Home முந்தைய இதழ்கள் 2022 ஏப்ரல் 2022 கருப்பு பலூன்
புதன், 29 மார்ச் 2023
கருப்பு பலூன்
Print E-mail

 

விடுமுறை நாள் கதை கேட்கத் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தாள் மல்லிகா. மாணிக்கமும் செல்வமும் பின்னாலேயே வந்துவிட்டனர். கதை சொல்லக் கோமாளி மாமா வரவில்லை.


“சரி... கோமாளி மாமா வர்ற வரைக்கும் ஏதாவது விளையாட்டு விளையாடுவோமா?” என ஆர்வமாகக் கேட்டான் செல்வம்.
“விளையாட்டுக்குப் பதிலா விடுகதை சொல்லலாமா?” என்றாள் மல்லிகா.


“ஓ... அய்...யா... ரெடி...” என்றான் மாணிக்கம்.


“டேய்! மாணிக்கம்... இந்த மாதிரி கஷ்டமான வேலைக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீங்க’’ என்று நழுவப் பார்த்தான் செல்வம்.
“அப்ப... நீ நடுவரா இருந்து தீர்ப்பு சொல்லு.” என்றாள் மல்லிகா.


“இது அதைவிட ரொம்ப கஷ்டமாச்சே” என்று கிண்டலாகச் சொன்னான் மாணிக்கம்.


“இதுல என்ன கஷ்டம். சொல்ற விடையில எது சரி... எது தப்புன்னு சொல்றதுதானே... பாரு... நான் எப்படி சமாளிக்கிறேன்னு...” என்று இடுப்பில் கை வைத்தபடி “உம்... போட்டி தொடங்கட்டும்...’’ என்றான் செல்வம்.


“முதல் விடுகதைய நான் கேக்குறேன் மல்லிகா. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் அது என்ன?” என்றான் மாணிக்கம்.
“நிறுத்துடா நான் கருப்பா இருக்கேன்னு என்னைக் கிண்டல் பண்றதுக்குன்னே... இப்படிச் சொல்றியா?” என்று கோவப்பட்டான் செல்வம்.
“இல்லேடா... நேத்து எங்க அத்தை சொன்னாங்க. அதைத்தான் கேட்டேன்’’ என்றான் மாணிக்கம்.


“இல்லை... இல்லே... நம்ம மூணு பேர்லயே நான் கொஞ்சம் கருப்புன்னு... என்னை வச்சுதானே இந்த விடுகதையைச் சொன்னே...” என முறைத்தபடி சொன்னான் செல்வம்.


“கருப்புச் சட்டைக்காரன்னு உன்னை, கேலியா கிண்டலாச் சொன்னா... அடுத்து காவலுக்குக் கெட்டிக்காரன்னு உசத்தியா எப்படி சொல்லியிருப்பான்... அந்த விடுகதைக்கு விடை என்னான்னு யோசிக்க விடுடா செல்வம்’’ என்றாள் மல்லிகா.


“கருப்புச் சட்டைக்காரன்னு என்னைத்தான் மாணிக்கம் கேலியா சொல்லியிருக்கான்’’ என்றான் செல்வம்.
அந்த நேரத்தில் அங்கே வந்த கோமாளி மாமா, “என்ன விளையாட்டு நானும் கலந்துக்கலாமா?’’ என்றார்.


“மாமா... விடுகதை சொல்ற விளையாட்டு. அதுவே கஷ்டம்னு செல்வம் ஒதுங்கிட்டான். நானும் மாணிக்கமும் விளையாடலாம்னு முடிவு செய்து, செல்வத்தை எது சரி... எது தப்புன்னு சொல்ற நடுவரா ஆக்குவோம். முதல் விடுகதையை மாணிக்கம் சொன்னான்’’... என நடந்ததை மல்லிகா சொல்லும்போதே...
“எங்க விடுகதை சொன்னான்? கருப்புச் சட்டைக்காரன்னு... இவங்க ரெண்டு பேரைவிட நான் கருப்பா இருக்கேன்னு கிண்டல் பண்றான் மாமா’’ என்று சோகமாகச் சொன்னான் செல்வம்.


“இல்லே மாமா. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்னு விடுகதைதான் சொன்னேன்’’ என மாணிக்கம் சொல்லி முடித்தான்.
“இன்னைக்கு என்ன கதை சொல்லலாம்னு சிந்திச்சுக்கிட்டே வந்தேன். நீங்க போட்ட விடுகதையில இருந்தே கதை நினைவுக்கு வந்துடுச்சு’’... என்றார் கோமாளி.


