Home முந்தைய இதழ்கள் 2022 மார்ச் 2022 உலக நாடுகள்
புதன், 29 மார்ச் 2023
உலக நாடுகள்
Print E-mail

ரஷ்யா

RUSSIA

சந்தோஷ்


இன்றைய செய்தித் தாள்களில் அதிகம் எழுதப்பட்டுவரும் உலகச் செய்தி ரஷ்யா_ உக்ரைன் இடையேயான போர் பற்றிய செய்திதான். இந்தப் பிரச்சினை தொடங்கியது ஏன்? ரஷ்ய எல்லையை ஒட்டிய கிழக்கு, தெற்குப் பகுதியில் வாழும் உக்ரைன் மக்கள் ரஷ்ய ஆதரவு நிலைப்-பாட்டுடனும், மேற்குப் பகுதியை ஒட்டிய மக்கள் அய்ரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டிலும் இருப்பதால் யார் பக்கம் உக்ரைன் செல்லப் போகிறது என்பதே பிரச்சினையின் மய்யம். ரஷ்ய அரசு பிப்ரவரி 24 அன்று தாக்குதலைத் தொடங்கிவிட்டது. உலகின் கவனம் மீண்டும் ரஷ்யா நோக்கித் திரும்பியிருக்கும் நிலையில் ரஷ்யா பற்றி நாமும் தெரிந்துகொள்வோமா?

 

உலகில் முதல்முறையாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய நாடு ரஷ்யா, செயற்கைக் கோளின் பெயர் ஸ்புட்னிக். இந்தப் பெயரில்தான் தற்போது கரோனா மருந்தையும் தயாரித்து விற்பனை செய்கிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக ராணுவம், விண்வெளி, பொருளாதாரம், அறிவியல் என பல துறைகளில் அதற்கு நிகரான அளவுக்கு சாதனை படைத்து வருகிறது. மனித வரலாற்றில் புரட்சியின் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் கம்யூனிசக் கொள்கைளை அரசாங்கம் அமைத்து செயல்படுத்திய நாடு ரஷ்யா, அப்போது அது சோவியத் குடியரசாக இருந்தது. உலக இலக்கியங்களில் இன்றளவும் போற்றப்படும் ‘போரும் அமைதியும்’ என்னும் நாவலைப் படைத்தவர் ரஷ்யாவின் லியோ டால்ஸ்டாய். ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியங்களில் இன்றளவும் காணப்படக் கூடிய சிறப்பு பெற்றது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு உலக நாடுகளால் எப்போதும் போற்றப்படக் கூடிய ஒன்று.

வரலாறு

*   நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட ரஷ்யாவில் துருக்கியர்கள். மங்கோலியர்களின் படையெடுப்பும், ரஷ்யாவிலேயே பல மன்னர் பரம்பரைகளின் ஆட்சிகளும் நடந்துள்ளன.

* 19ஆம் நூற்றாண்டில் ஜார் மன்னர்கள் ரஷ்யாவை ஆண்டு வந்தனர். அதன் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரஷ்யாவில் தோற்றம் பெற்றன. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, சைபீரியாவுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது.

*   1914இல் ரஷ்யாவின் கூட்டாளியான செர்பியாவுக்கு எதிராக ஆஸ்திரியா_ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்ததையடுத்து, ரஷ்யா முதலாம் உலக யுத்தத்தினுள் பிரவேசித்தது. ஆட்சியாளருக்கெதிரான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்தது. 1917இல் ரஷ்யப் புரட்சிக்கான சூழலை உருவாக்கியது. போல்ஸ்விக் தலைவர் விளாடிமிர் லெனினால் நடத்தப்பட்ட அக்டோபர் புரட்சியின் மூலம், இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, உலகின் முதல் சோசலிச நாடு உருவாகியது.

*   டிசம்பர் 30, 1922இல், ரஷ்ய சோவியத் கூட்டாட்சி சோசலிசக் குடியரசு உக்ரேனிய, லொரேசியா மற்றும் ட்ரான்ஸ்காக்கேசியா ஆகியவை சோவியத் சோசலிசக் குடியரசுகளுடன் இணைந்து சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் என உருவாக்கிக் கொண்டனர்.

