Home முந்தைய இதழ்கள் 2022 ஜனவரி 2022 கதை கேளு.. கதை கேளு.. : பொத்த்த்..
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022
கதை கேளு.. கதை கேளு.. : பொத்த்த்..
Print E-mail

விழியன்


முன்ன ஒரு காலத்துல நடக்காத கதை இது. உயரமான மரங்கள் நிறைந்த ஒரு காடு அது. நடு இரவு நேரம். எல்லா விலங்குகளும்  உறங்கிக்-கொண்டு இருந்தன. குறட்டைச் சத்தம் கொர்ர்ர்ர் கொர்ர்ர் கொர்ர்ர் என்று காடு முழுக்கக் கேட்டது. குட்டி விலங்குகள் காதில் இலைகளை அடைத்துக்கொண்டு தூங்கின. குறட்டைச் சத்தம் இன்னும் அவற்றுக்கு கேட்டுப் பழகவில்லை. அப்போது ‘பொத்த்த்’ என்று ஒரு பெரும் சத்தம். காடே விழித்துக்கொண்டது. அவ்ளோ பெரிய சத்தம். கும்மிருட்டு. பக்கத்தில் யார் நிற்கின்றார்கள் என்றுகூடத் தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. ஆனாலும் காடு முழித்துக்கொண்டது. அப்படி என்றால் காட்டில் இருக்கும் எல்லா விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் முழித்துக்கொண்டன. சத்தம் வந்தது நதிக்கரைக்கு அருகேதான்.

ஆமா, காட்டுக்கு நடுவே ஒரு நதி ஓடுகின்றது. ஒவ்வொரு விலங்காக முட்டி மோதி நதிக்கரைக்குச் சென்றன. கரடி, சிங்கம், புலி, மான், யானை, கழுகு என எல்லாமே கூட்டமாகக் கிளம்பின. குழந்தை விலங்குகளைக் கூட்டிச்செல்லவில்லை. ஏதேனும் ஆபத்து என்றால் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா? மெல்ல மெல்ல எல்லாமும் நதிக்கரையை நோக்கி நடந்தன.

“வாங்க, என்ன உங்களுக்கும் அந்தச் சத்தம் கேட்டதா? அதோ அந்தப் பெரிய மரத்துக்குப் பின்னாடிதான் அந்தச் சத்தம் கேட்டுச்சு. நான் முழிச்சிட்டுத்தான் இருந்தேன். “பொத்த்த்”ன்னு சத்தம் வந்தது” என்றது ஆந்தை. தனியாகப் போகப் பயந்து அந்தப் பக்கம் போகவில்லை என்றது. எல்லாம் அந்த மரத்திற்குப் பின்புறம் சென்றன. அந்த இருட்டிலும் அந்தப் பொருள் தெரிந்தது. மான் உயரத்திற்கு ஒரு பூசணிக்காய் போல ஏதோ ஒன்று இருந்தது. பூசணிக்காயை மரத்தின் மேலே இருந்து போட்டால் என்னாகும்? சிதறிடும் அல்லவா? அதே போல இது இரண்டு பாகமாகச் சிதறி இருந்தது. அது வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்திலும் இருந்தது. இது என்ன விநோதமான பொருளாக இருக்கும் என அவை எல்லாம் அதை வியந்து பார்த்துக்கொண்டு இருந்தன. வலது முன்னங்காலில் அடிபட்டு கட்டுப்போட்டிருந்த ஒட்டகச்சிவிங்கி கடைசியாக அங்கே வந்து சேர்ந்தது. அந்தப் பொருளைப் பார்த்ததும்..

ஆ.....! என அலறியது.

“என்ன ஒக்கி, இது என்ன பொருள்னு உனக்குத் தெரியுமா?”

உடனே வானத்தைப் பார்த்தது ஒட்டகச்சிவிங்கி. எல்லாம் மேலே பார்த்தன. பாதிப் பேருக்கு ஒட்டகச்சிவிங்கி என்ன சொல்ல வருகின்றது எனப் புரியவில்லை.

“நிலாவா?’’ என்று கத்தியது கழுகு. தன் நீண்ட கழுத்தினை “ஆமாம்’’ என்பது போல மேலும் கீழும் ஆட்டியது.

அடுத்த அய்ந்தாவது நிமிடம் நிலாவைச் சீரமைக்கும் குழு போடப்பட்டது. அந்தக் குழுவின்  வேலை -_ பிய்ந்து இருக்கும் நிலாவைத் தைப்பது. யார் தைப்பது என்று குழப்பம். காட்டிலேயே சிறந்த தையல் வேலை செய்வது நாகப்பாம்புதான். அதனை அழைத்துவர மான்கள் அனுப்பப்பட்டன. “கூடவே ஒரு தரமான ஊசியையும் நிலாவைத் தைக்க வெள்ளை நூலையும் எடுத்துவரச் சொல்லுங்க’’ எனக் கட்டளையிட்டது குழுத் தலைவி கழுகு.