“அப்ப விடுகதைய விடுவோம். நீங்க சொல்ற கதையைக் கேட்போம்’’ என மகிழ்வாகச் சொன்னான் செல்வம்.
“செல்வம்! கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்னு சொன்னது விடுகதைதான். அதுக்கான விடை_ பூட்டு. சரியா, மாணிக்கம்?’’ என்றார் கோமாளி.


‘சரிதான்’ என்று தலையை ஆட்டினான் மாணிக்கம். “மாமா! நீங்க கதையைச் சொல்லுங்க!” என்றான் செல்வம்.
“என்னோட சின்ன வயசுல _ ஒரு பொதுக்கூட்டத்துல பேசுன ஒரு பேச்சாளர் சொன்ன கதை. யார் எழுதுனதுன்னு எனக்குத் தெரியலே. உங்களுக்குத் தெரிஞ்சா... நீங்களும் சொல்லலாம்...” என்றார் கோமாளி.


“மாமா! கதையைச் சொல்லுங்க” என்றாள் மல்லிகா.


“அமெரிக்க நாட்டுலே கொஞ்ச காலத்துக்கு முன்னே செக்கச் செவேல்னு இருக்கிற அமெரிக்கர்கள் கருப்பின மக்களை அடிமைகளா வச்சிருந்தாங்க.
பல பணக்கார அமெரிக்கர்கள் வீட்டுல கருப்பின மக்கள் வீட்டு வேலை, தோட்ட வேலை செய்து வாழ்ந்துக்கிட்டிருந்தாங்க. அப்படி ஒரு பணக்கார அமெரிக்கர் வீட்டுல கருப்பினத் தம்பதிகள் இருந்தாங்க. அம்மா வீட்டு வேலைகளான வீடு சுத்தம் செய்றது, சமையல் செய்யிறது, பாத்திரம் கழுவுறது. துணி துவைக்கிறது இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வாங்க.


அப்பா... தோட்ட வேலை செய்யிறது, கடைக்குப் போயிட்டு வர்றது, புல் வெட்டுறது, செடிகளுக்கு தண்ணி விடுறது மாதிரி வேலையெல்லாம் செய்வாரு.
அந்தப் பணக்காரர் வீட்டுக்குப் பின்னாடி உள்ள ஒரு சின்ன வீட்டுல தங்கியிருந்த அவங்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். அவங்க ரெண்டு பேரும் பக்கத்தில இருந்த ஒரு சாதாரண பள்ளிக் கூடத்தில படிச்சிக்கிட்டிருந்தாங்க.
பணக்கார அமெரிக்கர்களுக்குச் சிவப்பா ஒரு பெண் குழந்தை இருந்தது.


ஒரு நாள் அந்த வீட்டுக்கு வெள்ளை அடிக்க சில பேர் வந்தாங்க. அப்ப கருப்பினக் குழந்தைகள் அவங்க அம்மா அப்பாகிட்ட போயி என்ன திடீர்ன்னு வீட்டுக்கு வண்ணம் பூசுறாங்கன்னு கேட்டாங்க.


அதுக்கு குழந்தைகளோட அப்பா, “அடுத்த மாதம் முதலாளியோட பெண் குழந்தைக்குப் பிறந்த நாள் வரப் போகுது. அதுக்காகத்தான் இந்த வேலையெல்லாம் நடக்குது’’ என்றார்.


கருப்பினக் குழந்தைகள் இருவரும் பள்ளிக்குப் புறப்பட்டுப் போகும் வழியில் இதைப் பற்றியே பேசிக் கொண்டனர்.


“முதலாளி பொண்ணுக்கு அடுத்த மாசம் பிறந்த நாளு வருதே, அதுக்கு நாம ஏதாவது பரிசு தரலாமா...?’’ என்று தம்பியைப் பார்த்து அக்கா கேட்க...
“நம்ம கிட்ட ஏது பணம்? நம்மளாலே எப்படி பரிசுப் பொருள் வாங்க முடியும்?” என்று கவலையோடு கேள்வியையே பதிலாகக் கேட்டான்.


“தம்பி! நமக்கு தினமும் வாங்கிச் சாப்பிட அம்மாவும் அப்பாவும் காசு தர்றாங்களே, அதை இன்னையிலே இருந்து சேத்து வச்சு... பிறந்த நாள் அன்னைக்கு ஏதாவது வாங்கித் தரலாம்” என்று தன் கருத்தைச் சொன்னாள் அக்கா.


