Home முந்தைய இதழ்கள் 2022 மார்ச் 2022 கோமாளி மாமா-24
திங்கள், 27 மார்ச் 2023
கோமாளி மாமா-24
Print E-mail

கோமாளி மாமா

ஒவியம்,கதை: மு.கலைவாணன்

கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க வேகவேகமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கம்.
“மாணிக்கம்... உனக்காகக் கடலை மிட்டாய் வாங்கிட்டு வந்தேன்... இதை எடுத்துக்க...” என கூப்பிட்டுச் சொன்னார் மாணிக்கத்தின் அம்மா.
“அம்மா... அதைக் கொடுங்க. நான் தோட்டத்துக்குப் போயி என் நண்பர்களோட பகிர்ந்து சாப்பிடுறேன்’’ என காகிதப் பொட்டலத்தை கையில் வாங்கிக் கொண்டு தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டான்.
மல்லிகா, செல்வம், கோமாளி மாமா மூவரும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். வேகமாக வந்த மாணிக்கம், “இந்தாங்க... கடலைமிட்டாய் எடுத்துக்குங்க’’ என பொட்டலத்தைப் பிரித்து மூவருக்கும் முன்னால் நீட்டினான். ஆளுக்கு ஒரு கடலை மிட்டாய் இருந்தது. அனைவரும் கடலை மிட்டாயை மெல்லும்போது கோமாளி மாமா மாணிக்கத்தின் கையிலிருந்த பொட்டலக் காகிதத்தை உற்றுப் பார்த்தார்.
“மாணிக்கம், அந்தக் காகிதத்தை இப்படிக் கொடு’’ என்றார்.
கோமாளி மாமாவிடம் பொட்டலக் காகிதத்தைக் கொடுத்தான் மாணிக்கம்.
அதில் இருந்த வெளிநாட்டு இளம்பெண் படத்தைக் காட்டி, “இந்தப் பெண் யாருன்னு தெரியுமா?’’ என்றார்.
“அய்... இது யாருடா... பொட்டலக் காகிதத்திலே?’’ என வியந்தாள் மல்லிகா.
“மாமா... இந்தக் காகிதத்திலே வந்தது நம்ம நாட்டு உணவு. ஆனா, இந்த அம்மா நம்ம நாட்டு ஆளு இல்லே... வெளிநாட்டுக்காரங்க... ஆனா, யாருன்னுதான் தெரியலே...’’ என்றான் செல்வம்.
“கோமாளி மாமா... எங்க அம்மா கடையில வாங்குன கடலை மிட்டாயை... இந்தக் காகிதத்திலே சுத்தித் தந்தாங்க. அதுலெ இருக்கிறவங்களைப் பத்தி திடீர்னு கேட்டா...? எங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்றான் மாணிக்கம்.
“எங்களுக்குத் தெரியலே... ஆனா நீங்க கேக்கிறீங்கன்னா உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும். நீங்களே இவங்களைப் பத்திச் சொல்லுங்க... மாமா’’ என்றாள் மல்லிகா.
“போன முறை மாமா கொண்டு வந்த படத்தை வச்சி கதை சொன்னாரு.
இந்த முறை மாணிக்கம் கொண்டு வந்த படத்தை வச்சி கதை சொல்லப் போறீங்க... அப்படித்தானே மாமா” எனக் கேட்டான் செல்வம்.
“ஆமா! இந்தப் படத்தைக் காட்டுனதும் அய்... இது யாருடான்னு ஆச்சரியமா கேட்டியே... மல்லிகா... இவங்க பேரே அய்டாதான்.
டாக்டர் அய்டாசோபியா ஸ்கட்டர் என்பதுதான் இவங்களோட முழுப் பேரு. டாக்டர் ஜான் ஸ்கட்டர், சோபியா ஸ்கட்டர்ங்கிற அமெரிக்கா இணையர்களுக்கு அய்ந்தாவது குழந்தையா 1870ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்தியாவில் பிறந்தவங்கதான் இந்த அம்மையார்.
