Home முந்தைய இதழ்கள் 2022 ஜூன் 2022 கோமாளி மாமா-27
வெள்ளி, 09 ஜூன் 2023
கோமாளி மாமா-27
Print E-mail

தோட்டத்தில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் விடுமுறை நாளில் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

சற்று நேரத்தில் கோமாளி மாமாவும் வந்தார். “அடடே... இன்னைக்கு எல்லாருமே சரியான நேரத்துக்கு வந்துட்டோம்’’ என வியப்புடன் சொன்னார் கோமாளி.

“ஆமா மாமா! நான் எங்க வீட்டுலேயிருந்து கிளம்பி, மாணிக்கம் வீட்டுக்குப் போயி, அவனைக் கூட்டிக்கிட்டு வரலாம்னு போனேன். கதவு மூடியிருந்ததுன்னு தட்டினேன். மாணிக்கத்தோட அம்மா வந்து கதவைத் திறந்தபடி, “எத்தனை தடவை சொல்றது ஒண்ணுமில்லே போம்மா’’ன்னு சொன்னாங்க. அப்பறம் என்னைப் பாத்தவுடனே, “வா... மல்லிகா வா வா...’’ அப்படின்னு பேச்சை மாத்திட்டாங்க’’ என்றாள் மல்லிகா.

“மாமா, மல்லிகா வர்றதுக்கு முன்னாடி ரெண்டு மூணு பிச்சைக்காரங்க வரிசையா ஒருத்தரு மாத்தி ஒருத்தரு கதவைத் தட்டி பிச்சை கேட்டாங்க. மல்லிகா கதவைத் தட்டுனதும் பிச்சைகாரங்கதான் வந்துட்டாங்களோன்னு அப்படிச் சொல்லிட்டாங்க. எங்க வீட்டுப் பக்கம் இப்ப பிச்சைக்காரங்க தொல்லை ரொம்ப அதிகமாயிடுச்சுங்க மாமா...” என்றான்.

“இப்ப மட்டுமில்லே, எப்பவுமே பிச்சைக்காரங்க இருந்துக்கிட்டுதான் இருக்காங்க. சில பேரு வயத்துச் சோத்துக்கே வழியில்லாம பிச்சை எடுக்குறாங்க. சில பேரு உழைக்காம உக்காந்த இடத்திலேயே நல்ல வருமானம் வருதுன்னு பிச்சை எடுக்குறாங்க. சில பேரு உடல் பாதிப்புனால... குடும்பத்துல உள்ளவங்க புறக்கணிச்சதாலே... இப்படி பல வகையான பிச்சைக்காரங்க இருக்காங்க’’ என தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் செல்வம்.

“சரி... சரி... பிச்சைக்காரங்க கதையை விடுங்க. மாமா கதை சொல்லட்டும்’’ என்றாள் மல்லிகா.

கோமாளி மாமா கதையைத் தொடங்கினார். கயல்விழி அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி. விடுமுறை நாள்களில் தனது வீட்டுக்கு முன்புறத்தில், தான் நட்டு வளர்த்த எலுமிச்சைச் செடியில் வளர்ந்த எலுமிச்சம் பழங்களைப் பறித்து வீட்டின் அருகில் இருக்கும் மார்க்கெட் பகுதியில் கொண்டு சென்று விற்றுவருவாள்.

எலுமிச்சம் பழம் விற்ற பணமும் வீட்டுச் செலவுக்குப் பயன்படும் என்பதால், அவள் அம்மாவும் விடுமுறை நாளில் கயல்விழியுடன் சென்று பழம் விற்பதற்கு உதவுவார்.

ஒரு நாள் காலை நேரத்தில் எலுமிச்சம் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி. அந்த நேரம் அவள் வீட்டின் எதிரே இருக்கும் பெரிய மரத்தடியில் ஒருவர் வந்து உட்கார்ந்தார். பரட்டைத் தலைமுடி, தாடி, கிழிந்து போன உடை என வித்தியாசமான தோற்றத்தில் இருந்த அவரைக் கவனித்தாள் கயல்.

மரத்தடியில் உட்கார்ந்த அந்த நபர் தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து அடிபட்டால் கட்டு கட்டும் பேன்டேஜ் துணிகளை வெளியில் எடுத்து தன் கையிலும், காலிலும் அடிபட்டதுபோல் கட்டுக் கட்டினார்.

இதைப் பார்த்த கயல், “ஆளு பாக்கறதுக்கு நல்லாதான் இருக்காரு. அப்பறம் எதுக்கு அடிபட்டதுபோல கட்டுக் கட்டுறாரு’’ என எண்ணினாள்.
சற்று நேரத்தில் அந்த நபர் தன் பையிலிருந்து ஒரு பழைய அலுமினியத் தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு... நன்றாக இருக்கும் காலை தாங்கித் தாங்கி நடந்து போனார்.