“அக்கா... இன்னையிலே இருந்து எதுவும் வாங்கிச் சாப்பிடாம இருக்கணுமா சரி...” என்று தம்பியும் ஒப்புக்கொண்டான்.
நாள்தோறும் தங்களுக்குப் பலகாரம் வாங்கித் தின்ன தருகிற காசை ஒரு சின்னப் பெட்டியில் சேமிக்கத் தொடங்கினார்கள், அக்காவும், தம்பியும்.
எதிர்பார்த்துக் காத்திருந்த பிறந்த நாளும் வந்தது. அந்த வீடு முழுவதும் வண்ணம் பூசப்பட்டு அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புது மாளிகை போல் காட்சி அளித்தது.


பெரும் பணக்காரர்கள் பலர் பெரிய பெரிய கார்களில் பெரிய பெரிய பரிசுப் பொருள்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து வரிசையாக நின்று அமெரிக்கச் சிறுமிக்கு அன்பளிப்பாக வழங்கியபடி இருந்தனர். அந்த மாளிகையே விழாக் கோலமாக இருந்தது.
கருப்பின அக்காவும், தம்பியும் தாங்கள் ஒரு மாதமாகச் சேமித்த காசுகளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு ஓடினார்கள். தங்களிடம் இருக்கும் குறைவான பணத்திற்கு என்ன கிடைக்கும் என்று தேடினார்கள்.


கடைசியில் சின்னதாக ஒரு ‘பொக்கே’ எனும் மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தனர்.
பணக்காரர்கள் பரிசுப் பொருளோடு நிற்கும் வரிசையில் நின்றனர். அங்கிருந்த கருப்பினத் தொழிலாளிகளே, “ஏய்... தோட்டக்காரனோட பையனுக்கும், பொண்ணுக்கும் இங்கே என்ன வேலை போ... போ... பின் பக்கம் போங்க...’’ என விரட்டி விட்டனர்.


இருவரும் அழுதபடி வீட்டின் பின்புறம் சென்றனர். அங்கே விருந்தில் சாப்பிட்டவர்களின் எச்சில் தட்டுகளைக் கழுவிக் கொண்டிருந்த அவர்களின் அம்மா அதைப் பார்த்தாள்.


தன் பிள்ளைகளை வீட்டின் பின்புறமாக உள்ளே அழைத்துச் சென்று, அமெரிக்கச் சிறுமி நிற்கும் சின்ன மேடை அருகில் கொண்டுபோய் விட்டாள்.


மேடையில் ஏறிய அக்காளும், தம்பியும் தாங்கள் வாங்கி வந்த பூங்கொத்தைப் பிறந்த நாள் காணும் சிறுமியிடம் தந்தனர்.


அவள் அதை வேண்டா வெறுப்புடன் வாங்கி சட்டென அருகில் இருந்த குப்பைக் கூடையில் தூக்கி வீசினாள்.


இதைப் பார்த்த அக்காவுக்கும், தம்பிக்கும் வருத்தம் அதிகமானது. கண் கலங்கியபடி பின்புறம் வழியாக வீட்டை விட்டு மெல்ல மெல்ல நடந்து தெருவுக்கு வந்துவிட்டனர்.


ஒரு மாத காலம் வாங்கித் தின்னாமல் சேமித்த காசைப் போட்டு வாங்கிய பூங்கொத்தைக் கருப்பினத்தைச் சேர்ந்த நாம் தந்ததால்தான் குப்பையில் வீசினாளா அந்த அமெரிக்கச் சிறுமி என நினைத்து நினைத்து வருந்தினார்கள் _ அக்காவும் தம்பியும்.


சற்று தூரத்தில் ஒரு கேஸ் பலூன் வியாபாரி தள்ளு வண்டி ஒன்றில் பல வண்ண பலூன்களில் கேஸ் நிரப்பி, கட்டி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.


அதைப் பார்த்த அக்காவும், தம்பியும் அங்கே ஓடினார்கள். பலூன் வியாபாரி ஒரு வெள்ளை நிற பலூனில் கேஸ் பிடித்து நூலால் கட்டி வானில் பறக்க விட்டுவிட்டு ‘பலூன்... பலூன்...’ எனக் கூவினான். பலூன் உயர உயர வான்நோக்கிப் போனது. பலூன் வியாபாரியின் அருகில் சென்ற அக்கா “பலூன்காரரே... கருப்பு பலூனும் இதே மாதிரி மேலே போகுமா?’’ என்று கேட்டாள்.


கேஸ் பிடிச்சா... எல்லாமே மேலே போகும்! என்றார் பலூன் வியாபாரி.


கருப்பின அக்கா _ தம்பி முகத்தில் சிரிப்பு படர்ந்தது.” கோமாளி மாமா கதையை முடித்தார்.


எதுவுமே வண்ணத்தில் இல்லை. எல்லாம் நம் எண்ணத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் கைகோத்து நின்றனர்.

Share