இந்தியாவில, அதுவும் நம்ம தமிழ்நாட்டுல, அதிலேயும் குறிப்பா திண்டிவனத்திலே மதப் பணியோடு சேர்ந்து மருத்துவப் பணியும் செய்ய வந்தவங்க குடும்பத்திலே பிறந்தார் அய்டா ஸ்கட்டர். 8 வயசு குழந்தையிலேயே படிக்கிறதுக்காக அமெரிக்கா போனவங்க... அங்க உள்ள செழிப்பான வாழ்க்கை முறையைப் பார்த்ததும் உலகத்தையே மறந்துட்டாங்க.
குடும்பமே கிறித்துவ மதத்தை முன்னெடுக்கும் பணியான மிஷனரி வாழ்க்கை வாழும்போது, தான் மட்டும் மிஷனரி வாழ்க்கை வாழப் போறதில்லே, அமெரிக்காவிலேதான் இருப்பேன் என்றும், தனக்குப் பிடித்த அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே சொகுசா வாழணும்னும் கனவு கண்டாங்க.
பள்ளிப் படிப்பும், இறைத்தூதர் (மிஷனரி) பயிற்சியும் 20 வயசில முடிச்சாங்க. அந்த நேரம்... இந்தியாவில தமிழ்நாட்டுல திண்டிவனம் பகுதியில இருந்த அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அவங்களைப் பார்க்க வேண்டிய சூழல் காரணமா 1890ல இந்தியாவுக்கு வந்தாங்க.
சின்னக் குழந்தையா அமெரிக்காவுக்குப் போயி இளம் வயதுப் பெண்ணாக வந்த மகளைப் பார்த்ததும் அழுதாரு அவரோட அப்பா டாக்டர் ஜான் ஸ்கட்டர்.
சென்னையிலிருந்து மாட்டு வண்டி மூலமா திண்டிவனத்தில உள்ள அம்மா, அப்பா இருக்கிற கூரை வீட்டுக்குப் போனாங்க.
அவரது வீட்டுக்கு மருத்துவம் பார்க்க வந்த திண்டிவனம் மக்கள் அய்டா ஸ்கட்டரை ‘மிஸ்ஸியம்மா’ன்னு கூப்பிட்டாங்க. 8 வயது வரை இங்கே இருந்ததாலே கொஞ்சம் தமிழும் பேசுவாங்க.
மின்சார வசதியே இல்லாத 1870 ஆண்டுல... அந்தக் கூரை வீட்டுல... இரவு நேரம் ஒரு சின்ன சிம்னி விளக்கு வெளிச்சத்தில ஆங்கில நாவல்   படிச்சுக்கிட்டிருந்தாங்க அய்டா ஸ்கட்டர்.
நள்ளிரவு நேரம் நாவலில் மூழ்கியிருந்தவரின் கவனத்தை வெளியில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கலைச்சுது.
கையில் சிம்னி விளக்கை எடுத்துக்கிட்டு எழுந்து போயி கதவைத் திறந்தாங்க.
தலையில் குல்லாப் போட்ட இஸ்லாமியப் பெரியவர் ஒருத்தர் பதற்றத்தோட நின்னுக்-கிட்டிருந்தாரு.
‘மிஸ்ஸியம்மா! நீங்கதான் என் மகளைக் காப்பாத்தணும்னு’ அழுதாரு அந்தப் பெரியவரு.
‘உங்க மகளுக்கு என்ன ஆச்சுன்னு’ கேட்டாங்க அய்டா.
‘தலைப்பிரசவம். வலியால துடிக்கிறா... உடனே வாங்கம்மான்னு’ கூப்பிட்டாரு.
‘சாரி... நான் டாக்டர் கிடையாது, எங்க அப்பாதான் டாக்டர், எனக்குப் பிரசவமெல்லாம் பார்க்கத் தெரியாது. இருங்க அப்பாவை எழுப்புறேன், அவரு உங்க கூட வருவாருன்னு’ சொல்லிட்டு திரும்புனாங்க.
‘அய்யய்யோ அவரு வேண்டாம்மா... அவரை எழுப்பாதீங்கன்னு’ சத்தமா சொல்லித் தடுத்தாரு.
