Home முந்தைய இதழ்கள் 2022 ஜூலை 2022 புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம்
ஞாயிறு, 04 ஜூன் 2023
புழுக்கத்தைப் போக்கிய பழகு முகாம்
Print E-mail

கடந்த மே மாதம் 22 முதல் 26 வரையிலான 5 நாட்கள் தஞ்சை, வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்) 8 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மட்டும் பழகு முகாமில் பங்கு பெறலாம் என்று பெரியார் பிஞ்சு மாத இதழ் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் மாணவர்கள் 39 பேரும் மாணவிகள் 33 பேருமாக மொத்தம் 72 பேர் கலந்து கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை, பழகுமுகாம் இல்லை... ரொம்பவே புழுக்கம் பிஞ்சுகள் மனதில்! இந்த ஆண்டு பழகுமுகாம் கோடையிலும் அவர்களைக் குளிர்வித்தது.

 • பழகு முகாம் என்பது கலந்து கொள்ளும் குழந்தைகளுடன் பழகுவது என்பது மட்டுமல்ல, அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலிருந்து செய்யத் தவறும் பல்வேறு வாழ்வியல் சார்ந்த நல்ல பழக்கங்களையும் சேர்த்தே பழகிக் கொள்வது தான்! அதிலொன்று --_ அதிகாலை நேர நடைபயிற்சி! இது பொதுவாக வயதான பிறகுதான் என்பது இன்றைய பழக்கமாக இருக்கிறது. மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பழக்கத்தை சின்னஞ்சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்து, பிஞ்சுகளுக்குப் பழக்குகிறது.

 

 • பிஞ்சுகள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்ட பின்னர் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் பழகு முகாமில், குழந்தைகளின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ”தோள் பை” வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
 • மனநல ஆலோசகர் லில்லி புஷ்பம் “தங்கக் காசு, செல்லாத காசு” என்ற பொருளில் நடத்தினார். அதாவது நல்லது செய்வது தங்கக் காசு என்றும், தவறு செய்வது செல்லாக் காசு என்றும் அந்த வகுப்பின் கருத்து அமைந்தது.
 • வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த திண்டுக்கல் ஈட்டி கணேசனின் “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி.
 • தஞ்சாவூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பராமரிக்கப்படும் குந்தவை நீச்சல் குளத்தில் பெரியார் பிஞ்சுகள்.
 • குழு மனப்பான்மையை வளர்க்கும் சதுரங்கள் செய்முறை விளையாட்டுப் பாடம், மு.கலைவாணன் வழிகாட்டலில்!
 • நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள அறிவியல் உண்மைகளை செயல்-முறையாகவும் கேள்வி பதில் முறையிலும், செய்து காட்டினார் அறிவரசன். (அட, நம்ம ‘அசத்தும் அறிவியல்’ அறிவரசன்!).
 • பன்னோக்கு உள்விளையாட்டரங்கில் இயற்கை முறையில் பிஞ்சுகளே சமைக்கும்படி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேரீச்சம்பழம் லட்டு, வெற்றிலை லட்டு ஆகியவற்றை பிஞ்சுகளே  தயாரித்து அசத்தினர்.
 • காரைக்காலைச் சேர்ந்த இன்பத் தமிழனுக்கு 10 ஆம் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
 • சரபோஜி அரண்மனைக்கு சுற்றுலா சென்றனர் பெரியார் பிஞ்சுகள்!

 • ‘சைல்டு லைன்’ அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 • பிரபல அறிவியல் யூடியூபர் விக்ஷீ.நிளீ காணொலி மூலம் பங்கேற்று பிஞ்சுகளின் அறிவியல் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
 • பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆர்க்கிடெக் கல்விக் கட்டடத்திற்குப் பின்புறத்தில் உள்ள வெட்டவெளியில், ஆசிரியர் தாத்தா துபாயிலிருந்து கொண்டு வந்த “கோனோ கார்ப்பஸ் ரெக்டஸ்” எனும் பெயருள்ள மரங்களை பிஞ்சுகள் ஒவ்வொருவரும் நட்டனர். பிறகு அதற்கு உரமும், மண்ணும் கலந்து மூடினர். இம்மரம் 40 லிருந்து 50 அடி உயரம் வளரக்கூடியது. இது நவீன வகையான பூங்காக்கள் அமைப்பதற்குப் பயன்படும் மரமாகும். பங்கேற்றுக் கடமை ஆற்றினர்.

 • கடைசி நாள் காலை 10:00 மணிக்கு ஆசிரியர் தாத்தா சிங்கப்பூரிலிருந்து ஜூம் காணொலிக்காட்சி வாயிலாக பெரியார் பிஞ்சுகளிடம் பேசும் நிகழ்ச்சி!
 • பிஞ்சுகள் சார்பாக ஈரோடு தண்மதி, திருவாரூர் மு.க.கதிரவன், சென்னை யாழிசை, இசைப்பிரியா, ஆனந்தினி, பறை, அதியன் ஆகியோர் தங்கள் அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
 • பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், அனைவருக்கும் சான்றிதழுடன் இனி வரும் உலகம் புத்தகம் வழங்கினார்.

 • தீச்சட்டி எடுக்கும் மூடநம்பிக்கையைப் போக்கும் வகையில் பிஞ்சுகளுக்கும் ஒருங்கிணைப்-பாளர்களுக்கும் அதன் தன்மை விளக்கப்பட்டு கையில் தீச்சட்டி வழங்கப்பட்டது. அனைவரும் கையில் ஏந்தி தெளிவு பெற்றனர்.
எனது இனிமையான
பழகு முகாம் அனுபவம்!


நானும் என்னுடைய அண்ணன் கிஷோரும் தஞ்சாவூர் வல்லத்தில் நடைபெற்ற குழந்தைகள் பழகுமுகாமில் கலந்து-கொண்டோம். நான் முதல் முறையாகச் சென்றேன்.

எனக்கு அங்கு மகிழ்ச்சியாக இருந்தது. திரும்பி வருவதற்கு மனமில்லை. அப்படி எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது.

பெரியார் படம் முதன்முதலாகப் பார்த்தேன். அதில், குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது பெரியார் தாத்தாவின் அம்மா குழாயைக் கழுவிவிட்டு, பூஜை செய்து பிடிப்பார்கள். அப்போது நடந்த அந்தக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது.

ஆசிரியர் தாத்தாவோடு பேசியது, அதுவும் முதன்முறையாகப் பேசியது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

ஆணும் பெண்ணும் சமம் என்று பூங்குன்றன் தாத்தா சொல்லியது மிகவும் பிடித்தது. நீச்சல் வகுப்பு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. தினமும் இருந்தால் நன்றாக இருக்கும்.

கலைவாணன் அய்யாவோடு விளையாடி-னோம். பெரியார் தாத்தா படம் தந்தாங்க. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. வெளியில கூப்பிட்டுப் போனாங்க.

சரஸ்வதி மஹால் போனோம். ராஜா சிம்மாசனம் மற்றும் அவங்க எழுதி வச்சதைப் பார்த்தேன். அடுத்த ஆண்டும் வருவேன் _ என் நண்பர்களோடு.
நன்றி! வணக்கம்!

- ஆ.சு.ஆனந்தினி, 5ஆம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒரத்தூர்.
Share