Home முந்தைய இதழ்கள் 2022 பிப்ரவரி 2022 கோமாளி மாமா-23 : புரியவைப்போம்!
செவ்வாய், 06 டிசம்பர் 2022
கோமாளி மாமா-23 : புரியவைப்போம்!
Print E-mail

ஓவியம், கதை: மு.கலைவாணன்


கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் சரியான நேரத்திற்கு தோட்டத்திற்கு வந்து-விட்டனர். அவர்கள் பின்னாலேயே கோமாளி மாமாவும் வந்து சேர்ந்தார்.

தன் கையில் சுருட்டி வைத்திருந்த தாளைப் பிரித்து மூவரிடமும் காட்டி இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா? என்று கேட்டார்.

வேகமாக ஓடும் ஒரு குதிரையின் மீது கையில் வாளேந்தி போர்க்-களத்தில் இருக்கும் ஒரு வீரப் பெண்மணியின் படம் அது.

அதைப் பார்த்ததும் உடனே “ஜான்சிராணி” என்றான் செல்வம்.

“எப்படிடா, படத்தைப் பாத்த உடனே ஜான்சி ராணின்னு கண்டு-புடிச்சே!’’ என வியந்து கேட்டான் மாணிக்கம்.

“கையிலே கத்தி வச்சுக்கிட்டு ஒரு அம்மா குதிரை மேலே போனாலே... அது ஜான்சி ராணிதான்னு செல்வம் முடிவு பண்ணிட்டான்’’ என கேலியாகச் சிரித்தாள் மல்லிகா.

“ஏம்பா... நம்ம நாட்டுல யாருமே இப்படி குதிரை மேலே ஏறி போருக்குப் போனதில்லியா? நல்லா பாத்து பொறுமையா சொல்லுங்களேன் பாப்போம்?’’ என்றார் கோமாளி.

“மாமா! இது வீரமங்கை வேலுநாச்சியார் படம் தானே...’’ என்றான் மாணிக்கம்.

“நல்ல வேளை நீ கண்டு புடிச்சிட்டே... இவங்களைத் தெரியலேன்னு சொல்லிடுவீங் களோன்னு நெனச்சுட்டேன்’’ என்றார் கோமாளி.

“டேய்! மாணிக்கம் நீ எப்படி சரியா கண்டுபுடிச்சே?’’ என்று கேட்டாள் மல்லிகா.

“எங்க வீட்டுல இருக்கிற புத்தகத்திலே வேலு நாச்சியார் பத்தின புத்தகமும் இருக்கு. அதுலே இதுமாதிரி படம் பாத்திருக்கேன்’’ என்றான் மாணிக்கம்.

“நம்ம நாட்டுல சில பேருக்கு நமக்கு உண்மையா உழைச்சவங்க யாரு? உழைச்சிக்கிட்டு இருக்கிறவங்க யாரு? நாம இன்னைக்கு அடைஞ்சிருக்கிற வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் காரணமானவங்க யாருன்னு தெரியாமத்தானே இருக்கு.

சின்னக் குழந்தைகளான நீங்களும் அப்படி இருந்திடக் கூடாது. தேடிக் கண்டுபுடிச்சு தெரிஞ்சிக்க முயற்சி செய்யணும். நம்முடைய பழைய வரலாறு சரியா தெரிஞ்சாதான் புதிய வரலாற்றை சிறப்பா உங்களால உருவாக்க முடியும்’’ என்றார் கோமாளி மாமா.

“அது உண்மைதான் மாமா! வீரமங்கை வேலு நாச்சியார் பத்தி எங்களுக்குச் சொல்லுங்க மாமா!’’ என்றாள் மல்லிகா.

சொல்றேன்!

“வடநாட்டுல ஜான்சிராணி லெட்சுமி பாய் தோன்றுறதுக்கெல்லாம் முன்னாடியே நம்ம தமிழ்நாட்டுல தோன்றிய... மகத்தான வீர வரலாறு படைச்சவங்கதான் வேலு நாச்சி அம்மையார்.

