Home முந்தைய இதழ்கள் 2022 மே 2022 நினைவில் நிறுத்துவோம்
வியாழன், 02 பிப்ரவரி 2023
நினைவில் நிறுத்துவோம்
Print E-mail

கோடைக் கால உணவுகள்

தமிழ்நாட்டில் கோடைக் (வெய்யில்) காலம், மழைக்காலம் என்று இரு பருவ காலங்கள் உள்ளன என்பது பிஞ்சுகளுக்குத் தெரியும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மழைக்காலம். ஏப்ரல், மே, ஜூன் கோடைக்காலம்.

மழைக்காலத்திலும் பாதிப்புகள் உண்டு, வெய்யில் காலத்திலும் பாதிப்புகள் உண்டு. வெள்ளம், புயல், வீதிகளில் நீர்த்தேங்கல், தூய்மை கெடல், சளி, சுரம், டெங்கு என்று பல பாதிப்புகள் மழைக்காலத்தில் உண்டு.

கோடையில் வெய்யில் கொடுமை, தண்ணீர்ப் பற்றாக்குறை, வறட்சி இவற்றின் விளைவாய் பல நோய்கள், குறிப்பாக அம்மை நோய் போன்றவை கோடைக்கால பாதிப்புகள் ஆகும்.

எனவே, மழைக் காலத்திலும் கோடைக் காலத்திலும் நாம் நமது உடை, உணவு, அன்றாட செயல்பாடுகளில் சிலவற்றை கவனத்தில் கொண்டு நடக்க வேண்டும்.

மழைக்காலங்களில், குடை, மழைக்கோட்டு, சுடுநீர், சூடான உணவுகள், கம்பளி ஆடை, போர்வை போன்றவற்றை தேவைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும். மின்சாரத் தாக்குதல், நீர்நிலைகளில் மூழ்கி இறத்தல், கழிவுநீர் கலத்தல், நீர் தேங்கி நின்று நோய் உருவாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதேபோல், கோடைக்காலங்களில் வெய்யில் மிகக் கடுமையாக இருப்பதால், குடை அல்லது தொப்பி இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது. கடும் வெயில் தலையைத் தாக்கினால் (SUN STROKE)உயிர் இழக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே கோடையில், முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 4:00 மணி வரை வெய்யிலில் செல்லாமல் இருப்பதுதான் சரியானது.
குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் கடும் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மாலை அய்ந்து மணிக்கு மேல்தான் விளையாட வேண்டும்.

புங்க மரம், வேப்ப மரம், மாமரம் போன்றவற்றின் நிழலில் வெய்யில் நேரத்தில் இருப்பது நல்லது. அறையில் இருந்தால் சன்னல்களைக் காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


பழைய சோறு

கோடைக்கால உணவுகள் என்று பட்டியல் இட்டால் அதில் முதலில் இருப்பது பழைய சோறு. பழைய சோறு என்பது இரவில் சோற்றுடன் தண்ணீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை வெட்டிப் போட்டு ஊறவைத்து காலையில் அப்படியே எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிடுவது.
இட்டலி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் சாப்பிடுவதைவிட பழைய சோறு எல்லா வயதினருக்கும் உகந்தது. சளித்தொல்லை இருந்தால் வெங்காயத்தை நீக்கிக் கொள்ளலாம்.

கோடைக்காலத்தில் காபி, டீ கூடாது. நீர் அதிகம் கலந்த மோரில் இஞ்சி, கறிவேப்பிலை போட்டு, அடிக்கடி அந்த மோரைப் பருகினால் உடலுக்கு மிகவும் நல்லது.

கடையில் விற்கும் குளிர் பானங்களை பருகக் கூடாது. அய்ஸ் (Ice) சேர்த்து அருந்தக் கூடாது.

இளநீர்:

கோடைக்கு ஏற்ற சிறப்பான பானம். இதில் ஊட்டச் சத்துகள் நிறைய உள்ளன. வெப்பத்தைக் குறைத்து, உடல் சூட்டை அளவோடு வைக்க இது உதவும். அதிகம் முற்றாத வழுக்கை இளநீர் சிறந்தது. மென்மையான அந்தத் தேங்காய் உடலுக்கு நலம் தரும்.

நுங்கு:

இது மலிவான ஆனால், மிகச் சிறந்த கோடை உணவு. அதிகம் முற்றாத இளநுங்கை அய்ந்து அல்லது ஆறு சாப்பிடலாம். சிறுவர்கள் இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். நுங்கு ஊட்டம் அளித்து, உடல் சூட்டைத் தணித்து சீராக நிலை நிறுத்தும்.

தர்பூசணி:

கலப்படமில்லா நல்ல தர்பூசணிப் பழம் வெய்யிலுக்கு சிறந்த உணவு. உணவு உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து காலை 11:00 மணியளவில் தர்பூசணி சாப்பிடுவது நல்லது. மாலையில் 4:00 மணிக்குச் சாப்பிடுவது நல்லது. தர்பூசணியின் ஓட்டுப் பகுதியில் ஒட்டியுள்ள வெண்மையான தசைப்பகுதி உடலுக்கு நல்லது. அதையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

வெள்ளரிப் பிஞ்சு:

இது கோடை வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி தரக்கூடியது. மோருடன் வெள்ளரிப் பிஞ்சு சேர்த்தால் அதிக நன்மை தரும். சிறுநீரகம் பாதிக்காமல் காக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
எதிலும் அய்ஸ் சேர்க்காமல் சாப்பிட வேண்டும், கடுமையான வெய்யிலில் உடல் சூடேறி இருக்கும்போது மிகக் குளிர்ந்த அய்ஸ் சாப்பிட்டால் உடலில் நரம்புகள் பாதிக்கும். வயிற்று உறுப்புகளும் பாதிக்கப்படும். எனவே, அய்ஸ், அய்ஸ் கிரீம் மற்றும் குளிர் பானங்களைக் கோடையில் சாப்பிடக் கூடாது. எப்போதும் சாப்பிடாமல் இருப்பதே உடல்நலத்திற்கு உகந்தது. கோடையில் அதிக காரம், புளிப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிடக் கூடாது. அதிக எண்ணெய் உள்ள பொருள்களையும் தவிர்ப்பது நல்லது.

கீரை, பழங்கள்:

மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சாத்துக்குடி மிகச் சிறந்தது. மணத்தக்காளி கீரை வெய்யில் காலத்திற்கு ஏற்றது. முருங்கைக் கீரை மலிவானது. மிக உயர்வான நன்மை தரக்கூடியது.

சோற்றுக் கற்றாழை:

சோற்றுக் கற்றாழை கோடைக்காலத்திற்கு மிகச் சிறந்தது. அதன் சோற்றை எடுத்து ஏழு முறை அலசி சுத்தம் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு எதுவும் வராது. வெப்ப நோய்கள் நீங்கும்.

வேப்பிலை, மஞ்சள் சாறு:

வேப்பிலையுடன் நீர் சேர்த்து அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காகச் சுண்டியதும் அந்தச் சாற்றை கால் டம்ளர் அளவு வாரம் மூன்று முறை பருகினால் அம்மை, காய்ச்சல் வராது, வந்தாலும் நீங்கிவிடும்.
எனவே, நம்மைச் சுற்றிக் கிடைக்கும் எளிய மலிவான பொருள்களைக் கொண்டே, கோடையின் கொடுமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிஞ்சுகள் கோடையில் எச்சரிக்கையாய் இருந்து, கோடையின் கொடுமையை எதிர்கொள்ள வேண்டும்.

Share