கதை கேளு.. கதை கேளு..
Print

காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்

விழியன்

தன் பெற்றோர்கள் தொலைபேசியில் கார்ட்டூன் வீடியோ பார்த்துக்கொண்டே இருந்தால் அரை மணி நேரத்தில் அந்த தொலைபேசி, அதில் பார்க்கப்படும் அந்த கார்ட்டூன் கேரக்டராக மாறிவிடும். இரவு முழுக்க அந்த கதாபாத்திரமாக நடமாடிவிட்டு விடியற்காலை 5:45க்கு அதே தொலைபேசியாக மாறி அந்த அந்த வீடுகளுக்கு சென்றுவிடும்.  இது ஆண்டாண்டாக நடந்து வரும் வழக்கமான நடைமுறை.

ஒரு நான் இரவில் டோரா, ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், போலு, டோலு, மோட்டு, பட்லு, டோரிமான், நிஞ்சா என எல்லோரும் வரிசையாக வீடுகளில் இருந்து வெளியேறி ஒன்று கூடிச் சந்திக்கத் துவங்கினார்கள். மொத்தமாக 87 பேர் இருந்தார்கள்.
மெரினாவில் சந்திப்பதற்காகத் தான் சென்றார்கள், ஆனால், அங்கே 144 தடை உத்தரவு இருந்ததால் ஒரு மலை உச்சியில் எல்லோரும் சந்திக்கலாம் என முடிவு எடுத்தார்கள். அடுத்த நிமிடம் ஒரு மலை உச்சியில் நகரை நோக்கிப் பார்த்தபடி எல்லோரும் அமர்ந்தார்கள். வானில் முழு நிலவு பளிச்சென்று ஒளிவீசி இருந்தது.

ஸ்பைடர்மேனிடம், எங்களை ஏன் அந்த நிலாவுக்கு நீ அழைத்து செல்லக்கூடாது? என்று கேட்டாள் டோரா. அங்கே ஒரு டோரா இல்லை மொத்தம் பத்து டோராக்கள் இருந்தார்கள். “ஆமா ஆமா எங்களை அழைத்துச் செல்லுங்கள்’’ என பின்பாட்டுப் பாடினார்கள் மற்ற கதாபாத்திரத்தினர்.
டோலுவும் போலுவும் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டார்கள்.

“என்னிடம் இருக்கும் சிலந்தி வலை நிலா வரைக்கும் போகாதே’’ என்று வருத்தப்பட்டார் ஸ்பைடர்மேன். ஆனால் அதற்குள் எல்லோருக்கும் நிலாவுக்குச் சென்றுவரும் ஆசை வந்துவிட்டது. ஸ்பைடர்மேனை எல்லோரும் நிர்ப்பந்திக்கத் துவங்கினார்கள். ஸ்பைடர்மேனுக்கு ஒரு திட்டம் தோன்றியது. மீதம் இருந்த 86 பேரையும் இடது கையில் வந்த சிலந்தி வலையில் பிடித்துக்கொண்டார். வலது கையினை மேலே சென்ற விமானத்தை நோக்கிச் செலுத்தினார். சரியாக அவரது வலை விமானத்தின் வால் பகுதியைப் பிடித்துக்-கொண்டது. “ஸ்வையிங்’’ என எல்லோரையும் அரவணைத்து விமானத்தை நோக்கிப் பறந்தார். பின் பகுதியில் இருந்து ஒவ்வொருவராக விமானத்தின் மேலே ஓடினார்கள்.

விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. “தொம் தொம் தொம்’’ என்று தலைக்கு மேலே சத்தம். விமானிக்கு என்ன மேலே நடக்கின்றது என பார்க்கக் கூட வழியில்லை. கீழே இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்குக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஸ்பைடர்மேனின் திட்டம் என்னவென்றால், அந்த விமானத்தில் இருந்து விமானம் நிலாவுக்கு அருகே செல்லும்போது மீண்டும் நிலாவுக்கு வலை விடுவது தான். அதன்படியே விமானம் நிலாவுக்கு அருகே செல்லும் போது மீண்டும் எல்லோரையும் ஒரு கையில் பிடித்துக்கொண்டு நிலாவுக்கு அழைத்து சென்றார்.

எல்லா கதாபாத்திரத்திற்கும் புது அனுபவமாக இருந்தது. மெல்ல மெல்ல நடந்தார்கள். நிலாவைச் சுற்றிப்பார்த்தார்கள். அதற்குள் பூமியில் இருக்கும் எல்லா சேனல்களும் நிலாவில் ஏதோ நடமாட்டம் இருப்பதைக் கண்டுபிடித்து கேமராவை அதன்பக்கம் காட்டினார்கள். நிலாவில் ஒரு வெள்ளை மலையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. அருகே எல்லோரும் சென்றார்கள். ‘கதைகள் குட்டி போடட்டும்... கத கத கத கத கதயேய்...’ என்று பாடல் கேட்டது.  அங்கே இருந்தவர் ஒரு கதைத் தாத்தா.

“தாத்தா, எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்க’’ என எல்லோரும் கேட்டனர். அவர் கதை சொல்ல ஆரம்பித்தார். அந்தக் கதை மிக நீ...ண்...ண்...ண்ட கதையாக இருந்தது. பூமி பிறந்த கதையில் இருந்து ஆரம்பித்தார். கதை மணிக்கணக்கில் ஆரம்பித்து, நாள் கணக்கில் தொடர்ந்து, மாதக்கணக்கில் சென்றது.
கதாபாத்திரமாகிய செல்போன்கள் திரும்ப செல்போன்களாகவே திரும்பவில்லை. பெற்றோர்கள் எங்கே செல்போன் என தேடிக்கொண்டே இருந்தார்கள். அந்த யூடியூப் வீடியோவில் வரவேண்டிய கதாபாத்திரங்கள் திரும்பி வரவே இல்லை. நிலாவில் எவை நடந்து சென்றன, எங்கே மாயமாய் மறந்தன என இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. கதைத் தாத்தா கதையை இன்னும் முடிக்கவே இல்லை.


Share