வாணிப நோக்கத்தோட இந்தியாவுக்கு வந்து ஏகாதிபத்திய ஆட்சியை இந்த நாட்டுல நிறுவ முயற்சி செய்த ஆங்கிலேயர் படையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட முதல் தமிழ்ப் பெண்மணிதான் வேலுநாச்சியார்.

1730ஆம் ஆண்டு இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதிக்கும், சக்கந்தி-_ங்கிற ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியாருக்கும் பிறந்த பெண் குழந்தைதான் வேலு நாச்சியார்.

அரச குடும்பத்தில் பிறந்த வேலு நாச்சியாருக்கு போர்ப் பயிற்சியும் கொடுத்து வளர்த்தாரு... அப்பா சேதுபதி. இது மட்டுமில்லே... வாள் வீச்சு, குதிரை ஏற்றம், சிலம்பம், ‘வளரி’ என்னும் ஓர் ஆயுதத்தைக் கையாளும் முறைகளையும் கத்துக்கிட்டு... இளம் வயதிலேயே திறமையான பெண்ணா வளந்தாங்க.

மலையாளம், கன்னடம், தெலுங்கு, வடமொழி, உருது, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள்லேயும் தேர்ச்சி பெற்று விளங்குனாங்க.

பிற மொழிகள்ல மட்டுமில்ல, தன் தாய்மொழியான தமிழ் மொழியிலேயும் இலக்கணம், இலக்கியம் படிச்சு தன்னுடைய பதினாறு வயதிலேயே சிறந்த புலமை உள்ளவங்களா இருந்தாங்க.

1746ஆம் ஆண்டு முத்துவடுகநாதரைத் திருமணம் செய்துக்கிட்டு சிவகங்கையின் பட்டத்து ராணியா ஆனாங்க. அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை ஒத்துழைப்போடு முத்துவடுகநாதரின் ஆட்சிக்கு உதவியா பல ஆலோசனைகளைச் சொன்னாங்க.

தாய்நாட்டுப் பற்று கொண்ட வேலுநாச்சியார் மக்கள் நலனிலே மிகுந்த அக்கறை கொண்டிருந்தாங்க.

மன்னர் முத்துவடுகநாதர் காலகட்டத்தில ஆர்க்காடு நவாப்புக்கு கப்பம் கட்ட மறுத்தார். 1762ஆம் ஆண்டு ஒரு நாள் சிவகங்கை அரண்மனைக்கு வந்த கவர்னர் வாட்டீ காட், வரி கேட்டு ஆங்கிலத்திலே பேசியிருக்கான்.

மன்னர் முத்துவடுகநாதருக்கு ஆங்கிலம் தெரியாதுங்கிறதையும் சொல்லி, கேலி செய்து சிரிச்சிருக்கான்.

அந்த நேரம் அங்கிருந்த வேலுநாச்சியார் கோபமடைஞ்சு ‘உன்னோட மொழி என்னுடைய கணவருக்குத் தெரியாதுங்கிறதுக்காக நீ அலட்சியமாப் பேசுனது எனக்குத் தெரியும். அண்டிப் பிழைக்க வந்த நீதான் எங்க மொழியைக் கத்துக்கிட்டு வரணும்னு’ கடுமையா ஆங்கிலத்திலே பேசுனதோட... மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது மொழியிலேயும் சொல்றேன்னு அஞ்சு-மொழியிலேயும் பேசி மிரட்டிட்டாங்க. அதைக் கேட்ட ஆங்கிலேய அதிகாரி மிரண்டு போயி எழுந்து நின்னான். ‘வரி தர முடியாது... வரி கேட்டு யாரும் வரவேண்டாம்!’ என்றும் உறுதியாச் சொல்லி அனுப்பிட்டாங்க வேலு நாச்சியார்.

