Home முந்தைய இதழ்கள் 2022 ஜூன் 2022 சிறார் கதை: நெல் காய்க்கும் மரம்
வெள்ளி, 09 ஜூன் 2023
சிறார் கதை: நெல் காய்க்கும் மரம்
Print E-mail

கோவி லெனின்


“நித்திலா...” என்று சமையலறையிலிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் அம்மா.

கையில் இருந்த செல்பேசியில் காணொலி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவுக்கு அதனை நிறுத்திவிட்டு, எழுந்திருக்க மனம் வரவில்லை. இருந்தாலும், அம்மா கூப்பிட்டுவிட்டார் என்பதால் எழுந்து சென்றாள் நித்திலா.

“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்.. அப்படியென்ன செல்போனில் கவனம்? பாலைக் குடி” என்று ஒரு குவளை நிறைய பாலில் சத்து நிறைந்த மாவையும் இனிப்பையும் கலந்து தந்தார் அம்மா.

சுவையாக இருந்தது நித்திலாவுக்கு.

பள்ளியில் நித்திலா நன்றாகப் படிக்கக்கூடிய மாணவி. அதே நேரத்தில், வீட்டுக்கு வந்தவுடன், செல்பேசியை எடுத்துக் கொள்வாள். அதனால்தான் நித்திலாவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கவலை ஏற்பட்டது.

“எப்போதும் செல்போனிலேயே இருந்தால் கண்பார்வை குறைந்துவிடும்” என்று ஏற்கெனவே எச்சரித்திருந்தார் அப்பா.

அம்மாவும் கடிந்துகொண்டார். “இதில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் இன்னும் நன்றாகப் படித்தால், அதிக மார்க் வாங்கலாம்” என்றார்.

பெற்றோர் சொன்னதை அப்போதைக்கு நித்திலா கேட்டுக் கொண்டாலும், எப்போது நேரம் கிடைத்தாலும் செல்பேசியை எடுத்துக் கொண்டு காணொலி பார்ப்பதும், அதில் விளையாட்டுகளைப் பதிவிறக்கி நேரத்தைச் செலவழிப்பதும், நிழற்படங்களைக் காட்சிப்படுத்தித் தொகுப்பதுமாக பொழுது போக்குவதில் ஆர்வமாக இருந்தாள். இன்றைக்கும் அதைத்தான் செய்து கொண்டிருந்தாள். அம்மா கூப்பிட்டதால் பால் குடிக்க வந்தாள்.
அம்மா, சோறு சமைப்பதற்காக அரிசியைக் களைந்து கொண்டிருந்தார். நித்திலா அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க இரண்டு டம்ளர் அரிசிதான் போடுறீங்க. ஆனா, நிறைய சோறு வருதே” என்றாள் ஆச்சரியமாக.

“அரிசி எங்கிருந்து வருதுன்னு தெரியுமா?” என்று கேட்டார் அம்மா.

“கடையிலிருந்து..” .-டக்கென சொன்னாள் நித்திலா.

அம்மா சிரித்தபடி, “அதைக் கேட்கலை. சோறு, அரிசியிலிருந்து வருவது போல, அரிசி எங்கிருந்து வருதுன்னு சொல்லு” என்றார்.
நித்திலா கொஞ்சம் யோசித்தாள்.

“உனக்கு நெல்லு காய்க்கும் மரம் தெரியுமா?” என்றார் அம்மா.

“ஊகும்.. மாங்காய் காய்க்கிற மரம் பார்த்திருக்கேன்.. தேங்காய் காய்க்கிற மரம் பார்த்திருக்கேன்.. நெல்லு எந்த மரத்தில் காய்க்கும்?” என்று கேட்டாள்.

“மாங்காய் காய்ப்பது மாமரம். தேங்காய் காய்ப்பது தென்னை மரம். நெல்லு, மரத்தில் காய்க்காது. அது வயலில் பயிராக விளையும். நெல்லை அறுவடை செய்து, அதன் மேல் தோலான உமியை நீக்கினால் உள்ளே அரிசி இருக்கும். அந்த அரிசியைத்தான் நாம் கடையிலே வாங்கி, சோறு வடிக்கிறோம்” என்று அம்மா சொன்னதை ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டாள் நித்திலா.

பால் குடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தவள், செல்பேசியில் வலைத்தளங்களுக்குச் சென்று, வயல்களில் நெற்பயிர் விளைந்து, அறுவடை செய்யப்படும் காட்சிகளைப் பார்த்தாள். 

பொங்கல் திருவிழாவுக்காக அப்பாவும் அம்மாவும் சொந்த ஊருக்கு நித்திலாவை அழைத்துப் போனார்கள். அப்போது, நெல்  வயலை நேரில் பார்த்தாள். நெற்கதிர்களை அறுவடை செய்வதைப் பார்த்துக் கொண்டாள்.

