோர் கடுமையான பாலைவன வெப்பம், அதிக நீரோட்டம் கொண்ட மத்தியத் தரைகடல் போன்றவற்றைக் கடந்து இத்தாலி, ஸ்பெயின் செல்வார்கள்.

அதேபோல் ஆசிய நாடுகளில் இருந்து துருக்கி வழியாக புகலிடம் தேடி அய்ரோப்பா செல்வார்கள். இவர்களில் சிலர் லெபனான், அரபு நாடுகளில் தஞ்சம் அடைவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி அடிமைகளை வைத்திருந்தார்களோ அதே போல் இன்றும் இவர்களைப் பல செல்வந்தர்கள் அடிமைகளாக வைத்திருப்பார்கள்.

இவ்வாறு அங்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் அகதிகளுக்கு அந்த நாட்டு சட்ட திட்டங்களும் உதவாது. வேறு யாருமே உதவ முடியாது. அவர்கள் வேலை செய்யும் வீடுகளின் உரிமையாளர்களாகப் பார்த்து இரக்கப்பட்டு அவர்களை விடுவித்தால்தான் உண்டு.

அப்படி இருந்த அகதிகளின் வாழ்வை தனது நாவலில் எடுத்துக் கூறியதற்காக இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

2021ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசுக்கு  அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்கள் தேர்வாகியுள்ளனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிட் கார்ட், மாசசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜோஸ்வா டி. அங்கிறிஸ்ட், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் க்வீடோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகியோர் நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளனர்.

மனிதர்களுக்கு பொருளாதாரம் என்பது மிகவும் தேவையானது, அதே நேரத்தில் பொருளாதாரம் மட்டுமே உறவுகளைப் பிணைக்கும் சங்கிலி அல்ல என்ற தத்துவச் சொல்லை இவர்கள் இன்றைய நவீன பொருளாதார காலத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். இக்காலம் மட்டுமல்ல, எக்காலமுமே பணம் மனிதர்களுக்கு முக்கியமல்ல. மனித நேயம் மற்றும் உதவும் மனப்பான்மையே வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இதில் பொருளாதாரத்திற்கும் ஒரு பங்கு உண்டு அவ்வளவுதான் என்பதே இவர்களின் ஆய்வின் மூலக் கருத்து ஆகும்.

Share