‘ஓ... நன்றாக இருந்தால் யாரும் பிச்சை போட மாட்டாங்க, அடிபட்ட ஆளு போல வேஷம் போட்டா... பரிதாபப்பட்டு காசு போடுவாங்கன்னு இப்படிப் போறாரா...’ என நினைத்தபடி பழம் பறிக்கும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

சிறிய கூடை நிறைய எலுமிச்சம் பழம் சேர்ந்தது. அதை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் சந்தைக்குப் புறப்பட்டாள் கயல்.
சந்தையில் நிழலான ஓரிடத்தில் கோணி ஒன்றை விரித்துப் போட்டு, பழங்களைக் கூறு கட்டி வைத்தாள்.

“அம்மா, தாயே தர்மம் பண்ணுங்கம்மா” எனக் குரல் கேட்டது. அருகில் பார்த்தால்... தன் வீட்டு வாசலில் வேடம் போட்ட அந்தப் பிச்சைக்காரர் அமர்ந்திருந்தார். கடை வீதிக்கு வந்து போகும் சிலர் அவருக்குக் காசு போட்டனர்.

கயல்விழி விற்ற எலுமிச்சம் பழங்களைப் பலர் வாங்கிச் சென்றனர்.

திடீரென கயல்விழி பக்கத்தில் இருந்து பிச்சை எடுப்பவரைப் பார்த்து, “அய்யா எனக்கு ரொம்ப தண்ணி தாகம் எடுக்குது.. அதோ அந்தக் கடையில போயி தண்ணி குடிச்சிட்டு வர்றேன். அதுவரையில என் கடையைக் கொஞ்சம் பாத்துக்குறீங்களா... யாராவது வந்து கேட்டா அஞ்சு பழம் பத்து ரூபான்னு வித்து வையிங்க... நான் வந்துடுறேன்’’ என்றாள்.

“சரி போயிட்டு வாம்மா’’ என்றார் அந்த நபர்.

கொஞ்ச தூரம் போன கயல்விழி ஒரு பெட்டிக் கடையின் பின்னால் ஒளிந்து கொண்டு அந்த நபர் என்ன செய்கிறார் என்று பார்த்தாள்.

“அம்மா... தாயே... தர்மம் பண்ணுங்க...” என்று குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டு, எலுமிச்சம் பழத்தை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தினார்.
வந்து கேட்பவரிடம் அஞ்சு பழம் பத்து ரூபா என்று சொல்லி கூறுகட்டி வைத்த பழத்தை காகிதத்தில் பொட்டலம் கட்டிக் கொடுத்தார்.

கட்டுப்போட்டு தோளில் மாட்டியிருந்த கையைக் கொண்டு காசு வாங்கிப் போட்டு பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

இதையெல்லாம் கவனித்த கயல் சற்று நேரத்தில் திரும்ப வந்தாள். அந்த நபரைப் பார்த்து, “அய்யா.. உங்க கையும் காலும் நல்லாத்தானே இருக்கு. அப்புறம் எதுக்கு ‘அம்மா தாயே’ன்னு கெஞ்சிக்கிட்டு இருக்கிங்க... பிச்சை எடுக்கிறதை விட்டுடுங்க. இதுபோல சின்ன வியாபாரத்தைச் செய்யுங்க. இதுல வருமானமும் கிடைக்கும். தன்மானமும் நிலைக்கும்’’ என்றாள்.

கயல்விழி சொன்னதைக் கேட்ட அந்த நபர் கண்களில் கண்ணீர் வழிய... “நல்ல நிலையில இருந்த என்னை, குடும்பம் புறக்கணிச்சதாலே வீட்டை விட்டு, ஊரை விட்டு வந்து இப்படி வேஷம் போட்டு பிச்சை எடுக்கிற நிலையாயிடுச்சு. சின்னப் புள்ள என் நிலைமையப் பாத்து இப்படிச் சொன்ன பிறகு, இனி நான் பிச்சை எடுக்க மாட்டேன் தாயி’’ என்றார்.

“கவலைப்படாதீங்க. எங்க வீட்டுல எலுமிச்சை, வாழை, முருங்கைக்காய் இதெல்லாம் இருக்கு. அதையெல்லாம் நான் பறிச்சுக் கொண்டு வந்து தர்றேன். நீங்க விற்பனை செய்யுங்க. கிடைக்குற  சிறிய லாபத்தை நாம பங்கு போட்டுக்கலாம். அதனால, பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்’’ என்று பெரிய மனிதரைப் போல் பேசினாள் கயல்விழி.

கயல்விழி சொல்வதைக் கேட்டுக்கொண்டே தன் கை, காலில் கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தார் அந்த நபர்.
ஏமாற்றிப் பிச்சை எடுத்த ஒருவரை மனமாற்றம் செய்த மகிழ்ச்சியில் கயல்விழி இருந்தாள்.

மற்றவரின் ஏளனப் பார்வையிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் இருந்தார் அந்த நபர்.

“மாற்றம் எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்” என்று கதையை முடித்தார் கோமாளி.

“இப்படி மனமாற்றம் அடைய வேண்டிய நபர்கள் நம்மோடும் இருக்கிறார்கள். அவர்களை நாமும் மாற்றுவோம்” என எண்ணியபடி புறப்பட்டனர் மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும்.

Share