Home முந்தைய இதழ்கள் 2022 ஜூன் 2022 நினைவில் நிறுத்துவோம்
ஞாயிறு, 04 ஜூன் 2023
நினைவில் நிறுத்துவோம்
Print E-mail

சிகரம்

உடன்பியிலும் மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள்

அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒருவருக்கு உலக அறிவு வருவதற்கு 30 வயதுக்கு மேல் ஆகும். படிக்காதவர்களுக்கு அதற்குக்கூட வாய்ப்பில்லை. உழைப்பார்கள், உண்பார்கள், உறங்குவார்கள். இந்த சுழற்சி நாள்தோறும் நடக்கும். எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இருக்காது. ஆனால், இன்றைக்கு நிலையென்ன? இரண்டு வயதுக் குழந்தைகள்கூட தெளிவாக பல செய்தகளைத் தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்?

அக்காலத்தில் தொலைக்காட்சி இல்லை, செல்போன் இல்லை, கல்வி கற்கும் வாய்ப்பு இல்லை. வானொலி, செய்தித்தாள் போன்றவை கூட வசதி படைத்த, படித்த ஒரு சிலரின் பயன்பாட்டில்தான் இருந்தன. 99% மக்களுக்கு அவை கிடைக்காத நிலை.

சைக்கிள் கூட ஊருக்கு ஒன்று இரண்டுதான் இருக்கும். நடந்துதான் செல்ல வேண்டும். நகர்ப்புரங்களில் மட்டுமே கல்விக் கூடம் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் கற்பதும், உலகச் செய்திகளை அறிவதும் ஒருவருக்கு எளிதாக இல்லை.

ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடம். இன்னும் சொல்லப்போனால் இல்லந்தேடிவந்து கல்வியளிக்கும் நிலை. தொலைக்காட்சி, செல்போன், சைக்கிள், செல்போனிலே எல்லாவற்றையும் படிக்கும் வாய்ப்பு. அரசே சீருடை, உணவு, பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் இலவசமாக அளிக்கும் நிலை. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் சில பிள்ளைகள் படிக்காமல் இருக்கும் நிலை கவலையளிப்பதாக உள்ளது.
இதற்குப் பிள்ளைகளைவிட பெற்றோரே காரணம். அவர்களின் அறியாமையே அதற்குக் காரணம். ஒரு பிள்ளை படிக்காமல் இருப்பதற்கு வேறு எக்காரணமும் இன்றைக்கு இருக்க நியாயமில்லை பெற்றோரை இழந்து ஆதரவற்று விடப்பட்ட குழந்தைகள்கூட அரசினால் வளர்க்கப்படுகின்றன; கல்வி, உணவு, உடை, விடுதிகள் இலவசமாய் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

பெற்றோர் அறியாமையில் இருப்பினும், உடன் படிக்கும் பிஞ்சுகள் முயன்றால், படிக்காத பிள்ளைகளைப் படிக்கச் செய்ய முடியும். பள்ளிக்கு வராத பிள்ளைகளிடம் பள்ளிக்கு வரும்படி வலியுறுத்த வேண்டும். படிப்பதால் என்ன நன்மைகள், படிக்காமல் போனால் எவ்வளவு இழப்புகள், பின்னடைவு என்பனவற்றை எடுத்துச் சொல்லி படிப்பில் ஆர்வம் கொள்ளச் செய்ய வேண்டும். அவர்களின் பெற்றோரிடமும் பேசி, படிக்காத பிள்ளைகளைப் படிக்கச் செய்ய வேண்டும். பிஞ்சுகள் முயன்றால், பள்ளிக்கு வராத பிள்ளைகளையும் பள்ளிக்கு வரச் செய்ய முடியும்.

இடைநிற்றல் கூடாது

அதுவும் கோரோனா வந்த பிறகு சற்று அதிகமாக பள்ளிக்கு வந்த படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள் திடீரென்று பள்ளிக்கு வராமல் போவதும் நிகழ்கிறது. உடன்படிக்கும் பிள்ளைகள் பள்ளிக்கு வராமல் போனால், உடனே என்ன காரணம் என்பதைப் பிஞ்சுகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
விருப்பம் இல்லையா? படிப்பதைக் கடினமாகக் கருதுகிறார்களா, பண வசதி இல்லை என்கிறார்களா? பெற்றோருடன் வேலைக்குச் செல்கிறார்களா? என்ன காரணம் என்பதைக் கேட்டு அறிய வேண்டும். அதைப்பற்றி ஆசிரியர்களிடம் உடனடியாகச் சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால், தடையை நீக்கி, மீண்டும் அப்பிள்ளைகள் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

பிஞ்சுகளும் இடையில் நின்ற பிள்ளைகளிடம் பேசி அவர்களுக்கு கல்வியில் ஆர்வம் வரும்படிச் செய்ய வேண்டும்.