அய்டாவோ, ‘ஏன் வேணாங்கிறீங்க. உங்க மகளுக்கு அப்புறம் யாரு பிரசவம் பாப்பாங்க?’ன்னு கேட்டாங்க. ஆனா, அந்தப் பெரியவரோ... “வேண்டாம்மா... வேண்டாம்! ஒரு முஸ்லிம் பொண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்க வேதத்தில இடமில்லை. நான் வர்றேம்மா...’’ என்று வணங்கியபடி இருட்டில் மறைந்து போனார்.
என்ன செய்வதென்று தெரியாமல் வியந்தபடி கதவை மூடிவிட்டு நாவலைத் தொடர்ந்து படிக்க, விட்ட இடத்தைப் புரட்டினார். சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டும் ஓசை.
இஸ்லாமியப் பெரியவர்தான் மனம் மாறி மீண்டும் வந்துவிட்டாரோ என்று நினைத்தபடி விளக்கோடு சென்று கதவைத் திறந்தார்.
வாசலில் வேறு ஒருவர் நின்றிருந்தார். நடுத்தர வயதுடைய அவரின் நெற்றியில் விபூதிப் பட்டை, வெற்று உடம்பில் பூணூல் அவர் யார் என்பதை அடையாளப்படுத்தியது.
‘மிஸ்ஸியம்மா வணக்கம். என் பெண்டாட்டி பிரசவ வலியில துடிக்கிறா... உடனே எங்ககூட வாங்கம்மா. ரெண்டு உசுரையும் காப்பாத்திக் கொடுங்க தாயே’ என்று அவரும் கெஞ்சினார்.
அய்டா, ‘அப்பாவைக் கூப்பிடவா’ என்றார். “வேணாம்மா... எங்க இந்து சாஸ்திரத்திலே அதுக்கு இடமேயில்லம்மா... என் பொண்டாட்டி செத்தாலும் செத்துப் போகட்டும்.. ஆனா ஒரு ஆம்பளை பிரசவம் பார்க்க முடியாது தாயே...” என்றபடி அவரும் போய்விட்டார்.
ஆனால், அய்டாவால் அமைதி அடைய முடியவில்லை. நாவலை மூடி வைத்துவிட்டு படுக்கப் போனார். தூக்கம் வரவில்லை.
மறுபடியும் கதவு தட்டும் ஓசை. விரைந்து சென்று கதவைத் திறந்தார்.
வேறொரு நபர். ஆனால், அவரும் இந்துதான். ‘மனைவிக்குப் பிரசவ வலியா?’ என்று அய்டாவே முந்திக்கு கொண்டார்.
‘ஆமாம்மா... அது எப்படி உங்களுக்கு தெரியும்? உடனே வந்து என் பொண்டாட்டியைக் காப்பாத்துங்கம்மா...” என்று கெஞ்சினார்.
அவரோ... ‘அப்பாவா வேணாந் தாயே... இது எங்க சம்பிரதாயத்திலேயே இல்லை. நீங்கதான் வரணும்’ என உறுதியாகச் சொன்னார்.
‘நான் டாக்டரில்லே... அப்பாதான் வரமுடியும்’ என்றார் அய்டா.
‘ஆம்பளை பிரசவம் பாத்து என் பொண்டாட்டி பிழைக்கிறதைவிட அவ சாகட்டும்’ என்று புலம்பியபடி வந்தவர் போனார்.
அய்டாவின் தூக்கமும் போனது. ‘இந்த நாட்டில் இப்படி ஒரு கலாச்சாரமா? பெண் மருத்துவரே இல்லாத காலத்தில் பெண்தான் பிரசவம் பார்க்கணும்னு நினைக்கிற மக்களா? இதற்கு என்னதான் தீர்வு....’ என சிந்தித்தார் அய்டா.
மறுநாள் மாலை நேரம்... அய்டா, தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்றதைப் பார்த்தார்.
அந்த மூவரும் பிரசவச் சிக்கலில் இரவில் இறந்துபோன இளம் பெண்கள் என்பதை அறிந்ததும் மிகுந்த மன வேதனை அடைந்தார்.
இங்குள்ள பெண்களுக்கு உடனடித் தேவை பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்தார்.
மருத்துவம் படிக்க நியூயார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அதுதான் என்பது தனிச்சிறப்பு.
