Home முந்தைய இதழ்கள் 2022 மார்ச் 2022 பிஞ்சுகளே...பிஞ்சுகளே...
செவ்வாய், 28 மார்ச் 2023
பிஞ்சுகளே...பிஞ்சுகளே...
Print E-mail

கதைக் குகைக்குள் பயணிப்போமா!


பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் திறந்துவிட்ட நிலையில், வகுப்புகளுக்குச் சென்று ‘ஜாலியாய்’ உங்க நண்பர்களை _ ஆசிரியர்களையெல்லாம் சந்தித்து, வகுப்புப் பாடங்களைக் கேட்டும், படித்தும் நன்றாக அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா!

இந்தக் ‘கோவிட்’ என்ற கொரோனா தொற்றுதான் உங்கள் கல்வி வாழ்க்கையை எவ்வளவு சூறையாடிற்று பார்த்தீர்களா? உம்.... விட்டுத் தள்ளுங்கள்!

அதுக்காக கவலைப்படாதீங்க, அதுவும் ஒரு புதுசான அனுபவ வகுப்புதான்னு நினைச்சுக்கங்க!

வீட்டிலே இருந்தபடி படிப்பது, வீட்டுக்குள்ளே நம்ம நேரத்தை ‘ஆன்லைனில்’ படிப்பதற்கு ஒரு பகுதி நேரம், இன்னும் மற்றபடி வீட்டில் உள்ளவர்களுக்கு உதவுவது, வீட்டில் உள்ள அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், அக்கா எனப் பல பேருடன் உரையாடுவது. இப்படியும் நம் மாலை நேரத்தை பலவகையிலும் பயன்படுகிற மாதிரி செலவழிக்கக் ‘கத்துகிட்ட’ அனுபவம்தானே அது! அதுக்காக மகிழ்ச்சி அடைவோமல்லவா!

இந்த இதழில் உங்களுக்கு ஓர் அருமையான தகவலைச் சொல்லப் போறேன். உங்களை மாதிரி குழந்தைப் பிள்ளைகளுக்கு _ பிஞ்சுகளுக்கு நல்ல நல்ல கதையாய்ச் சொல்லும் எழுத்தாளர் அண்ணன் ஒருத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?

அவரு எழுதிய ஒரு புதுமையான கதைத் தொகுப்பு புத்தகம் படித்தேன்.

“அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’’ என்ற தலைப்பில் மு.முருகேஷ் அண்ணன் உங்களுக்காகவே மிக அருமையாக எழுதியுள்ளார். கதைகள் மொத்தம் பதினாறு.

‘கதைக் குகை’க்குள்ளே உங்களை அழைச்சுகிட்டுப் போகிற விதமாக கதை சொல்றாரு.

அருமைன்னா அருமை!

அப்படி ஒரு தனிப் பெருமை!

தாத்தா அதைப் படிச்சுட்டு ரொம்ப ரொம்ப சுவைச்சேன், அசை போட்டுக்கொண்டே இருந்தேன். ஆமா, நிஜமா!

இந்தக் கதைக் குகைக்குள்ளே நம்மை அழைச்சுட்டுப்போன அந்த எழுத்தாளர் அண்ணனுக்கு, 2021ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் “பால சாகித்திய புரஸ்கார்” விருதினைத் தந்துள்ளனர், இந்த “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’’ என்ற தகுதியானவருக்கு தகுதியான விருதுதான்.

கதைப் புத்தகத்தை எடுத்தேன், படித்தேன். படித் _ தேனாகச் சுவைக்கிறது. தேன்கூட தெவிட்டும்ல; இது தெவிட்டல!

அவசியம் நீங்க எல்லோரும் அந்தப் புத்தகத்தை வாங்கி, கட்டாயம் படிச்சீங்கன்னா கதையோட நல்ல கருத்தையும் உள்வாங்கலாம்!

மகளுக்கு அம்மா கதை சொன்னதற்குப் பதில் அம்மாவுக்கு மகள் கதை சொல்லும் அளவுக்கு குழந்தைகளாகிய உங்கள் அறிவு வளர்ந்தோங்கியுள்ள காலம் இந்தக் காலம். உண்மையான வளர்ச்சிக் காலம் என்பதையும் நம் எல்லார் மனதிலும் அந்த முருகேஷ் அண்ணன் பதிய வைக்கிறார்!

