அசத்தும் அறிவியல் : உடையாத பலூன்களும் குத்தாத ஆணிகளும் | |||
|
நோக்கங்கள்: எடை, விசை பரவுதல், அழுத்தம் பற்றி அறிதல். பொருள்கள்: ஒரு மரப் பலகை, அல்லது தலைகீழான மேசை. ஒரு பெரிய துண்டு. 8 அல்லது 10 ஊதப்பட்ட பலூன்கள் (சுமார் 75% ஊதப்பட்டவை, முழுமையாக ஊத வேண்டாம்.) செயலாக்க வழிமுறைகள்: 1. பலூன்களை ஊதவும். ஆனால், முழுமையாக இல்லை (75%). 2. துண்டைத் தரையில் விரிக்கவும். 3. உதவிக்கு இரண்டு நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். பலூன்கள் அனைத்தையும் துண்டின் மேல் வைக்கவும். பலூன்களின் மேல் பலகையை நண்பர்களின் உதவியுடன் வையுங்கள். 4. பலகையை நிலைப்படுத்த இருபுறமும் நண்பர்களை நிறுத்தவும். 5. பலகையில் ஏற மற்றொரு நண்பரை அழைக்கவும். குதிக்கவோ நகரவோ வேண்டாம் என்று அவருக்கு நினைவூட்டுங்கள். 6. பலூன்கள் வெடிக்கத் தொடங்கும் வரை நண்பர்களைச் சேர்ப்பதைத் தொடரவும் 7. பலூன் பலகைக்கு நிலைத்தன்மையை வழங்குவதற்கு இரண்டு பேரை எல்லா நேரங்களிலும் பக்கவாட்டில் வைத்திருக்க வேண்டும். 8. பலகையைப் பிடிக்துக் கொள்வதற்கு கவனம் செலுத்தக்கூடிய பெரியவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது? ஒரு நபர் தனது முழு எடையையும் ஒரு பலூனில் வைக்கும்போது, அந்த நபரின் அழுத்தம் அனைத்தும், பலூனின் ஒரு சிறிய பகுதியில் குவிகிறது, இதன் விளைவாக பலூன் வெடிக்கிறது. ஒரு நபரின் எடை பல பலூன்களில் விநியோகிக்கப்-படும்-போது, அழுத்தம் ஒரு பெரிய பகுதியில் பரவுவதால் பலூன்கள் வெடிப்பதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு பலூனும் எடையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தாங்குகிறது. பலூன்கள் முழுவதுமாக ஊதப்படாவிட்டால் மட்டுமே இந்த தந்திரம் வேலை செய்யும். இந்த செயல்முறை, முழுவதுமாக ஊதப்பட்ட பலூன்-களால் செய்யப்பட்டால், ரப்பர் அதிக நீட்சியடைந்து, குறைந்த மீள்தன்மை கொள்ளும். பகுதியளவு மட்டுமே ஊதப்பட்ட பலூன்கள் இன்னும் பருமனான விரிவடையக் கூடிய திறனைக் கொண்டுள்ளன. இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் ஆணிப்படுக்கை செயல்படுகிறது. அழுத்தம் என்பது ஒரு பரப்பு பகுதிக்கு செலுத்தப்படும் விசையின் அளவு என வரையறுக்கப்படுகிறது. P=F/A p என்பது அழுத்தம், F என்பது விசை, A என்பது பரப்பு பகுதி. எனவே, அதிக அளவு அழுத்தத்தை உருவாக்க, நீங்கள் ஒரு பெரிய விசையைச் செலுத்தலாம் அல்லது ஒரு சிறிய பகுதியில் ஒரு விசையைச் செலுத்தலாம் (அல்லது இரண்டையும் செய்யலாம்). இதே தத்துவத்தை ஆணிப் படுக்கையைக் கொண்டு பார்த்தால், அனைத்து ஆணிகளின் நுனிகளின் மொத்தப் பரப்பளவு சம தளத்தில் போதுமானதாக இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக ஆணிப் படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். ஒருவர் ஒரே ஒரு ஆணியில் உட்கார்ந்தால், அது எளிதில் தசைக்குள் புகுந்து உடலைத் துளைத்துவிடும். ஆனால், அதே எடை நூற்றுக்கணக்கான ஆணிகளுக்கு மேல் செலுத்தப்பட்டால், ஒவ்வொரு தனிப்பட்ட ஆணியின் மீதும் மிகக் குறைந்த அழுத்தம் மட்டுமே இருக்கும். இதனால் ஆணி உடலில் குத்துவதில்லை. அதே சமயம் அதில் படுக்க முற்படும்போதும், எழுந்திருக்கும் போதும் சிரமம் ஏற்படுகிறது, ஏனெனில், அவரது எடை குறைவான ஆணியில் குவிக்கப்படுகிறது, இதன் விளைவாக ஒவ்வொரு ஆணியிலும் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் சில சோதனைகள்: * பலூன்களின் எண்ணிக்கை அல்லது இடப்பரப்பைக் குறைக்க முயற்சிக்கவும். * முழுமையாக ஊதப்பட்ட பலூன்களை வைத்து முயற்சிக்கவும். = பலகை இல்லாவிட்டால் என்ன நடக்கும்? = ஒரு மாணவர், பலூன்கள் வெடிக்காதவாறு அவற்றின் மேல் படுக்க முடியுமா?
|