ஊரில்  இருந்தபோது பெற்றோரின் திருமண நாள் வந்தது. நித்திலா செல்போனில் தனது அம்மா-அப்பாவின் மண விழாவின்போது எடுத்த படங்கள், அதன்பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த படங்கள், அவர்களுடன் அவளும் இருக்கும் படங்கள் எல்லாவற்றையும் இணைத்து காட்சி வடிவமாக்கி, பின்னணியில் பிரபலமான பாடல் ஒன்றையும் சேர்த்து  காணொலியாக ஆக்கி அவர்களிடம் காட்டினாள்.

பெற்றோர் மட்டுமின்றி ஊரிலிருந்த உற்றார் உறவினரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஊரிலிருந்து திரும்பியபிறகு, பள்ளிக்குச் சென்றாள். அறிவியல் ஆசிரியர் செய்முறைப் பயிற்சி ஒன்றை வழங்கினார். அவரவர் கற்பனைக்கேற்ப புதிய கண்டுபிடிப்புகளை வடிவமைத்து, இரண்டு நாள்களில் எடுத்து வரவேண்டும் எனச் சொல்லியிருந்தார்.

வீட்டுக்கு வந்த நித்திலா தனது செல்பேசியில்தான் நேரத்தைக் கடத்தினாள். “ஸ்கூலில் கொடுத்த புராஜக்ட்டை முடிக்கலையா?” என்று அம்மா அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

இரண்டு நாள்கள் கழித்து பள்ளியில் ஆசிரியர் ஒவ்வொருவரின் செய்முறைப் பயிற்சியையும் பார்வையிட்டார்.

நித்திலாவிடம் அவர் வந்தபோது, தனது செல்பேசியை ஆசிரியரிடம் காட்டினாள். “மேம்.. நீங்க ‘பர்மிஷன்’ கொடுத்தால், நான் ‘டிசைன்’ பண்ணியிருக்கிறதை இதிலே காட்டுறேன்” என்றாள்.

ஆசிரியர் அவளின் மனநிலையைப் புரிந்துகொண்டு, “நீ என்ன செய்திருக்கேன்னு காட்டு” என்றார்.

செல்பேசியை ‘ஆன்’ செய்தாள் நித்திலா. அவள் உருவாக்கியிருந்த காணொலியை ஆசிரியரிடம் காட்டினாள்.

வயலில் விளையும் நெற்பயிர், மரத்தில் விளைவது போல கணினி வரைகலையில் உருவாக்கியிருந்தாள் நித்திலா. மரம் முழுவதும் நெல் காய்த்திருந்தது.

“எதற்காக மரத்தில் நெல் காய்க்கணும்?” என்று கேட்டார் ஆசிரியர்.

“மேம்.. எங்கப்பா கிராமத்தில இருந்து வேலைக்காக நகரத்துக்கு வந்துட்டாரு. நிறைய பேரு வீட்டுல அப்படித்தான் வந்திருக்காங்க. வயல் வேலையைக் கவனிக்க ஆள் இல்லை. வயலைப் பராமரிப்பதற்கு அதிகக் கவனமும் உழைப்பும் தேவை. இப்படி மரத்தில் நெல் காய்ச்சுதுன்னா, ஒவ்வொரு வீட்டு வாசலிலோ தோட்டத்திலோ ஒரு மரத்தை வளர்த்தால், அவங்கவங்க வீட்டுக்கான அரிசி கிடைச்சிடும்ல. என்னை மாதிரி நகரத்தில் படிக்கிறவங்களும் மரத்தை தண்ணி ஊத்தி வளர்ப்போம்ல” என்றாள் ஆர்வத்துடன்.

அவள் சொன்னதைக் கேட்ட ஆசிரியர், “வெள்ளிக்கிழமை உன் பெற்றோருடன் பள்ளிக்கு வரணும்” என்றார்.

வெள்ளியன்று பள்ளி அரங்கத்தில் விழா நடந்தது. மாணவர்களின் கற்பனைத் திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நித்திலாவின் “நெல் காய்க்கும் மரம்’ காணொலியை எல்லாரும் பார்க்கும் வகையில் திரையிட்டனர். அதைப் பார்த்ததும் தலைமையாசிரியர் முதல் அனைத்து ஆசிரியர்களும் நித்திலாவைப் பாராட்டினர்.

செல்பேசியை நித்திலா சரியாகப் பயன்-படுத்தியிருப்பதையும் அதற்குக் கிடைத்த பாராட்டையும் நேரில் கண்ட அவளது பெற்றோர் பெருமையடைந்தனர்.

Share