‘என்ன தாத்தா, அந்தப் புத்தகத்தைத் தேடி, வாங்கிப் படிக்க இன்னும் சில நாள் ஆகும். அதுவரை எங்களால் பொறுத்திருக்க முடியுமா? முடியாதே! அதில் ஒரு கதையையாவது எங்களுக்கு நீங்க படிச்சுக்காட்டுங்க தாத்தா என்றுதானே கேட்கிறீங்க? ... சரி சரி, உங்களை ஏமாத்தக் கூடாதல்லவா? சரி. படிக்கிறேன். கேளுங்க. கேட்ட பிறகு புத்தகம் வாங்கிப் படிச்சு, கதை கேட்கும் தம்பி, தங்கை, அம்மா, அண்ணன், அக்கா எல்லாருக்கும் இதுபத்திச் சொல்லணும், தெரியுமா?

‘கட்டை விரலின் கதை’ன்னு ஒரு கதை சொல்லிருக்காரு. அடாடா, என்ன நேர்த்தி, அபாரம்! சரி, அம்மா கதையை அவர் அனுமதியோடு படிக்கிறேன்.

புத்தகம் வாங்கிப் படித்து மற்ற கதைகளைப் பற்றியும் எனக்கு எழுதுவீங்களா?

இப்படிக்கு,

உங்கள் பிரியமுள்ள

ஆசிரியர் தாத்தா,

கி.வீரமணி

 

“அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’


இரவு பத்து மணி.

இன்னமும் தூங்காமல் கதை சொல்லச் சொல்லி அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தாள் கவின்குட்டி. இரண்டாம் வகுப்புப் படிக்கும் சுட்டிப்பெண்.

சாப்பிட வேண்டும், தூங்க வேண்டுமென்றால் அவளுக்குக் கதை சொல்லியாக வேண்டும். கதை கேட்காமல் அவளுக்குப் பொழுதே விடியாது. பொழுதும் முடியாது.

கவின் குழந்தையாய் இருக்கும்போதே அம்மா அவள் பாட்டிற்கு ஏதாவது சொல்லிக்கொண்டே கவினுக்கு சாப்பாடு ஊட்டுவாள். கவினும் கதை கேட்பதைப்போல, 'உம்... உம்ம்ம்....' என்றபடி தலையாட்டிக்கொண்டே சாப்பிட்டு விடுவாள்.

விவரம் தெரிந்த பிறகு, “அம்மா... எனக்கு நீ கதை சொன்னாத்தான் சாப்பிடுவேன்..!’’ என்று பிடிவாதம் செய்ய ஆரம்பித்து விட்டாள். அம்மாவும் சலிக்காமல், ஏதாவது ஒரு கதையை கவினுக்குச் சொல்லி வந்தாள்.

அம்மாவுக்கோ எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும், தனது சிறுவயதில் அவள் கேட்ட கதைகளைக் கவினுக்குச் சொன்னாள். அம்மா கதை சொன்னாள். அம்மா கதை சொன்னால் எதையும் சமர்த்தாக கேட்கும் கவின், கதை சொல்லவில்லையென்றால் எது சொன்னாலும் கேட்கவே மாட்டாள்.

கவினுக்கு கதை சொல்வதற்காகவே அம்மா பக்கத்து வீடுகளுக்கெல்லாம் சென்று, அங்கிருந்த பாட்டிகளிடம் கதை கேட்டு வந்து சொன்னாள். ஒருமுறை சொன்ன கதையை எத்தனை நாட்கள் கழித்துச் சொன்னாலும், “ம்ம்... நீ சொன்ன கதையவே திரும்பச் சொல்றே..!’’ என்று சரியாய் கண்டுபிடித்து விடுவாள் கவின்.

அம்மாவால் எவ்வளவு நாளைக்குத்தான் தினமும் புதுசு புதுசான கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்..? நேற்று கரடி என்று சொன்னதை, இன்று நரி என்று மாற்றி சொன்னாள். முன்பொரு நாள் புலி என்று சொன்ன கதையை, இப்போது கிளி என்று மாற்றிச் சொன்னாள். எவ்வளவு கதைகளைச் சொல்லியும் அம்மாவால் கவினைச் சமாளிக்கவே முடியவில்லை.

பக்கத்து தெரு, பக்கத்து ஊர் என எங்கெல்லாம் கதை சொல்லும் மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தேடிதேடிச் சென்று, கதைகளைக் கேட்டு வந்து கவினுக்குச் சொன்னாள்.

இன்றைக்கு கவினுக்குச் சொல்வதற்கு அம்மாவிடம் ஒரு கதை கூட இல்லை. ‘என்ன செய்யப் போகிறாளோ..?’

படுக்கையில் உட்கார்ந்ததுமே, “அம்மா... கதை சொல்லுமா..?’’ என்றாள் கவின்.

“என் ராசாத்தி, என் செல்லமில்லே..! இன்னிக்கு ஒருநாள் மட்டும் பொறுத்துக்கடா. நாளைக்கு அம்மா உனக்குப் புதுசா ஒரு கதை சொல்றேன்..!’’ என்றாள் அம்மா.

ம்ம்ஹூம்.... கவின் கேட்பதாயில்லை.