1899ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்று மருத்துவரானார். உடனே தமிழ்நாடு திரும்பி பெண்களுக்கென மருத்துவப் பணி செய்ய வேண்டும். அதற்கொரு மருத்துவமனை கட்ட வேண்டுமெனும் திட்டத்தைப் பலரிடம் கூறினார்.
மான்ஹாட்டன் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெல் என்பவர் தமிழ்நாட்டுப் பெண்களின் நலனுக்காக அவருடைய மனைவியின் நினைவாக ரூபாய் பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை அய்டாவிடம் வழங்கினார். அப்போது அமெரிக்க டாலரின் மதிப்பு மிக அதிகம்.
அய்டா மீண்டும் தமிழ்நாடு திரும்பியபோது அவரின் அப்பா வேலூரில் இருந்தார். அவருடன் இணைந்து இரண்டு ஆண்டுகளில் இரண்டாயிரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்.
1900ஆம் ஆண்டில் அய்டாவின் அப்பா ஜான் ஸ்கட்டர் மரணமடைந்தார். அவரது மருத்துவப் பொறுப்பு முழுவதையும் அய்டா ஏற்றுக் கொண்டார்.
ஷெல் அவர்களிடம் தான் பெற்றிருந்த தொகையில் 1902ஆம் ஆண்டு வேலூரில் ஒரு சிறு மருத்துவமனையை உருவாக்கினார். சுற்று வட்டார மக்கள் அங்கு வந்து பயன்பெற்றனர். ஆண்டுக்கு நாற்பதாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் பரவிய ப்ளேக், காலரா தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் பெரும் பணி ஆற்றினார். தான் ஒருவர் மட்டும் செய்யும் பணி போதாது என்பதை உணர்ந்து பெண்களுக்கான தாதியர் (Nurse)   பயிற்சிப் பள்ளியை நிறுவ நினைத்தார்.
இது அப்போது ஆசியாவிலேயே யாரும் கேள்விப்படாத ஒன்றாகும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். 1909இல் அவர் ஆரம்பித்த வீதியோரக் கிளினிக் (Road Side Clinic) திட்டம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கிராமம் கிராமமாக மருத்துவச் சேவை செய்யச் சென்றாலும் அவர் மனம் மகிழ்ச்சி அடையவில்லை. தானும் தன்னால் உருவாக்கப்பட்ட தாதியர்களும் மட்டும் பெண்களுக்குத் தேவையான மருத்துவம் செய்தால் போதாது... இயலாது. ஆகவே, பெண் மருத்துவர்கள் பலரை உருவாக்குவதே இதற்கு வழியென முடிவெடுத்தார்.
பெண் கல்வியே இல்லாத காலத்தில்... ‘பெண்கள் மருத்துவம் பயில்வதா?’ என கேலி பேசினார்கள்.
அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918ஆம் ஆண்டு பெண் மருத்துவர்களுக்கான கல்லூரி நிறுவப்பட்டது. அப்போது அதில் சேர 151 பெண்கள் மனு செய்தனர். அதில் 17 பேர் தேர்வாகி வகுப்பில் சேர்ந்தனர். இதுவே கிறித்துவ மருத்துவக் கல்லூரியின் தொடக்கம்.
1928இல் வேலூர் டவுனுக்குள் பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அதுதான் இன்றைய சி.எம்.சி. மருத்துவமனை. அது இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியாக விளங்குவதை நாடறியும்.
மதப் பணிக்காக வந்து மருத்துவப் பணியைத் தொடங்கி... மகத்தான சாதனை படைத்த மருத்துவர் அய்டா ஸ்கட்டர் போல் வேறு யாரும் இருக்கிறார்களா?
1952ஆம் ஆண்டு உலகின் சிறந்த 5 மருத்துவர்களில் ஒருவராக அய்டா தேர்வு செய்யப்பட்டார்.
திருமணம், ஆடம்பர வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மருத்துவப் பணிக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மருத்துவர் அய்டா தன் 85ஆம் வயதில் கொடைக்கானலில் மரணமுற்றார்’’ என்று சொல்லி முடித்தார் கோமாளி.
பொட்டலக் காகிதத்தில் படமாகத் தெரிந்த மருத்துவர் அய்டா ஸ்கட்டர் இப்போது குழந்தைகள் மனதில் பாடமாக நிறைந்தார்.

Share