Home முந்தைய இதழ்கள் 2022 ஜூன் 2022 கதை கேளு... கதை கேளு...
வெள்ளி, 09 ஜூன் 2023
கதை கேளு... கதை கேளு...
Print E-mail

விழியன்

வகுப்பில் ‘ஹே’ என்ற சத்தம் தான் கேட்டுக்கொண்டு இருந்தது. கோடைவிடுமுறை முடிந்த முதல் நாள் அது. அது எறும்புப் பள்ளிக்கூடத்தின் மூன்றாம் வகுப்பு. எறும்புகளின் பள்ளியில் மொத்தமே அய்ந்து வகுப்புகள் மட்டும் தான். எல்லா எறும்புகளும் இந்த அய்ந்து வகுப்புகளையும் படித்தே தீர வேண்டும். படித்த பின்னர் ராணுவப்படையிலோ, மருத்துவர் குழுவிலோ, உணவு சேமிப்புப் பெட்டகத்திலோ, ராணியின் பாதுகாப்புப் பிரிவிலோ எது பிடிக்கின்றதோ அங்கே சேர்ந்துகொள்ளலாம்.

‘சீம்சீ’ தான் இந்த சத்தம் வந்த வகுப்பின் ஆசிரியை. சிரித்தபடியே வகுப்பிற்குள் நுழைந்தபடி “என்ன குட்டி எறும்புகளா? விடுமுறை எல்லாம் சிறப்பா கொண்டாடினீர்களா?’’ என்று கேட்டது சீம்சீ. “ஓ’’ என்று கத்தினார்கள்.

“சரி விடுமுறை முடித்து எல்லோரும் வந்திருக்கீங்க. இன்னைக்கு என்ன செய்யலாம். நான் என்ன செய்யச்சொல்லப்போறேன்?’’
“நான் கழித்த விடுமுறை _ கட்டுரை எழுதச் சொல்லப்போறீங்களா” எனச்சொல்லி நோட்டும் பேனாவும் எடுத்து முதல் வரிசையில் இருந்த எறும்பு ஒன்று தயாரானது.

“மேடையில் வந்து எல்லோரும் அவங்கவங்க அனுபவங்களைச் சொல்லணும்? சரியா, சீம்சீ அம்மா?’’ என்றது துறுதுறுவென இருந்த மற்றொரு குட்டி எறும்பு.

“கோடை விடுமுறை வீட்டுப்பாடத்தை உங்ககிட்ட கொடுக்கணுமா?’’ என்றது ஓர் எறும்பு சோகமாக.

“பாடம் எடுக்கப்போறீங்க?

எல்லோரும் கை கால் வலுவடைய உடற்பயிற்சி செய்யப்போறோமா அம்மா?’’

வகுப்பு ஆசிரியரை எல்லோரும் அம்மா என்றோ அய்யா என்றோ தான் எறும்புப்பள்ளிகளில் அழைத்தனர். சீம்சீ தன் குரலை உயர்த்தி, “இல்லை, எதுவுமே இல்லை. உங்க எல்லோருக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கு. எல்லோரும் அந்தப் பெரிய முன்னறைக்குப் போங்க. அடிச்சிக்காம பிடிச்சிக்காம ரெண்டு ரெண்டு பேரா போங்க. உங்க புத்தகப் பைகளை இங்கயே வெச்சிடலாம்.”

பள்ளியில் ஏதேனும் அறிவிப்புச் சொல்லவேண்டும் என்றால் எல்லோரும் அந்த அறையில் தான் கூடுவார்கள். அய்ந்து வகுப்பு மாணவர்களும் அங்கே வருவார்கள். அறையின் வாசலில் பள்ளியின் முதல்வர் எறும்பு சிரித்தமுகத்துடன் நின்றுகொண்டு இருந்தது. கையில் ஒரு தட்டு. தட்டில் சர்க்கரை. ஆளுக்கு ஒரு சர்க்கரை உருண்டை.