“நாளைக்கு நீ கதை சொன்ன பிறகு, நான் தூங்கிக்கிறேன்..!’’ என்று சொல்லிக் கொண்டே, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டாள்.

அம்மாவுக்கு என்ன செய்வ-தென்றே ஒன்றும் புரியவில்லை.

சட்டென யோசித்தவளாய், “அம்மா படிக்காதவ, இம்புட்டுத்-தான்டா கதைகள் தெரியும். நீதான் பள்ளிக்கூடம் போயி படிக்கிறேல்ல. நீ வேணா அம்மாவுக்கு ஒரு கதை சொல்றீயா..?’’ என்று கேட்டாள் அம்மா.

“அய்யே... எப்பவுமே அம்மா-தான் குழந்தைக்கு கதை சொல்லணும். அதைக் குழந்தை கேட்கணும்...’’! என்றாள் கவின்.

“சரிதான்டா செல்லம். இன்னிக்கு அம்மாக்-கிட்டே சொல்றதுக்கு ஒரு கதைகூட இல்லே. நீ உன்னோட ஆசை அம்மாவுக்காக ஒரு கதை சொல்லக்கூடாதா..?’’ என்று அம்மா கேட்டாள்.

அன்பு அம்மா இவ்வளவு தூரம் கேட்டதும், அம்மாவுக்கு கதை சொல்லும் ஆசை கவினுக்கு வந்தது.

முதலில் லேசாய் தொண்டையைச் செருமிக் கொண்டாள். கண்களை அகலமாய் விரித்துக்-கொண்டு, “இப்ப நா சொல்லப்போற கதை, முயல் ஆமை கதை..!’’ என்றாள்.

அம்மாவும் சிறுவயதில் முயல் ஆமை கதையொன்றை கவினுக்குச் சொல்லியிருக்கிறாள். இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சரி... சொல்லுடா, எஞ்செல்லம்!’’ என்றாள்.

கதை சொல்லத் தொடங்கினாள் கவின்.

அது ஒரு அழகான கிராமம்.

அந்தக் கிராமத்து ஓரமா ஒரு ஆறு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அந்த ஆற்றின் ஓரமாக ஒரு முயலும் ஆமையும் வசித்து வந்தன.

ஒருநாள் _

விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சந்தையில் விற்பதற்காக கொண்டு போனார். அவர் போகும் வழியில், ஆற்றோரமாய் பசியோடு இருந்த முயல், ஆமை இரண்டையும் பார்த்தார்.

உடனே, தனது கூடையிலிருந்த முட்டைக்கோஸ் ஒன்றை எடுத்துத் தந்தார்.

“இருவரும் இதைப் பகிர்ந்து சாப்பிடுங்கள்..!’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

முயலுக்கு நல்ல பசி. ஆமைக்குத் தராமல் தான் மட்டுமே முழுவதையும் சாப்பிட்டுவிட வேண்டுமென்று ஆசைப்பட்டது முயல்.

“ஆமையாரே..! இந்த முட்டைக்கோஸை நம் இருவரில் யாராவது ஒருவர் முழுவதுமாக சாப்பிட்டால்தான் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். நமக்குள் ஒரு போட்டி வைப்போம். அதில், யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே முழு முட்டைக்கோஸையும் சாப்பிடலாம்....!’’ என்றது.

‘ம்ம்... மறுபடியும் போட்டி வைக்கிற உன் பழக்கத்தை ஆரம்பிச்சிட்டீயா..?’ என்று மனசுக்குள் நினைத்தபடியே, “ம்... சொல்லு. என்ன போட்டி..?” என்று கேட்டது ஆமை.

“நான் ஏதாவது போட்டி சொன்னா, உன்னை ஏமாத்துறேன்னு சொல்லுவே. என்ன போட்டி வைக்காலாம்னு இப்ப நீயே சொல்லு..!’’ என்று முயல் அப்பாவியாய் சொல்ல, முயலின் தந்திரத்தைப் புரிந்துகொண்டது ஆமை.

“சரி நானே சொல்றேன்..!’’ என்ற ஆமை, சற்று நேரம் கண்மூடி யோசித்தது. பிறகு, “முதலில் யார் அவர்கள் இருக்கும் வீட்டைத் தொட்டுவிட்டு வருகிறார்களோ, அவர்களுக்கே இந்த முட்டைக்கோஸ்..!’’ என்றது ஆமை.

இதைக் கேட்டதும் முயலுக்கு ஏக குஷியாகி விட்டது.

“ஓ... என் வீட்டைத்தானே, இதோ ஒரு நொடியில் தொட்டுவிட்டு வருகிறேன்...!’’ என்றபடி குதித்தோடியது முயல்.