*  1924இல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின், அனைத்து எதிர்ப்புக் குழுக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக் கொண்டு, பெரும்பாலான அதிகாரங்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்.

* இரண்டாம் உலகப் போரின் 1941_45ஆம் ஆண்டு காலப்பகுதி ஸ்டாலினின் தலைமையின் கீழ், சோவியத் படைகள், ஜெர்மனியரை கிழக்கு அய்ரோப்பா வழியாக விரட்டி, மே 1945இல் பெர்லினைக் கைப்பற்றினர்.

*   ஸ்டாலினின் மரணத்துக்குப் பின், புதிய தலைவரான நிக்கிட்டா குருசேவ், புதிய கொள்கைகளைச் செயல்படுத்தினார்.

*  1985லிருந்து, சோவியத் முறைமையில் தாராளவாத சீர்திருத்தங்களை சோவியத் தலைவரான மிக்கைல்கோர்பசேவ் அறிமுகப்படுத்தினார்.

*  1991இல், பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புக்ள் ஏற்படத் தொடங்கின. மக்களின் விருப்பத்துக்கு மாறாக, டிசம்பர் 25, 1991இல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறியது.

*  சூன் 1991இல் நடைபெற்ற தேர்தலில், போரிஸ் யெல்ட்சின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*  டிசம்பர் 31, 1999இல் யெல்ட்சின் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகி ஆட்சிப் பொறுப்பை விளாடிமிர் புடினிடம் ஒப்படைத்தார்.

*   மார்ச் 2, 2008 அன்று, திமித்ரி மெட்வெடெவ் ரஷ்ய குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதோடு, புடின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 குடியரசுத் தலைவர் தேர்தலையடுத்து, புடின் குடியரசுத் தலைவரானதுடன், மெட்வடேவ் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அரசு முறைகள்

*  ரஷ்ய அரசியலமைப்பின்படி அந்நாடு குடியரசுத் தலைவரை நாட்டுத் தலைவராகவும், பிரதம அமைச்சரை அரசுத் தலைவராகவும் கொண்ட ஒரு கூட்டாட்சி, அரை_குடியரசுத் தலைவர் முறைக் குடியரசு ஆகும்.
*   ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்ட குடியரசுத் தலைவரை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்கின்றனர்.
*   ஒருவர் இரண்டாவது முறையும் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படலாம். எனினும், தொடர்ச்சியாக மூன்று முறை பதவியில் இருக்க முடியாது.
*  பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்குப் பதவி வழங்குகிறார்.

*  ரஷ்யாவில் உள்ள கட்சிகளுள், அய்க்கிய ரஷ்யக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி ஆகியன முதன்மையாக விளங்குகின்றன.

பொருளாதாரம்

*    நாணயம்: ரூபிள் என அழைக்கப்படுகிறது.
*    பெரிய அளவிலான ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட நாடு.
*    பெட்ரோலியப் பொருள்கள், எண்ணெய், எரிவாயு, இரசாயனத் தொழில்துறையில் பெரும் வளர்ச்சி கண்ட முதன்மை நாடு.
*    இயந்திர பாகங்கள் தயாரிக்கும் தொழில்துறை, அணுஉலை நி-றுவும் தொழில் அமைப்புகள் அதிகமான வருவாய் தரக்கூடியவை.
*    விவசாயத்தின் முக்கிய பொருள்களாக பார்லி, கம்பு, ஓட்ஸ் போன்ற தானியங்கள் பயிரிடப்படுகின்றன.
*    சூரியகாந்தி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ஆளி விதைகள், உருளைக்கிழங்கு போன்றவை  பயிரிடப்படுகின்றன.
*    கால்நடைக்கான கூட்டுப்பண்ணைத் தொழில்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது.
*    காடுகள் நிறைந்துள்ளதால், மரம், மரக்கட்டை, கூழ், காகிதம், அட்டை மற்றும் உருட்டு மரம் ஏற்றுமதியில் வருமானத்தைப் பெற்றுத் தருகிறது.
*    மீன் பிடித்தொழில் உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் உள்ளது.
*    கருங்கடலில் உள்ள அழகிய தீவு நகரமான செவாஸ்ட்டோபோல் மற்றும் சோச்சி குறிப்பிடத்தக்கது.
*    மாஸ்கோவில் லெனின், ஸ்டாலின் கல்லறைகள் உலகப் பயணிகள் பார்க்கக் கூடிய முக்கிய இடங்களாகும்.

