Home முந்தைய இதழ்கள் 2022 ஏப்ரல் 2022 சிறார் கதை: காக்கா வீடு
வியாழன், 30 மார்ச் 2023
சிறார் கதை: காக்கா வீடு
Print E-mail

கோவை.லெனின்

மகிழன் கைகளில் இருந்த தின்பண்டத்தை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றான்.
மாலை நேரத்தில், பக்கத்து வீட்டு மாடியில் அவனது நண்பன் வீரா காத்திருப்பான். இருவரும் கைகளை நீட்டி, அவரவர் தின்பண்டங்களில் கொஞ்சம் பரிமாறிக் கொள்வார்கள். சாப்பிட்டபடியே விளையாட்டு, சினிமா, பள்ளிக்கூடம் பற்றிப் பேசுவார்கள்.

இன்றைக்கு அவன் இல்லை.

மொட்டை மாடியில் ஒரு காகம் வந்து உட்கார்ந்தது. தன் தின்பண்டத்தில் கொஞ்சம் எடுத்து அதன் முன் வைத்தான். காகம் தன் அலகால் கொத்தித் தின்ன ஆரம்பித்தது.


தின்பண்டம் சாப்பிடுவதற்குக் கூட்டாளி கிடைத்துவிட்டது. பேசுவதற்கு யாரும் இல்லையே என நினைத்தான் மகிழன்.
“நான் இருக்கிறேனே?” என்றது காகம்.

“நீ பேசுவியா!” என்று ஆச்சரியமாகக் கேட்டான் மகிழன்.

“மனிதர்களுக்கு மொழி உண்டு. எங்களைப் போன்ற பறவைகள், விலங்குகளுக்கு மொழி இல்லை. ஆனால், நாங்களும் எங்கள் குடும்பத்தினரின் பசியைத் தெரிந்துகொள்கிறோம். அன்பைப் பகிர்ந்து கொள்கிறோம். உணர்வுதான் எங்கள் மொழி. அது உனக்குப் புரியுமென்றால் நான் உன்னோடு பேசுகிறேன்” என்று காகம் சொன்னது.

“அப்படின்னா பேசு.. உனக்கு வீடு இருக்குதா?”

“இருக்கு.. ஆனா, உன்னைப் போல மாடி வீடு கிடையாது. மரத்து மேல ஒரு கூடு. அதுதான் எங்க வீடு. அதை நாங்களே கட்டிக்குவோம்” என்றது காகம்.
“என்னை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவியா?” என்று ஆசையுடன் மகிழன் கேட்டான்.

“அதற்கு உனக்கு மரம் ஏறத் தெரிஞ்சிருக்கணும். அந்த மரம் ஒரு தோட்டத்துல இருக்குது. தோட்டத்துக்காரர் வந்துட்டாருன்னா உன்னை திருடன்னு நினைச்சி துரத்திடுவாரு” என்று காகம் கவலையோடு சொன்னது.

“சரி.. சரி.. நீ உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக வேணாம். ஆனா, அடிக்கடி சாயங்காலம் எங்க மொட்டை மாடிக்கு வா. நான் ஸ்கூல் முடிச்சிட்டு வந்திடுவேன். என் நண்பன் வீராவும் பக்கத்து மாடிக்கு வந்திடுவான். உனக்கு நிறைய தின்பண்டம் தருவோம். நாம மூணு பேரும் நிறைய கதை பேசலாம்” என்றான் மகிழன்.

“கதைன்னா... காக்கா வடை திருடுன கதை, பானையிலே கற்களைப் போட்டு தண்ணி குடிச்ச கதையெல்லாம் கேட்பியா?” என்று காகம் கேட்டதும், மகிழன் சிரித்தான்.

“அந்தக் கதையெல்லாம் தெரியுமே.. நீ உன் வீட்டில் நடக்கிற கதைகளைச் சொல்லு. இங்கே உள்ள மனிதர்கள், மற்றவங்க வீட்டு கதைகளைத்தான் ஆர்வமா கேட்குறாங்க” என்று மகிழன் சொன்னான்.

காகம் அவனிடம், “எங்க வீட்டில் லைட் கிடையாது. அதனால இருட்டுறதுக்குள்ள போயிடணும். அங்கே இருக்கிறவங்களுக்காக இதை எடுத்துக்கிறேன்” என்றபடி, தின்பண்டத்தில் கொஞ்சம் கொத்திக்கொண்டு பறந்தது காகம்.

