Home முந்தைய இதழ்கள் 2022 ஜூன் 2022 உலக நாடுகள்: இலங்கை (SRI LANKA)
வெள்ளி, 09 ஜூன் 2023
உலக நாடுகள்: இலங்கை (SRI LANKA)
Print E-mail

பெரியார் பிஞ்சுகளே! கடந்த ஒரு மாதமாகத் தொலைக்காட்சிகளில் இலங்கை நாட்டைப் பற்றிய செய்திகளையும், அங்கு நடைபெறும் மக்கள் போராட்டங்களையும் பார்த்திருப்பீர்கள். அப்படி என்னதான் பிரச்சினை என்றால், ஒன்றுமில்லை.  ஆசிய வளர்ச்சி வங்கியிடமும், அண்டை நாடான சீனாவிடமும் நாட்டின் பொருளாதார நிலையையும் மீறி கடனாக வாங்கிவிட்டனர். இன்று அந்தக் கடனை அடைக்க முடியாமல் நாட்டில் மிகப் பெரிய பஞ்சமும், மக்களுக்கு மின்சாரமும், உணவும் கிடைக்காத்தனால், மக்கள் போராட்டங்கள் மூலம் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கடன் அன்பை மட்டும் முறிக்காது. நாட்டின் அமைதியைக் கெடுத்து, புரட்சியை உருவாக்கும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் ஏன் அளவுக்கு மீறி வாங்கினார்கள் என்றால், அதுவும் மனித குலத்திற்கு எதிரான _ தமிழர்களுக்கு எதிரான போருக்காகத்-தான். போர் செய்தால் வெற்றி பெறலாம். ஆனால், மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை எந்த அரசாலும் சரிவரச் செய்ய முடியாது என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளது இலங்கையின் நிலைமை. பிஞ்சுகளே, இதனைக் கவனத்தில் கொள்வோம். அமைவிடமும்

அமைவிடமும் எல்லையும்:


 • இலங்கை, இந்தியாவுக்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.
 • பரப்பளவு: 65,610 ச.கி.மீ.
 • தலைநகரம்: கொழும்பு
 • நாட்டின் தென்பகுதி பொன்நிறமான கடற்கரையையும், மத்திய பகுதி பனிபடர்ந்த மலைகளையும் கொண்டுள்ளது.

வரலாறு:

 • முற்காலத்தில் இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோன்டு, சேலான், சேரன் தீவு எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
 • இலங்கையின் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இவர்களின் வரலாற்று நூல் மகாவம்சத்தின்படி கி.மு.6ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட இளவரசன் விஜயன் என்பவன் இலங்கையில் இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.
 • இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் காணக்கிடக்கிறது.
 • ஆரம்பத்தில் தமிழர் பண்பாட்டைப் பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரால் பவுத்தம் அறிமுகம் செய்யப்பட்டது,
 • 16ஆம் நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துகீசியர்கள், பிரித்தானியர்களால் ஆளப்பட்டன.
 • 1505இல் போர்த்துக்கீசிய தளபதி டொன் லொரேன்கா டி அல்மேதா முதலில் கொழும்பில் வணிகத் தளத்தை அமைத்தார்.
 • 1580இல் போர்த்துக்கீசியத் தளபதி கோட்டே இலங்கை மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தைப் பயன்படுத்தி நாட்டைத் தன் பெயருக்கு உயில் எழுதிக் கொண்டான்.
 • 1597இல் கோட்டே மன்னர் இறக்க, நாடு போர்த்துக்கீசியர் வசமானது.
 • 1638இல் ஒல்லாந்தர் (Holland)  சிறிது சிறிதாக போர்த்துக்கீசியர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர்.
 • 1796இல் பிரித்தானியக் கப்பல்களை திருகோணமலைத் துறைமுகத்தில் ஒல்லாந்தர் அனுமதிக்க மறுத்ததால், பிரித்தானியர்கள் திருகோண மலையையும், பின்னர் மற்றைய இலங்கைக் கரையோரப் பகுதிகளையும் கைப்பற்றினர்.
 • 1801இல் ஒல்லாந்தர் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயருக்கு இலங்கையைத் தத்தம் செய்தனர்.
 • ஆங்கிலேயர்கள் தமிழ் அரசனுக்கும், சிங்கள அரசருக்கும் உள்ள பகையைப் பயன்படுத்தி கண்டி பகுதியை 1815இல் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தனர். அதன் மூலம் முழு நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செலுத்தினர்.
 • பிரித்தானியர்களின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 1948இல் இலங்கை சுதந்தி¢ரம் பெற்றது.