இதற்குள் காட்டுக்குள் செய்தி பரவி, எல்லா சின்ன விலங்குகளும் வந்துவிட்டன. குட்டி மான்கள், “அய்... நிலா..” எனத் துள்ளிக் குதித்தன. யாரும் எதிர்பார்க்காத நிமிடத்தில் அந்த இரண்டு நிலாப் பகுதிகளையும் ஆற்றங்கரைக்கு நகர்த்தின. “அடேய், நில்லுங்கப்பா நில்லுங்க... என்ன செய்றீங்க?’’ எனக் கமிட்டி நபர்கள் பதறின.

“மாமா, நிலா அழுக்கா இருக்கு, அதை கழுவி விடுறோம், இருங்க” என்று சொல்வதற்குள் குட்டி யானை தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது. எல்லா குட்டி யானைகளும் சேர்ந்துகொண்டன. பழுப்பு நிறம் மறைந்து வெள்ளை வெளேரென மாறியது நிலா. நாகப்பாம்பு சரியாக வந்து சேர்ந்தது. பின்னாலே வந்த சிங்கம் தன் முதுகில் நீண்ட ஊசியை எடுத்து வந்தது. இப்ப தைக்க நூல் வேண்டுமே. அதுவும் வெள்ளை நிறத்தில் இருந்தால்தான் அசிங்கமாகத் தெரியாது. பெரும் குழப்பம் நிலவியது. அப்போது திடீரென ஒரு யோசனையை நரி சொன்னது. வரிக்குதிரையின் வாலில் இருந்து வெள்ளை ரோமங்களை எடுத்து அதை வைத்துத் தைக்கலாம்.

அற்புதமான யோசனை என எல்லாம் மகிழ்ந்தன. வரிக்குதிரை வரவழைக்கப்பட்டு வெள்ளை முடிகள் எடுக்கப்பட்டன. அது நிலாவின் நிறத்திற்கேற்ப இருந்தது. ரோமத்தை ஊசியில் கோத்து நாகப்பாம்பு நிலாவைத் தைக்க ஆரம்பித்தது.

திடீரென ஒரு பக்கம் ஏதோ ஒரு விசும்பல். ஒரு குள்ளநரி அழுதுகொண்டு இருந்தது. “என்னப்பா, விஷயம்” என விசாரித்தால்... “நிலாவுக்கு வலிக்குமில்ல” என்றது.

“அடேய், சும்மா இருடா!” எனச் சிரித்துக் கொண்டே நாகப்பாம்பு சொல்ல, கூடி இருந்த எல்லாம் சிரித்தன. தைத்து முடிப்பதற்குள் விடிந்துவிட்டது.

“அப்புறம்?” என்றது நாகப்பாம்பு.

“ஆமா, அப்புறம்...?’’

“ஆமால்ல! அப்புறம்?” என எல்லோருக்கும் அடுத்து என்ன செய்வது என குழப்பம் வந்தது. நிலாவை வானத்திற்கு அனுப்ப வேண்டுமே. எப்படி அனுப்புவது?

“மலை மேல உருட்டிக்கிட்டுப் போய் தூக்கிப் போடலாமா?”

“அது உருண்டு கீழே வந்துடுமே! அதுவுமில்லாம அழுக்காகிடுமே!”

“நிலா கிட்ட போய், “மேல போ”ன்னு சொன்னா போயிடாதா?”

“அடேய்...!’’

இப்படியாக நிறைய ஆலோசனைகள். அதற்குள் நன்றாக விடிந்துவிட்டது. சூரியன் மேலே வருவதற்குள் நிலாவை வானத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்ற பரபரப்பு வேறு. கடைசியாக, கரடியின் உதவியை நாடினார்கள். அந்தக் காட்டில் அந்தக் கரடி மட்டுமே கால்பந்து வீரர். ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வேகமாக ஓடிவந்து அதே வேகத்தில் நிலாவை உதைக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடுவது வேகத்தை அதிகரிக்க. ஓடி வரவர காடே உற்சாகமூட்டியது... வா.. வா... வா... எனக் கத்தின. கரடி ஓடிவந்து ‘சப்’ என்று உதைக்க, அது வானில் பறந்து பறந்து பறந்து மேலே சென்று ஒட்டிக்கொண்டது. “ஹே” என காடே மகிழ்ந்தது.

ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் அந்தக் காட்டுக்கு மட்டும் கூடுதல் வெளிச்சத்தை நிலா பாய்ச்சும்.

(கதை கேட்டாச்சா... நல்லா இருந்தா? மகிழ்ச்சியா சிரிச்சிட்டு... நிலா என்றழைக்கப்படும் பூமியின் துணைக்கோள் பற்றிய அறிவியல் உண்மைகளை உங்கள் நண்பர்களுடன் விவாதித்து அறிந்து-கொள்ளுங்கள்.)

Share