மறுநாள் மாலை, மொட்டை  மாடியில் வீராவிடம், காகம் வந்ததைச் சொன்னான் மகிழன். இன்றைக்கும் வரும் என்றான். ஆனால், காகம் வரவில்லை. இருட்டத் தொடங்கியது.

வீரா கவலையுடன், “இந்த வாரத்தில் இன்னும் இரண்டு நாள்கள் இங்கே இருப்பேன். அப்புறம் அம்மா ஊருக்குப் போயிடுவேன். ஒரு வாரம் கழித்துத்தான் வருவேன்” என்றான்.

“எப்படியும் நாளைக்கு வந்துவிடும்..” என்று நம்பிக்கையுடன் சொன்னான் மகிழன்.

அவன் நம்பியது போல நடக்கவில்லை. அடுத்தடுத்த நாள்களிலும் காகம் வரவில்லை. மகிழன் தன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறான் என நினைத்துக் கொண்டான் வீரா. நண்பனிடம் காகத்தைக் காட்ட முடியாததால் மகிழனும் ஏமாற்றமடைந்தான்.

சில நாள்கள் கழித்து, மொட்டை மாடியில் மகிழன் காத்திருந்தபோது காகம் பறந்து வந்து உட்கார்ந்தது.

அதனைப் பார்த்த மகிழன், “போ.. உன்கூட பேசமாட்டேன். உனக்கு  எதுவும் தர மாட்டேன். நீ என்னையும் என் நண்பனையும் ஏமாற்றிட்டே” என்றான் கோபமாக.
காகம்  அவனைப் பார்த்து, “நான் உங்களை ஏமாற்றணும்னு நினைக்கலை. என் கூட்டில் நான் போட்டிருந்த முட்டைகளை அடைகாத்தேன். அதில் உள்ள குஞ்சுகள் வெளியே வந்தபோது, ஒரு முட்டையிலிருந்து குயில் குஞ்சு வந்தது” என்றது.

“பொய் சொல்லாதே.. காக்கான்னா, காக்கா முட்டைதானே போடும்? குயில் முட்டை, வாத்து முட்டைன்னு ஒவ்வொரு நாளும் விதவிதமா முட்டை போடுமா?” என்று கேட்டான் மகிழன்.

“நான் என் கூட்டில் இல்லாதபோது, ஒரு குயில் வந்து முட்டை போட்டிருக்குது. குயிலுக்கு அடைகாக்கத் தெரியாது. அதனால எங்க கூட்டிலே முட்டை போட்டு விட்டது. நானும் அடைகாத்தேன். எல்லா குஞ்சுகளும் என் பிள்ளைகள்தானே.. அதனால அதற்கும் சாப்பாடு ஊட்டி, என் பிள்ளைகள் மாதிரியே வளருதான்னு பார்த்தேன். நன்றாக வளர்ந்துவிட்டது என்று தெரிந்ததும் அதனை குயில்கள் இருக்கும் தோப்பில் பத்திரமாக விட்டுவிட்டு வந்தேன்” என்று காகம் சொன்னது.
மனிதர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதையும், காகங்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருப்பதுடன், குயில் முட்டையையும் அடைகாத்துப் பொரித்து, பாதுகாப்பாக வளர்த்ததையும் கேட்டு மகிழன் மகிழ்ந்தான்.

“மொட்டை  மாடியிலேயே இரு.. வந்திடுறேன்” என்று காகத்திடம் சொல்லிவிட்டு, வீட்டுக்குச்  சென்றான்.

அம்மா வடை சுட்டுக் கொண்டிருந்தார். மகிழனுக்கு ஒன்று தந்தார். “இன்னொன்று தருவீங்களாம்மா?” என்றான்.
மாடியிலிருந்து  காகம் குரல் கொடுத்தது.

அப்போது அம்மா மகிழனிடம், “நம்ம வீட்டுக்கு விருந்தாளி வர்றாங்கன்னுதான் வடை சுடுறேன். பார்த்தியா காக்கா கத்துது. காக்கா கத்தினால் விருந்தாளிங்க வருவாங்க” என்றார்.

அந்த விருந்தாளியே காக்காதான் என மனதுக்குள் நினைத்தபடி, இரண்டு வடைகளுடன் மொட்டை மாடிக்குச் சென்றான் மகிழன்.
வீராவும் பக்கத்து மாடிக்கு வந்திருந்தான். மூவரும் வடையைப் பகிர்ந்து கொண்டு, மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினர்.

Share