Home முந்தைய இதழ்கள் 2022 மார்ச் 2022 நினைவில் நிறுத்துவோம்
புதன், 29 மார்ச் 2023
நினைவில் நிறுத்துவோம்
Print E-mail

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை?

சிகரம்


வீடுகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் பெரியவர்கள் “சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை!’’ என்பர். இதன் கருத்து என்ன?

அதிக வயது உடைய பெண்ணைவிட அய்ந்தாறு வயதுள்ள ஆண்பிள்ளைதான் சிறப்பு, உயர்வு என்பதாகும். அதாவது ஆண் உயர்வானவன், உறுதியானவன், ஆற்றல் உடையவன், அறிவு உடையவன், சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் உடையவன் என்று பரம்பரை பரம்பரையாய் வரும் தப்பான எண்ணங்களின் அடிப்படையில் கூறப்படுவது இது.

ஆனால், உண்மை என்ன?

அறிவியல் அடிப்படையில் ஆண்களைவிட பெண்களே மன வலிமையும், அறிவும், ஆளுமைத்  திறனும், ஆற்றலும் உடையவர்கள். அதனால்தான் தமிழர் மரபில் அக்காலத்தில் பெண்களுக்கே உயர்நிலை அளித்தனர். அதற்கு தாய்வழிச் சமுதாயம் என்று பெயர். பெண்கள் வீட்டில் நிலையாக இருப்பர். அவரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்தான் பெண் வீட்டுக்குச் சென்று வாழ்வான். பெண்ணுக்கே சொத்துரிமை இருந்தது. பெண்கள் கல்வி கற்றுச் சிறந்து விளங்கினர்.

ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தபோது ஆண்களே பெருங்கூட்டமாக வந்தனர். அவர்கள் இனத்துப் பெண்கள் வரவில்லை. எனவே, அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த பெண்களையே மனைவியாக்கி பிள்ளைகளைப் பெற்றனர். அதனால் பெண்கள், தங்கள் வாரிசுகளை உருவாக்கும் விளை நிலம் போன்றவர்கள் என்றும், ஆண்களே உயர்ந்தவர்கள் என்றும் கருதி, ஆணாதிக்கச் சமுதாயத்தை உருவாக்கினர். அதன்படி ஆணுக்கே கல்வி, ஆணுக்கே சொத்துரிமை, ஆணுக்கே அதிகாரம், ஆண் இருக்கும் இடத்திற்குப் பெண் திருமணமான பின் வர வேண்டும், ஆணுக்கு வரதட்சணை தர வேண்டும், பெண்ணைப் பெற்றோர் அவளை, ஆணுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் (கன்னிகாதானம்) என்று புதிய மரபை உருவாக்கினர். இதனால் தமிழரின் தாய் வழிச் சமுதாயம் மறைந்து ஆண் ஆதிக்கச் சமுதாயம் உருவாயிற்று.

அதன் விளைவாய் பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி, சுதந்திர வாழ்வு எல்லாம் பறிக்கப்பட்டு, வீட்டு வேலை, சமையல் வேலை, பிள்ளைகளைப் பெற்று பராமரிக்கும் வேலையென்று ஆக்கினர். அதனால், பெண் வீட்டில் அடைபட்டாள்.

பெண்ணுக்கு உடல் வலிமை கூடாது. குறைவாக உண்ண வேண்டும் என்று வற்புறுத்தினர். “உண்டி சுருங்கல் பெண்டிற்கு அழகு’’ என்று அறிவுரை வழங்கினர். உண்டி என்றால் உணவு என்று பொருள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

குறைவான உணவு, வெளியில், வயலில் உழைக்க முடியாமையால் பெண்கள் வலிமை குன்றினர்.

பெண்கள் வேகமாக நடக்கக் கூடாது, அதிக ஓசையுடன் பேசக் கூடாது. தலைகுனிந்து நடக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை விதித்து, பெண் என்றால் எல்லாவற்றுக்கும் அஞ்ச வேண்டும் என்றும் கூறி,

“அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’’ இவை பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

ஆணை நம்பியே பெண் வாழ வேண்டும். ஆணுக்கான துணைதான் பெண். அவளுக்கென்று சொந்த அறிவு, சொந்த வருவாய் கூடாது என்றனர்.

இவற்றின் விளைவாய் பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக்கப்பட்டனர். அப்படி அடிமையாக்கிய சமுதாயம் கூறிவருவதுதான், “சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை!’’ என்ற கருத்தும்.

ஆனால், நான் முதலில் கூறியதுபோல், ஆணைவிட பெண்ணே அனைத்திலும் சிறந்தவள், உயர்ந்தவள் என்பதே அறிவியல்படியான உண்மை. இதை அறிந்த தந்தை பெரியார், பெண்களும் மனிதர்களே, அவர்களுக்கும் மான உணர்வு, விருப்பு _ வெறுப்பு, ஆளுமைத்திறன், சாதனைத் திறன், அறிவாற்றல் எல்லாம் உண்டு.

ஆணுக்குப் பெண் எவ்வகையிலும் தாழ்வானவள் அல்லள்; ஆண் செய்ய முடியாதவற்றையும் பெண் செய்யும் வல்லமை பெற்றவர்; எனவே, பெண்ணை அடுப்படியில் முடக்காமல், அவளைக் கல்விக் கூடங்களுக்கு அனுப்பி, படிக்கச் செய்ய வேண்டும்.

பெண் பட்டம் பெற வேண்டும். பெண் பதவிகள் பெற வேண்டும். ஆணைப் போலவே பெண் ஆடை அணிய வேண்டும். நகையைச் சுமந்து, நாணிக் கூனி நிற்கக் கூடாது. பெண், பிள்ளை பெறவும், சமைத்துப் போடவும், பிள்ளை வளர்க்கவும் மட்டும் உரியவள் அல்லள்.

அவள் குத்துச் சண்டை, வாள் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், வான்வெளிப் பயணம், இராணுவம், காவல்துறை, அரசியல் தலைமை என்ற அனைத்திலும் ஆணுக்கு நிகராகப் பணி ஏற்க வேண்டும்.

பெண்ணுக்கு 50% பதவிகள், பணிஒதுக்கீடு செய்ய வேண்டும். அது அவர்களின் உரிமை என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடினார். கருத்துகளைப் பரப்பினர். அதன் விளைவாய் பெண்கள் இன்று ஆணுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெற்று ஆண்களைப் போலவே வாழும் நிலைக்கு வந்து விட்டனர்.

பிறப்பால் ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்ற    கருத்து மனித உரிமைக்கு எதிரானது. ஆணும் பெண்ணும் சமம் என்பதே மனித உரிமைக்கு உகந்தது. எனவே, பெண்கள் ஏற்று மேலெழ வேண்டும். ஆண்கள் இதை உணர்ந்து அவர்களுக்குத் துணைநிற்க வேண்டும். ஆண்-_பெண் சமத்துவமே சமூகநீதி! அதை நிலை நாட்டுவோம்.

Share