Home முந்தைய இதழ்கள் 2022 பிப்ரவரி 2022 பரிசு வேண்டுமா? - மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய விண்வெளிப் பயணம்
செவ்வாய், 06 டிசம்பர் 2022
பரிசு வேண்டுமா? - மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய விண்வெளிப் பயணம்
Print E-mail

அபி

நல்ல வெளிர் வானிலையோடு இருந்தது மெர்ரிட் தீவு (Merritt Island). 3.2.2019 அன்று, விரிந்த கண்களுடன், ஃப்ளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் (Kennedy Space Centre) நானும் என் நண்பர்களும் நின்றது இப்போதும் கண்ணுக்குள் இருக்கிறது.

அந்த நாளை நினைக்கும்போது, விண்வெளி வீரர்கள் ஏவுகணையில் விண்வெளிக்குச் செல்வதுபோல் வடிவமைக்கப்பட்டு இருந்த மாதிரி ஓட்டத்தில் (Ride) சென்றதை எப்படி மறக்க முடியும்? திரையரங்கு போன்ற ஓர் அறையில்  அந்த ‘மாதிரி ஏவுகணைப் பயணத்திற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு இருந்த இருக்கைகளில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்ததும், ஏவுகணை கிளம்புவதற்கான கவுன்ட்டவுன் (Count down) ஆரம்பித்தது. உடனே, வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது. கவுன்ட்டவுன் சுழியத்திற்கு (zero) வந்ததும், ‘சடார்’ என்று இருக்கை 45 டிகிரிக்கு மாறி, ஏவுகணையில் பறப்பது போல் ஆடியது. கன்னங்களைப் பின்பக்கம் இழுத்துப் பிடித்துக் கொண்டதைப் போல் உணர்வு. ஓரிடத்தில் தான் இருக்கிறோம் என்று தெரிந்திருந்தாலும், ஏவுகணையின் வேகத்தில் பறந்தது போல் இருந்தது. இன்று நினைத்தாலும், வயிற்றில் பட்டாம்பூச்சிதான்! இந்த மாதிரி ஓட்டத்தில் (ride) நாங்கள் வெறும் இரண்டு நிமிடங்கள்தான் இருந்தோம். அதற்கே எங்களுக்கு இப்படி என்றால், விண்வெளி வீரர்களோ, பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிப் பயணம் செய்யும்போது, அவர்கள் மனதில் என்னென்னவோ தோன்றி-யிருக்குமல்லவா!

இந்த ‘மாதிரி ஏவுகணை ஓட்டத்’திற்குச் செல்வதற்கு சில நாள்களுக்கு முன், இந்தியாவுக்கும் ஃப்ளோரிடாவுக்கும் இடையில் இருந்த தட்பவெப்பநிலை மாற்றத்தால், என்னுடன் வந்த நண்பர்களுள் ஒருவருக்குச் சளி பிடித்திருந்தது. இந்தச் சிறு சுற்றுப்புற மாற்றத்திற்கே, நமது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்படியென்றால், புவியீர்ப்பு விசையில் இருந்து பழகிய விண்வெளி வீரர்களின் உடல் பல நாள்கள் நுண்ணீர்ப்பு விசையில் (Microgravity) இருந்தபோது என்ன என்ன மாற்றங்களை அடைந்திருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை அறிய இரட்டையர்களான விண்வெளி வீரர்கள் ஸ்காட் கெல்லியும் (Scott Kelly) மார்க் கெல்லியும் (Mark Kelly) உதவியிருக்கிறார்கள்.

பொதுவாகவே இரட்டையர்களுக்கு, மரபணுக்கள் ஓரளவு ஒன்றாக இருக்கும். அதனால், அவர்களுள் ஒருவரை வேறு ஒரு சுற்றுச்சூழலில் வைத்து அவரின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தை மற்றொருவரின் மரபணுவோடு ஒப்பிட்டு சுலபமாக ஆய்வு செய்ய முடியும். இதன் அடிப்படையில்தான் விண்வெளியில் பல நாள்கள் இருப்பதால் ஏற்படும் உடல் மாற்றங்களை ஆய்வுசெய்ய, தன்னையே ஆய்வுக்குட்படுத்திக் கொள்ள ஸ்காட் கெல்லி முன்வந்தார். அவரின் இரட்டையரான விண்வெளி வீரர் மார்க் கெல்லி, பூமியில் தன் மரபணுவுடன் ஸ்காட் கெல்லியின் மரபணுவை ஒப்பிட்டுப் பார்க்க உதவினார்.

