
பாட நூல்க ளோடு - நீயும் படிப்பாய் பலவகை ஏடு! கிடைக்கும் இன்பம் அறிவு - அதில் கிட்டும் சிந்தனைச் செறிவு!
நூலகம் சென்று படிப்பாய் - நல்ல நூல்களைத் தேடிக் குவிப்பாய்! உலகம் உன்னில் விரியும் - உன் உயர்வு கண்ணில் தெரியும்!!
நாளிதழ் வாரம் மாதம் - என்றே நன்றாகும் இதழின் கீதம்! வாளினும் கூர்மை எழுத்து! - அதை வாசிப்பாய் கண்கள் விழித்து!
சிறுவர் கதைகள் பாடல்களை - நீ சிறப்பாய்ப் படித்திடத் தேடியலை! பெருகும் கற்பனை வளத்தாலே -உன்னைப் பேர்பெற வைத்திடும் எழுத்தாலே!
பாடத்தைத் தவிரப் பிறநூல் - எதையும் படிக்காதே என்பவர் பதர்நெல்! தேடியே நூல்பல கற்றால் - வாழ்க்கை தெளிந்து ஒளிவீசும் அவற்றால்!
அறிஞர் பலரின் உயர்வு - நூல்கள் ஆய்ந்ததால் வந்த அறிவு! அறிஞர் ஆக நீயும் - பன்னூல் அறிந்தால் அறியாமை தேயும்!
- கோவி. பால. முருகு, வடலூர்
|