தமிழர் - சிங்களர் இன முரண்பாடு:

 • தமிழர் _ சிங்கள இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளால், அய்ரோப்பியக் குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும், சிங்களச் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்-வதாகக் கூறிக்கொண்டு 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டுமே என்னும் சட்டம் மூலம் இனக் கலவரங்கள் நிகழத் தொடங்கின.
 • 1972இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் சட்டமும், பல்கலைக்-கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பான நடைமுறையாலும் நிலைமை மோசமாகி கலவரங்கள் உருவாகின.
 • தமிழர்கள் மீது தொடர்ந்து வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.
 • 1983இல் மோசமாக நிகழ்ந்த தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகப் புலம் பெயரத்தொடங்கினர்.
 • 1987ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் இந்திய அரசு ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது. தமிழர்கள் நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது. தமிழீழ விடுதலைப் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
 • 2001ஆம் ஆண்டில் நார்வே நாட்டு தூதர் மூலம் சமாதான முயற்சி செய்யப்பட்டது. இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நேரடிப் பேச்ச வார்த்தைகளும் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் தோல்வியில் முடிய போர் மீண்டும் துவங்கியது.
 • வரலாற்றில் இன விடுதலைக்காக நடைபெற்ற நீண்ட நெடிய, போர் 2008 --_ 2009 ஆம் ஆண்டுகளில் பன்னாடுகளின். ஆயுத உதவியுடன் சிங்களப் படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தின 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

புவியியல்:


 • வங்காள விரிகுடாவுக்குத் தென்மேற்கே 50 மற்றும் 100ழி அகலக் கோடுகளுக்கிடையிலும், 790 மற்றும் 820ணி நெடுங்கோடுகளுக்கிடையிலும் அமைந்துள்ளது.
 • உயரமான மலை பீதுருதாகால. இது கடல் மட்டத்திலிருந்து 2,524 மீட்டர்கள் உயரமானதாகும்.
 • நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை 170C  (62.60F)
 • அதிகபட்ச சராசரி வெப்பநிலை 330C  (91.40F)
 • நாட்டில் 103 ஆறுகள் உள்ளன. இவற்றுள் 335 கிலோ மீட்டர்கள் நீளமான மகாவலி கங்கை முதன்மையானது. காடுகள், மலைகள் சிறிய பகுதியாக இருந்தாலும் அவற்றில் அரிய வகையான விலங்குகள், பறவைகள், தாவரங்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு சிறப்பான பங்களிப்¬பச் செய்கின்றன.
விளையாட்டு:

 • இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாட்டம். (Volley Ball)
 • கால்பந்தாட்டம், டென்னிஸ், தடகள விளையாட்டுகள் ஆகியவை வளர்ந்து வரும் விளையாட்டுகள்.
 • கிரிக்கெட்டில் மிகச் சிறந்த அணியாக 1996ஆம் ஆண்டில் உலகக் கோப்பையையும், 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும், 2014ஆம் ஆண்டு அய்.சி.சி. நடத்திய 20 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.
மக்களும் மொழியும்:


 • மக்கள் இலங்கையர் என்றும் ஸ்ரீலங்கன் என்றும் ஈழத்தவர் என்றும் அழைக்கப்-படுகின்றனர்.
 • சிங்களர் பெரும்பான்மையாக உள்ளனர். மக்களின் சமய வழிபாடு பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம், சைவம் எனக் கலந்து உள்ளது.
 • தேசிய மொழியாக சிங்களமும்  தமிழும் பயன்படுத்தப்படுகின்றன.
 • பவுத்த ஆதிக்கம் அதிகம் உள்ளநாடு. பவுத்தப் பிக்குகளின் ஆதிக்கம் அரசியலிலும் உண்டு.
 • இங்கு காணப்படும் துடுப்பாட்டம், உணவு-முறை, ஆயுர்வேதம், பவுத்தக் கொடி மற்றும் ஏற்றுமதிகளான தேநீர், கருவா, இரத்தினக்கல் ஆகியவை உலகப் பிரசித்தம் பெற்றவை.
அரசும் ஆட்சி முறைகளும்:


 • மக்களாட்சிக் குடியரசு _ ஒற்றையாட்சி முறை.
 • அரசு ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டும் நாடாளுமன்ற முறைமையினாலும் ஆட்சி செய்யப்படுகிறது.
 • மக்கள் வாக்களிப்பின் மூலம் அதிபரும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையால் பிரதமரும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
 • அதிபர் நாட்டின் தலைவரும், முப்படைகளின் தலைவரும் ஆவார். ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகிறார்.
 • நாடாளுமன்றம் 255 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். ஆறு ஆண்டு களுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். 29 பேர் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
 • 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்படுகிறது.
 • அதிபர்: கோத்தபய ராஜபட்சே.
 • பிரதமர்: ரனில் விக்ரமசிங்கே
உணவு முறைகள்:

 • அரிசிச் சோறும், இறைச்சி வகைகளும் விரும்பி உண்ணப்படும் முக்கிய உணவு.
 • விழாக் காலத்தில் பாற்சோறு, அலுவா, கொக்கிஸ், முங்கெவு முதலிய இனிப்புப் பலகாரங்கள் சிறப்புப் பெற்றவை.
 • கொத்து எனப்படும் ரொட்டி, முட்டை, இறைச்சியுடன் கலந்த உணவு அதிகம் எடுத்துக்கொள்வர்.
 • சம்பல் (துவையல்), அச்சாறு (மலாய் உணவு), ரொட்டி, பபெத் (கறி உணவு), வட்டிலப்பம், பிட்டு போன்ற உணவு வகைகளை விரும்பி உண்கின்றனர்.
சுற்றுலாத் தளங்கள்:

 • சுற்றுலாவின் வருவாயே நாட்டின் பொருளாதாரத் துறையில் பெரும் பங்காற்றி வந்துள்ளது.
 • சிகிரியா கலைப் பாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படுகிறது. 1,144 அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன.
 • காசியப்பா மன்னரால் நிறுவப்பட்ட மலைக்-கோவில் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • மலைநகரான கண்டியில் உள்ள சிங்கள மன்னர்களின் மலைக்கோட்டை.
 • நுவரெலியா மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.
 • இந்தோமாலய வனப்பகுதி சுற்றுலாப் பயணி-களுக்கு பல உயிரினங்களையும் காணக்-கூடிய சிறந்த தலமாகும்.
 • யால தேசிய பூங்கா, வில்பத்து தேசிய பூங்கா, சிங்கராசக் காடு, மின்னேரிய பூங்கா போன்றவை பயணிகளைக் கவரக்கூடிய வகையில் அமைக்கப்-பட்டுள்ள சுற்றுலாத் தலங்களாகும்.
பிற தகவல்கள்:

 • உலகின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த நாடு. (சிறிமாவோ பண்டாரநாயகா)
 • ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
 • முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு.
 • உலகின் மிக உயர்தர தேயிலை விளைகிறது.
 • அதிகமான அளவில் கருவாவை (இலவங்கப்பட்டை) ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.
 • உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் இங்குதான் அமைக்கப்பட்டது.
பொருளாதாரம்:
 • நவரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துகளுக்கு புகழ் பெற்ற நாடு.
 • இலவங்கம், தேயிலை, ரப்பர், தென்னை போன்ற பயிர்கள் ஏற்றுமதியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
 • உணவுப் பொருள்கள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, தொலைத்தொடர்பு துறைகள் 1977ஆம் ஆண்டு முதலே தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன.
 • 2000ஆம் ஆண்டு வாக்கிலேயே மின்சாரப் பற்றாக்குறை, வரவு _ செலவுப் பிரச்சினைகளால் பொருளாதாரச் சரிவைக் கண்டு வருகிறது.
 • 2001ஆம் ஆண்டு இலங்கை அரசு -_ விடுதலைப் புலிகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தால் பொருளாதாரம் முன்னேறி வந்தது. அதன் பின் நடைபெற்ற போரால் நாட்டின் பொருளாதாரம் படிப்படியாகக் கீழ் இறங்கி வந்துள்ளது.
 • இன்று சரியான பொருளாதாரத் திட்டமிடல் இன்மையால் மக்கள் புரட்சி ஏற்பட்டு பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே தூக்கியெறியப்பட்டு ரனில் விக்ரமசிங்கே அமர்த்தப்படுள்ளார் அவருக்கும் கடும் எதிர்ப்பு உள்ளது.Share