தனது வீட்டை வேகமாய் ஓடிப்போய் தொட்டுவிட்டு, மூச்சு வாங்கியபடி முயல் திரும்பியது. வந்து பார்த்தால் முயலுக்கு ஒரே அதிர்ச்சி.

முட்டைக்கோஸை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது ஆமை.

“நீ உன் வீட்டுக்கே போகாம இப்படி செய்யிறீயே... இது நியாயமா..?’’ என்று கோபமாய் கேட்டது முயல்.

ஆமை முயலைப் பார்த்துச் சொன்னது;

“என்ன போட்டி, அவங்கவங்க இருக்கிற வீட்டை யார் முதலில் தொட்டுட்டு வர்றாங்களோ, அவர்களுக்குத்தானே முழு முட்டைக்கோஸூம்னு சொன்னேன். அதான் என்னோட வீட்டை நான் முதல்ல தொட்டேன். நானே முட்டைக்கோஸை எடுத்துக்கிட்டேன்..!’’ என்று அமைதியாக சொன்னது ஆமை.

இதைக் கேட்ட முயலுக்கு கோபம் வந்துவிட்டது.

“நீ பொய் சொல்றே. எங்கேயுமே நீ போகலே. இங்கேதான் இருந்தே. பிறகு எப்படி உன்னோட வீட்டை நீ தொட்டுட்டேன்னு சொல்லி முட்டைக்கோஸை சாப்பிடுறே..?’’ என்று முயல் மறுபடியும் கேட்டது.

“நல்ல கேள்விதான். எனக்குன்னு தனியே வீடு ஏது..? என் ஓடுதானே எனக்கு வீடு. இதோ, இப்படித்தான் என் வீட்டைத் தொட்டேன்...!’’ என்றபடி, தன் தலையால் முதுகிலுள்ள ஓட்டைத் தொட்டுக் காட்டியது ஆமை.

முயலால் ஒன்றும் பேச முடியவில்லை. ‘பேராசைப்பட்டு உள்ளதையும் இழந்தோமே...!’ என்று தலை கவிழ்ந்தபடி முயல் நின்றது.

கவின் சொன்ன இந்தக் கதையைக் கேட்ட அம்மாவின் முகம் சந்தோசத்தால் மலர்ந்தது.

ஓட்டப் பந்தயம் வைத்து, ஆமையை வெற்றிகொண்ட முயலின் கதையைத்தான் அம்மா கவினுக்குச் சொல்லியிருக்கிறாள். சமயோசிதப் புத்திகொண்ட ஆமை முயலை ஜெயித்த கதையை கவின் சொல்லி, இப்போதுதான் அம்மா கேட்கிறாள்.

“ராசாத்தி... யாரும்மா ஒனக்கு இந்தக் கதையைச் சொன்னது..?’’ என்று கேட்டாள் அம்மா.

“யாரும் சொல்லலை, நானா தான் சொல்றேன்..!’’ என்றாள் கவின்குட்டி.

உடனே, அம்மா... “என் குட்டியம்மாவுக்கு எம்புட்டு அறிவு..!’’ என்று கொஞ்ச, “பொறும்மா, இன்னும் கதை முடியலே..!’’ என்றபடி தொடர்ந்தாள் கவின்குட்டி.

வருத்தத்துடன் போன முயலைக் கூப்பிட்டது ஆமை.

“இந்தா, உனக்கும் பசிக்கும், நீயும் இதை சாப்பிடு..!’’ என்று பாதி முட்டைக்கோஸை முயலிடம் கொடுத்தது ஆமை. முயலும் வாங்கிச் சாப்பிட்டது. பிறகு, முயலிடம் ஆமை சொன்னது;

“அவரவர் சக்திக்கு அவரவர் செயலே பலமானதுதான். உன்னால் மிக வேகமாக ஓட முடியும் என்பது உனக்கான தனித்திறன். நீரில் வேகமாக நீந்த முடியுமென்பது எனக்கான தனித்திறன். நம்மால் சில வேலைகள் செய்ய முடியும் என்பதால், அதைச் செய்ய முடியாதவர்களை பலமற்றவர்களாக பார்ப்பது கூடாது. வீணாக அவர்களைப் போட்டிக்கு அழைத்து, சிறுமைப்படுத்த நினைப்பதும் தவறு..!’’

முயல் தன் தவறை உணர்ந்து, ஆமையை நட்போடு அணைத்துக் கொண்டது.

“எப்படி நம்ம முயல் ஆமை கதை...?’’ என்று கவின் அம்மாவிடம் கேட்டாள்.

கவின் குட்டி சொன்ன கதையை மிகவும் ரசித்துக் கேட்ட அம்மா, “உலகத்திலேயே அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதையே இதுதான்டா... எஞ்செல்லமே..!’’ என்றபடி கவினை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.

Share