இவரது வீரத்தையும் பன்மொழி அறிவையும் அரசர், அமைச்சர் எல்லாரும் அப்பதான் தெரிஞ்சு வியந்து போயிட்டாங்க!

வேலு நாச்சியாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வெள்ளச்சி நாச்சியார் எனப் பெயர் சூட்டப்பட்டது.

வளர்ந்து நின்ற சிவகங்கைச் சீமையின் வலிமை ஆங்கிலேயர் மற்றும் நவாப்பின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. அதனாலே 1772இல் சிவகங்கை மீது எல்லாப் பக்கத்திலிருந்தும் ஆங்கிலேயர் படை எடுத்துத் தாக்கினாங்க.

மன்னர் முத்துவடுகநாதர் காளையார்கோவிலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

வேலுநாச்சியார் தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் உதவியோடு திண்டுக்கல்லுக்கு பக்கத்திலே இருந்த விருப்பாட்சி பாளையத்துக்கு தப்பிச்சுப் போயிட்டாங்க.

இந்தக் காலகட்டத்தில இரண்டு பெண்கள் வேலு நாச்சியாருக்குப் பேருதவியா இருந்தாங்க. ஒருத்தங்க உடையாள். இன்னொருத்தங்க குயிலி.

வேலு நாச்சியார் எங்கெங்கே போறாங்கன்னு சில கயவர்கள் மூலமா தெரிஞ்சுக்கிட்டு பின்தொடர்ந்து போனாங்க ஆங்கிலேயப் படை.

காட்டு வழியில தனது குதிரையில் தப்பிச்சுப் போற வேலு நாச்சியார் அரியாக்குறிச்சி அய்யனார் கோயில் பக்கத்திலே மாடு மேய்க்கும் சிறுமியான உடையாளைச் சந்திச்சாங்க. அரசிக்கு நேர்ந்த ஆபத்தை நினைச்சு உடையாள் அழுதாள். அவளை சமாதானப்படுத்துனாங்க வேலுநாச்சியார். அயோக்கியர் இருந்த திசையைத் தவிர்த்து வேறு திசையில் செல்லும்படி கேட்டுக் கொண்டாள் உடையாள். அதன்படியே பயணப் பட்டார் வேலுநாச்சியார்.

கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த ஆங்கிலப்படை வீரர்கள் உடையாளை மிரட்டி “வேலு நாச்சியாரைப் பார்த்தாயா?’’ எனக் கேட்டனர். பதிலுக்கு அவள், “பார்த்தேன்..’’. என்று சொல்ல... எந்தப் பக்கம் போனாள் என்று கேட்க... “சொல்ல முடியாது’’ என்று துணிவோடு சொன்னாள் உடையாள். அடித்தும் உதைத்தும் கேட்டுக்கூட முடியாது என்று மறுக்கவே உடையாளின் தலையை வெட்டிச் சாய்த்தனர் ஆங்கிலேய வீரர்கள்.

இதையெல்லாம் அறியாத வேலு நாச்சியார் தப்பிச் சென்று ஆங்கிலேய எதிர்ப்பாளரான மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவி கேட்டு கடிதம் எழுதினார். பதில் வராததால் திண்டுக்கல் கோட்டையில் மன்னர் ஹைதர் அலியை நேரில் சந்தித்து தமது நிலையை விளக்கி உதவி கேட்டார். அவர் பேசிய உருது மொழியின் செம்மையையும், உச்சரிப்பையும் கண்டு மகிழ்ந்த ஹைதர் அலி உதவி செய்வதாக உறுதியளித்தார். தந்தையிடம் தான் கற்றுக் கொண்ட உருதுமொழி தக்க சமயத்தில் உதவியதை எண்ணி மகிழ்ந்தார்.