“அய்யா, இவ்வளவு பெரிய சர்க்கரைத் துண்டை என்னால் எடுக்க முடியாது’’ என்றது ஒரு குட்டி எறும்பு. “அடேய் செல்ல எறும்பே, நம்மால் நம் எடையைவிட 20 மடங்கு எடையுள்ள பொருள்களை எடுக்கலாம். வா வா, முயற்சி செய்’’ என்றதும் குட்டி எறும்பு எடுத்துச்சென்றது. ஒரு குட்டி எறும்பு நொண்டிக்கொண்டே வந்தது, தலைமையாசிரியர் என்னவென்று விசாரிக்க “கோடையில் கபடி விளையாடும்போது அடிபட்டது’’ என்றது.  அதற்கு இரண்டு சர்க்கரைக்கட்டிகளைக் கொடுத்தது. தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தது. மற்ற வகுப்பு எறும்புகள் ஏற்கனவே உள்ளே அமர்ந்து இருந்தன.

மேடையில் துணைத் தலைமை ஆசிரியர் எறும்பு தோன்றியது. “வணக்கம். முதல் நாள் பள்ளிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.’’ முதல் வகுப்பில் சேர்ந்திருக்கும் சில எறும்புகள் பள்ளிக்கு வரப் பயப்படுவதால் அதன் பயத்தைப் போக்கவும் வரவேற்கவும் இந்த ஏற்பாடு. “இன்று வகுப்புகள் இல்லை. ஆசிரியர்கள் எல்லோரும் நடனமும் நாடகமும் பாட்டும் பாடி உங்களை மகிழ்விப்பார்கள்’’ என்றதும் “ஹே ஹே ஹே’’ என கைத்தட்டலும் விசிலும் கேட்டன.

எல்லா ஆசிரியர்களும் மேடையில் வந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள். சீம்சீ அம்மா பாடிக்கொண்டே நடனமாடினார்கள். தலைமை ஆசிரியர் எறும்பு தனி நடிப்பு செய்தது. அறை முழுக்க ஒரே சிரிப்பு சத்தம் தான். துணைத் தலைமை ஆசிரியர் எறும்பு ஒரு நீண்ட கதை சொன்னது. மனிதர்கள் பற்றிய ஒரு நகைச்சுவைக் கதை. இடையில் எல்லோருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. சில மாணவ எறும்புகளும் மேடையில் ஏறி பாடினார்கள் ஆடினார்கள்.

மாலை பள்ளிவிடும் சமயம் பள்ளிக்கு மேலிருந்து ஒரு பயங்கர சத்தம். “டங் டங் டங்’’ என்று எங்கோ இடிக்கும் சத்தம். இந்தப் பள்ளி ஒரு வீட்டின் முன்வாசலுக்கு அருகே தரையின் கீழே இருக்கின்றது. மேடை ஏறி மைக்கினைக் கைப்பற்றி தலைமை ஆசிரியர் எறும்பு சொன்னது  “குட்டி எறும்புகளே, நமக்குச் சில நாள்கள் முன்னரே தகவல் வந்தது. இந்த இடத்தில் குழி பறித்து நாய்க்கு வீடு கட்ட இந்த வீட்டு முதலாளி முடிவெடுத்துள்ளார். கவலைப்பட வேண்டாம் ஏற்கனவே அடுத்த பள்ளிக்கு இடம் பார்த்தாச்சு. அது தோட்டத்தில் இருக்கும் கிணற்றுக்குள் இருக்கு. கவலைப்பட வேண்டாம் கிணற்றின் அருகில் வந்ததும் வழிகாட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். நாளை அங்கே சந்திப்போம். இதே மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் போங்க, ஆண்டு முழுக்க நாம அங்க மகிழ்ச்சியா படிப்போம்’’ என்றது.

சீம்சீ ஆசிரியர் ஓடிவந்து “அய்யா, அது வானத்தில் இடி சத்தம். மனிதர்கள் யாரும் மேலே இல்லை. நாம இங்கயே இருக்கலாம்’’ என்றதும் மீண்டும் “ஹே ஹே’’ எனச் சத்தம்.

Share