Home முந்தைய இதழ்கள் 2022 பிப்ரவரி 2022 பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மனிதனுக்குள் துடிக்கும் பன்றி இதயம்!
செவ்வாய், 06 டிசம்பர் 2022
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...! மனிதனுக்குள் துடிக்கும் பன்றி இதயம்!
Print E-mail

அறிவியலின் வியத்தகு சாதனை!

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,

இந்தக் கொடுந் தொற்றுக் காலத்தில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதால் நலமாகவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் நிலைமை மாறுதல் அடைந்து கொண்டேயிருக்கிறது அல்லவா? வெகு நாட்கள் கழித்து உங்களுக்குப் பள்ளி திறந்தது. அதை முழுமையாக அனுபவிப்பதற்குள் ஒமைக்ரான் என்னும் புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் கல்வி நிறுவனங்களை அடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் இந்த தொற்று பெரும் அளவில் உயிர் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பது கொஞ்சம் நிம்மதி தரக் கூடியது.

வைரசின் வேகமும் வீரியமும் குறைந்திருக்கிறது என்பதை விட, உயிர்ப்பலி குறைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம், இதுவரை உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளே! ஆங்காங்கு சில உயிரிழப்புகள் மேற்சொன்ன தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதோருக்கே ஏற்பட்டுள்ளது. உங்களுக்கும் கூட தடுப்பூசிகளை பள்ளிகளிலேயே செலுத்தும் பணி தொடங்கி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததே! நீங்களெல்லாம் தவிர்க்காமல் போட்டுக் கொண்டீர்கள் தானே!

ஏனெனில், மருத்துவ அறிவியல் நம்மைப் போன்ற மனித உயிர்களைக் காக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. தொற்றிலிருந்து மட்டுமல்லஞ் பல்வேறு நோய்களிலிருந்தும், முதுமையினால் ஏற்படும் உறுப்பு செயலிழப்புகளிலிருந்தும் மனித குலத்தை மருத்துவம் தான் காப்பாற்ற முனைகிறது.

இவ் வாண்டுத் தொடக்கத்திலேயே நமக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி தந்த செய்தி ஒன்றை நீங்கள் படித்திருப்பீர்களே! மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி வெற்றிகண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். அறிவியலின் வியத்தகு வளர்ச்சி எத்தனை பெரிய சாதனையைச் செய்திருக்கிறது பார்த்தீர்களா?

ஏன், மனிதர்களுக்கு மனித உறுப்புகளைப் பொருத்தாமல், வேறு உயிரினங்களின் உறுப்புகளைப் பொருத்த வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். இந்தியாவில் மட்டும் இதயச் செயலிழப்பால் 50 ஆயிரம் பேர் அவதிப்படுகின்றனர். இவர்களில் 15 பேருக்குத்தான் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலையில், 6 ஆயிரம் பேருக்குத்தான் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கிறது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை ஆண்டுக்கு 30 ஆயிரம் பேருக்குத் தேவைப்படுகிறது. ஆனால், 1,500 பேருக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது. காரணம் உறுப்புகள் பற்றாக்குறை தான்.

இரண்டு உறுப்பாக இருக்கும் சிறுநீரகங்களை நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கிட முன்வருவது சிலராலே தான் முடியும். விழிக் கொடை செய்ய முன்வந்து எழுதிவைத்திருப்போர் பட்டியலை விட, இன்னும் விழிக்கொடை தேவைப்படுவோரின் பட்டியல்தானே பெரிதாக இருக்கிறது. இறந்தபின்னும் நம் விழி இந்த உலகத்தைப் பார்க்கும் அரிய வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறாலாமா?

ஆனால், இயல்பாக இறந்தவரிடமிருந்து இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பிறருக்குப் பயன்படாது. விபத்து போன்ற காரணங்களால் மூளைச் சாவு ஏற்பட்டு இறந்துபோகிறார்கள் அல்லவா? அவர்களின் உடலுறுப்புகள் தான் தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் இறந்த பின்னும் தங்கள் உடலுறுப்புகளால் வாழ்கிறார்கள் என்று தானே பொருள். (மருத்துவ ஆய்வுகளுக்கு இறந்தபிறகு நம் உடலைக் கொடுப்பது வேறு.)

