Home முந்தைய இதழ்கள் 2022 ஏப்ரல் 2022 வெங்காயம்
புதன், 29 மார்ச் 2023
வெங்காயம்
Print E-mail

 

தண்ணீர் பாய்ச்சிப் பதிப்பது - இது
தரையைக் கீறி முளைப்பது!
மண்மேல் தோகை விரிப்பது - தழை
மடலை வாளாய் வளைப்பது!

குண்டாய் உருண்டு பருப்பது - வந்து
குவிந்து கடையில் கிடப்பது!
கண்டோர் வாங்கக் கிடைப்பது - நன்கு
கறிக்கு வாசம் கொடுப்பது!

கொண்டா என்றே எடுப்பது - ஏழைக்
குடும்பம் கையில் பிடிப்பது!
ஒன்றோ ரெண்டோ கடிப்பது - கூழை
உறிஞ்சி நன்றாய்க் குடிப்பது!

தொண்டு செய்தே பழுத்தவர் - வெண்மைத்
தூய தாடி வளர்த்தவர்!
மண்டும் மடமை ஒழித்தவர் - பேச்சில்
மணமாய்க் கமழ்ந்து ஒலித்தது!

எண்ணி யாரும் உரித்திடும் - போது
எல்லாம் தோலாய் இருப்பது!
கண்ணில் நீரும் சுரப்பது - ‘வெங்
காயம்’ பேரால் சிறப்பது!

- தளவை இளங்குமரன்,  
இலஞ்சி, தென்காசி

Share