குறள் கற்க எளிய வழி! | |||
|
காலை நேர உறக்கத்தைக் களைவாய் பத்தே நிமிடங்கள்; மூலை தன்னில் அமர்ந்தபடி முப்பால் நூலைக் கையிலெடு!
நாளும் புதிய குறளொன்றை நன்றாய் மனனம் செய்துவிடு; தாளும் ஒன்றை எடுத்ததில்நீ தவறா மல்தான் எழுதிவிடு! தினமும் ஒவ்வொரு குறளாகத் திரட்டிக் கற்கத் துவங்கிட்டால் மனமும் செம்மை யாகிவிடும்; மனதுள் குறளும் பதிந்துவிடும்!
இரவில் படுக்கச் செல்லும்முன் எழுதி வைத்த குறளினையே உரக்கக் கூறி உருவேற்று; உன்றன் நினைவில் தங்கிவிடும்!
பத்தே நிமிடச் சிறுவேலை; பயனோ வாழ்நாள் முழுவதுமாம்; முத்தே யான முப்பாலை முழுதும் எளிதாய்க் கற்றிடலாம்!
அருமைக் குறளை அனுதினமும் ஆனந்த மாகக் கற்றிடலாம்; பெருமை மிக்க மாணவனாய்ப் பீடு நடையே போட்டிடலாம்! - கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை
|