எனவே, உறுப்புகளைக் கொடையாகப் பெற்று பயன்படுத்திக் கொள்ளும் அளவு அறிவியல் வளர்ந்துவிட்டபோதும், அதற்கான உறுப்புகள் கிடைக்காது போவதால், அடுத்து என்ன என்று யோசித்ததில் தான், மனிதர்களுக்குப்  பொருந்தக் கூடிய பிற உயிரினங்கள் மீது கவனம் சென்றது.

‘குரங்கு, சிம்பன்சி போன்ற உயிரினங்கள் நமது நெருங்கிய உறவினர்கள் தானே’ என்று அதன் உறுப்புகளை எடுத்து கடந்த காலங்களில் முயற்சித்துப் பார்த்தபோது சில தோல்விகள் ஏற்பட்டுவிட்டன. அதிலிருந்து பாடம் கற்று அறிவியல் முன்னேறியிருக்கிறது.

வெளியிலிருந்து வரும் நமக்குப் பொருந்தாத எதுவொன்றையும் நம் உடல் ஏற்றுக் கொள்ளாது. நமக்குப் பொருந்தாத தூசி வந்தாலே, தும்மல் மூலம் அதை வெளியேற்றுகிறதே நம் உடல்! இது தான் இயற்கை மெக்கானிசம். உறுப்புகளும் அப்படித் தான். இது நமக்குத் தொடர்பில்லாதது என்று உடலுக்குத் தெரிந்தால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கும்.

வேறு உயிரினங்களின் உறுப்புகள் மனிதர்-களுக்குப் பொருத்தி சோதிக்கப்பட்டபோது, அப்படித்தான் உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தது. பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திப் பார்த்தபோது, அதன் செல்களில் சர்க்கரை வடிவில் உள்ள ஆல்பா-1 என்ற நொதி மனிதர்களுக்குப் பொருந்தவில்லை. அதைக் கண்டறிந்து அதன் மரபணுவில் மாற்றம் செய்து பிறகு அதைப் பயன்படுத்தினார்கள்.

இப்போது பன்றியின் இதயம். அதிலும் சில மரபணுக்களை சீராக்கி, மாற்றியமைத்து, மனிதர்களுக்குத் தேவையான சில மரபணுக் கூறுகளைச் சேர்த்து, அதை ஒரு பன்றிக்குச் செலுத்தி, கருவாக்கி, அதன் மூலம் உருவாக்கப்பட்ட பன்றியின் இதயத்தைத் தான் இப்போது வெற்றிகரமாக அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் என்பவருக்குப் பொருத்தியிருக்கிறார் மருத்துவர் கிரிஃபித். அதன் பிறகு பன்றியின் சிறுநீரகம் பொருத்தும் மற்றொரு முயற்சியும் வெற்றி பெற்றிருக்கிறது.

அறிவியல் இப்படி நாளும் முன்னேறிக் கொண்டிருக்கும்போது தான், இங்கு நம் நாட்டில் இன்னும் சிலர் யானைத் தலையை மனிதக் குழந்தைக்குப் பொருத்தியதில் நாங்கள் தான் முன்னோடி என்று அறிவியல் மாநாட்டிலேயே கதையளந்து கொண்டிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்றவர்களெல்லாம் அதைக் கண்டித்தார்கள்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று புருடாக்களை அள்ளிவிடாமல், அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து வெற்றிபெற முடியும் என்பதைத் தானே மருத்துவர் கிரிஃபித்தின் இந்த சாதனை நமக்கு உணர்த்துகிறது.

நமது பெரியார் பிஞ்சுகளும் இத்தகைய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாகி மனித சமுதாயத்தைக் காப்பீர்கள் என்ற தாத்தாவின் நம்பிக்கையை நிறைவேற்றுவீர்கள் தானே!

இப்படிக்கு,

உங்கள் பிரியமுள்ள

ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

Share