விளையாட்டு

*    உலகின் மிகப் பெரிய வல்லரசான ரஷ்யா பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.
*    கால்பந்து விளையாட்டு நாட்டின் அதிகளவு மக்களின் விளையாட்டாகும். 2018ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டியை நடத்தியதோடு, அதில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
*    பாண்டி எனப்படும் (Ice Hockey) விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளனர்.   2014ஆம் ஆண்டு பாண்டி போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளனர்.
*    டென்னிஸ் விளையாட்டில் உலக பிரபலமான விளையாட்டு வீரர்களாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆண்களில் மெத்தேவ், பெண்கள் பிரிவில் மரிய ஷராபோவா ஆகியோர் முக்கியமான நட்சத்திரங்கள்.
*    பயத்லான் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
*    கூடைப்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களை உருவாக்கி, அவர்கள் உலக நாடுகளில் விளையாடும் சிறப்புப் பெற்றுள்ளனர்.
*    கைப்பந்து பெண் பிரிவில் பன்னிரண்டு ஆண்டுகள் அய்ரோப்பியப் பட்டத்தினை வென்றுள்ளனர்.
*    ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு-களில் ஒலிம்பிக் போட்டியின்போது அதிகளவு பதக்கங்களை ரஷ்ய வீரர்கள் வெல்கின்றனர்.
*    செஸ், கேரம், இறகுப்பந்து விளையாட்டுகளிலும் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் பங்கு பெற்று சிறப்பித்து வருகின்றனர்.

மக்களும் மொழியும்:


*    மக்கள் ரஷ்யர் என அழைக்கப்படுகின்றனர்.
*    முதன்மை மொழி ரஷ்ய மொழி.
*    ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் மொழிகளும் துணை மொழிகளாகப் பேசப்படுகின்றன.
*    தேசிய மிருகம் ரஷ்யக் கரடி, இரட்டைத் தலை கழுகு தேசியச் சின்னம்.

உணவு முறைகள்:


*    பல்வேறு நாடுகளின் உணவுமுறையைக் கொண்டது.
*    முட்டைக்கோஸ், வேகவைத்த உருளைக்-கிழங்கு, ஆப்பிள், பேரீச்சம் பழம், காளான்கள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர்.
*    சூப் வகைகளில் மீன், ஓக்ரோஷ்கர், போட்வின்யா, சோல்யங்கா போன்ற குளிரைப் போக்கும் சூப்புகள் முக்கிய உணவாகும்.
*    மரபு வழியாக கஞ்சி உணவுமுறையும் பின்பற்றப்படுகிறது. அதில் பால், சர்க்கரை, மற்றும் பூசணிக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் கஞ்சி சிறப்பானதொன்று. பக்வீட், ஓட்ஸ், ரவை, பார்லி, கோதுமை ஆகியவற்றை கஞ்சி உணவுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சுற்றுலாத் தலங்கள்:


*    பயணிகளைக் கவரக்கூடிய முக்கிய நகரங்கள் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கசான்.
*    மாஸ்கோவில் சிவப்பு சதுக்கம், கிரெம்ளின் கோபுரங்கள், விக்டரிபார்க், பழைய அர்பாட், அழகிய நகரத்தில் பல பகுதிகள் கட்டடக்கலைக்கு சிறப்பு வாய்ந்ததாக விளங்குகின்றன.
*    ரஷ்யாவின் ‘கோல்டன் ரிங்’ எனப்படும் எட்டு பண்டைய நகரங்கள் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்களாகும்.
*    சுஸ்டால் நகரத்தில் உள்ள பழைமையான தேவாலயங்கள் சிற்ப வேலைப்பாடுகளுக்காக அனைவராலும் பாராட்டப்படுகின்றன.
*    கோஸ்ட்ரோமா நகரத்தில் பல கோவில்கள், அருங்காட்சியகங்கள் உள்ளன.
*    விளாடிமிர் நகரம் தனித்துவமான கட்டடக் கலைக்கு புகழ்பெற்ற அழகிய நகரமாகும்.

 

 

Share