மார்ச் 27, 2015இல் தொடங்கிய ஸ்காட் கெல்லியின் விண்வெளிப் பயணம், 340 நாள்கள் நீடித்து, மார்ச் 2, 2016 அன்று அவர் பூமியை அடைந்தபோது நிறைவு பெற்றது. ஸ்காட்கெல்லி விண்வெளியில் இருந்த நாள்களில், அவரது இரத்தம், உடற்கழிவுகளின் மாதிரிகள் போன்றவை பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குப் பொருள்கள் கொண்டு வரும் விண்கலத்தின் (Space Shuttle) மூலம் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

பூமியில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள பத்து குழுக்கள் அமைக்கப்பட்டன. விண்வெளிப் பயணத்திற்கு முன்பும் பின்பும் செய்யப்பட்ட ஸ்காட் கெல்லியின் உடற்பரிசோதனையிலிருந்து பல மாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆய்வின்போது ஆய்வாளர்கள் எதிர்பார்த்தது போலவே, அவரது மரபணுவில் மாற்றங்கள் இருந்தன. அவரது நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகளவில் வேலை செய்துள்ளது. அவரது விழித்திரையும் கழுத்துக்குருதி நாளமும் தடியாகியிருந்தன. பயணத்திற்குப் பிறகு அவரது தர்க்க அறிவும் நினைவாற்றலும் சற்று குறைந்துள்ளன.

மரபணு குறித்த ஆய்வில், ஸ்காட் கெல்லியின் மரபணுக்களில், சுமார் 1000க்கும் மேற்பட்ட மரபணுக்களில் மேல் மரபியல் கூறு (Epigenetic tag) இருந்துள்ளது. இந்த மேல் மரபியல், சுற்றுச் சூழல் மாற்றத்தால் ஏற்படுகிறது. இது மரபணுவின் செயல்பாட்டை மாற்றக்கூடியது. அதோடு, நிறப்புரி எனப்படும் குரோமோசோம்களின் (Chromosome) நுனியில் இருக்கும் முனைக்கூறின் (Jelomere) நீளத்தைக் குறைக்கும் அல்லது அதிகப்படுத்தும் திறன் வாய்ந்தது.

இந்த முனைக்கூறின் நீளம் குறைவதால், உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.  ஸ்காட் கெல்லியின் உடம்பில் இருக்கும் முனைக்கூறின் நீளம் குறையும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவை 14.5 சதவிகிதம் வளர்ந்திருந்தன. ஸ்காட் கெல்லி பூமிக்கு வந்த 48 மணி நேரத்தில், ஒரு சில முனைக் கூறுகளைத் தவிர, பொதுவாக முனைக்கூறுகள், விண்வெளிப் பயணத்திற்கு முன்பு இருந்த நீளத்தை அடைந்தன.

ஸ்காட் கெல்லியின் குரோமோசோம்களின் வடிவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. இதற்கு விண்வெளியில் இருக்கும் கதிர்வீச்சுதான் காரணம். இந்த வடிவ மாற்றத்தால், புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. புவிக்கு வந்த ஆறு மாதங்களில், அவரது மரபணுக்களில் சுமார் 91 சதவிகிதம் பயணத்திற்கு முன் இருந்த நிலையை அடைந்திருந்தன. ஆனால், அவரது பகுப்பாய்வுத்  திறன் (reasoning) குறைந்து இருந்தது. அத்துடன், அவரது நோய் எதிர்ப்பு மண்டலம், அதிக விழிப்புடனே இருந்தது.

ஸ்காட் கெல்லியின் மரபணுவில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும், பூமியின் காந்தப் புலத்திற்கு உள்ளேயே இருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் நடந்தது. இந்தக் காந்தப் புலத்தால், ஆபத்தான பல கதிர்வீச்சுகளில் இருந்து இவரின் மரபணுக்கள் காக்கப்பட்டன. ஆனால், இந்தக் காந்தப் புலத்தைத் தாண்டி வெளியே சென்றால்?... அத்துடன், இந்த அனைத்து ஆய்வுகளும் ஸ்காட் கெல்லி எனும் ஒரே ஒரு மனிதரை வைத்துத்தான் நடத்தப்பட்டது. இவை உண்மையிலேயே விண்வெளியில் பல நாள்கள் இருந்ததால்தான் ஏற்பட்டதா? விண்வெளியில் இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் இதே மாற்றங்கள்தான் நிகழுமா? என்பவையெல்லாம் அடுத்தடுத்த கேள்விகள்.

என்னய்யா இது, புதுக் குண்டா இருக்கு? உண்மையிலேயே இது புதுக் குண்டுதான். இதற்கான பதில்களை அறிய ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அதெல்லாம் சரி, இந்த ஆய்வுகள் எதுக்கு?

வேறு எதற்கு? மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டு பல ஆய்வுகளை நடத்தத்தான். அதுவும், பூமியின் காந்தப் புலத்திற்கு வெளியே சென்று! சரி, இந்தக் கட்டுரையை ஒரு கேள்வியோடு முடிக்கலாமா?

ஒரு விண்வெளி வீரர் செவ்வாய்க் கோளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு வர சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

என்ன, பதிலுக்குக் காத்துக்கிட்டு இருக்கீங்களா? நான் சொல்ல மாட்டேனே...

Share