படிப்பை விட்டால் பாழாகும் வாழ்க்கை

படிப்பு என்பது அறிவு தருவது, விழிப்பு தருவது; திறமை வளர்ப்பது; வேலைவாய்ப்பு கொடுப்பது; வருவாய் தருவது; வாழ்வை உயரச் செய்வது. ஒரே குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளில் படித்த பிள்ளைகள் பிற்காலத்தில் வளமாக, உயர்வாக வாழ்வதையும், படிக்காத பிள்ளைகள் அறியாமையில், வறுமையில் வாழ்வதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

கல்வி என்பது இளம் பருவத்தில் தவறாது கற்கப்பட வேண்டியது. இளமையில் படிக்காமல், வயதான காலத்தில் வருந்திப் பயனில்லை.
அக்காலத்தில் ஒரு பாடல் சொல்வார்கள். இளமையில் படிக்காமல் போன ஒருவர், பிற்காலத்தில் படித்தவர்களெல்லாம் நல்ல நிலையில் இருக்க, தான் மட்டும் தாழ்நிலையில், வறுமையில், மதிப்பின்றி இருப்பதை எண்ணி வருந்தி, தன் தந்தையைப் பார்த்து,
“துள்ளித் திரிகின்ற வயதில்
துடுக்கடக்கி, பொறுப்புணர்த்தி
பள்ளிக் கனுப்பாத பாவியே!”
என்று வேதனையுடன் திட்டினானாம். எனவே, பிள்ளைகள் படிக்காமல் போவதற்கு பெற்றோரே பெருங்காரணம் என்பதை பெற்றோர்கள். உணர்ந்து, பிள்ளைகளைப் பள்ளிக்குத் தவறாது அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும்.

பிள்ளைகளை அன்றாடம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படிப்பில் ஆர்வம் ஊட்ட வேண்டும். பிஞ்சுகளும் தன்னுடன் பயிலும் பிள்ளைகள் இடையில் படிப்பை நிறுத்தாமல் பார்த்துக் கொளள் வேண்டும். கெட்டவர்களோடு சேராமல், கேடான உணவு உண்ணாமல், நல்ல நடத்தை, நல்ல நண்பர்கள், நல்ல நூல்கள் என்று நல்லவற்றைத் தேர்வு செய்து ஏற்று வாழவேண்டும்.

பொதுத்தேர்வு எழுதாத பிள்ளைகள்

அண்மையில் நடந்த பொதுத்தேர்வில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற செய்தி வந்துள்ளது. என்ன காரணம்? ஆய்வு செய்து பார்த்தால், இடைநிற்றலே காரணம் என்பது தெரிகிறது.

கொரோனா காலத்தில் பள்ளிகள் நடக்காத சூழலில் பெற்றோருடன் தொழில் செய்தவர்கள், கூலி வேலைக்குச் சென்றவர்கள், உல்லாசமாகத் திரிந்தவர்கள் மீண்டும் பள்ளி திறந்ததும் பள்ளிக்கு வராமல் கொரோனா காலத்தில் செய்ததையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற பிள்ளைகளைக் கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் படிக்கச் செய்யும் பொறுப்பு பிஞ்சுகளுக்கு அதிகம் உண்டு.
இளம் வயதில் படிக்காமல் உல்லாசமாகச் சுற்றிவருவது பிள்ளைகளுக்குப் பிடிக்கும். ஆனால், படிக்க வேண்டிய பருவத்தில் படிக்காமல் போனால், வாழ்நாள் முழுக்க சிரமப்பட வேண்டிவரும்.

இளமைக்கால உல்லாசமா? வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியான வாழ்வா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும். இளமையில் பொறுப்புடன் படித்தால்தான் எதிர்காலத்தில் சிறப்புடன் வாழ முடியும் என்ற உண்மையை பிஞ்சுகள் உணர வேண்டும், உணர்த்த வேண்டும்.

 

Share