நாட்டை இழந்து எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

உடன் இருந்த சிலம்ப வாத்தியார் வெற்றிவேலின் துரோகச் செயலை வேலு நாச்சியாரின் பணிப் பெண்ணாக இருந்த குயிலி என்ற பதினான்கு வயது நிரம்பிய பெண் கண்டுபிடித்தாள்.

சிவகங்கையில் இருந்த கயவன் மல்லாரியானுக்கு சிலம்ப வாத்தியார் வெற்றிவேல் எழுதிய கடிதத்தை தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என பொய் சொல்லிப் பெற்றுக் கொண்ட குயிலி, அதைப் படித்துப் பார்த்தாள். காட்டிக் கொடுக்க எழுதப்பட்ட கடிதம் என்பதால் கோபமுற்ற குயிலி சிலம்ப வாத்தியாரை குத்துக் கத்தியால் குத்தி கொலை செய்து விவிட்டார்.

1780ஆம் ஆண்டு ஹைதர் அலி தன் மகன் திப்பு சுல்தானின் தலைமையில் பன்னிரண்டு பீரங்கிகள் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் உதவிப் படையை அனுப்பி உதவினார்.

கோச்சடைப் போர், சிலைமான்போர், மானாமதுரைப் போர், சிவகங்கைப் போர் என பல கட்டப் போர்கள் நடைபெற்றன.

குயிலி வயதான கிழவியாக மாறுவேடம் போட்டு, ஊருக்குள் சென்று உளவறிந்து தன் உடல் முழுதும் எண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்து அழித்து முதல் தற்கொலைப்படை மங்கையானார்.

போர்க்களத்தில் இரு கரங்களிலும் வாளேந்தி எதிரிகளை வேட்டையாடி வெட்டிச் சாய்த்து முன்னேறிய வேலுநாச்சியார் தளபதி பான்சோரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தப்பித்து தூண்களுக்குப் பின்னால் மறைந்து மறைந்து அவனுக்குப் போக்குக் காட்டினார். பான்சோரின் துப்பாக்கி குண்டுகள் தீர்ந்துவிட்டன. போர்வாளை எடுத்தான் பான்சோர்.

இதற்காகவே காத்திருந்த வேலுநாச்சியார், ‘உன்னைப் போன்ற கோழையை இரண்டு கரத்திலும் ஆயுதம் ஏந்தி நான் எதிர்கொள்வது இந்த ஆயுதங்களுக்கு இழுக்கு’ என்று தனது இடது கரத்திலிருந்த வாளைக் கொண்டே போரிட்டார். சில மணித்துளிகளில் கீழே வீழ்ந்தான் பான்சோர்.

“உன்னைக் கொன்று பழி தீர்க்க முடியும். எனக்கு உன்னைவிட, என் கணவரைவிட, என் குடும்பத்தைவிட என் நாடும் என் நாட்டு மக்களும்தான் முக்கியம். ஆனால் இப்போது உன்னை உயிரோடு விடுகிறேன்” என அவனுக்குப் புரியும்படி ஆங்கிலத்தில் கூறினார். அவனும் இனி சிவகங்கைப் பக்கம் திரும்பிப் பார்க்கவே மாட்டேன் என்று புதுக்கோட்டைக்கு ஓடினான்.

அதன்பின் வேலு நாச்சியார் முடிசூட்டிக்கொண்டு ஒன்பது ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். பல சாதனைகள் செய்தார். 1796ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் திண்டுக்கல் கோட்டையில் இறந்தார்.

வரலாற்றில் ஒரு வீரமங்கை பல இழப்புகளைச் சந்தித்துப் போராடி நாட்டுக்காகச் செய்த தியாகம் யாராலும் மறக்க முடியாதது” என்று சொல்லி முடித்தார் கோமாளி மாமா.

“மாமா, வேலுநாச்சியாரைத் தெரியலேன்னு யாராவது சொன்னா இனி நாங்க எடுத்துச் சொல்லிப் புரியவைப்போம்’’ என்றாள் மல்லிகா.

- மீண்டும் வருவார் கோமாளி

Share