
திட்ட மிட்ட வகையிலே தேர்ந்து செய்யப் பட்டவன் இட்ட பணிகள் செய்திடும் இரும்பு மனிதன் எந்திரன்
நாளை உலகில் எங்கணும் நமக்குத் துணைவன் எந்திரன் ஆலை வேலை செய்யவும் அமைந்த நல்ல எந்திரன்
அரங்கம் தனிலும் ஆடுவான் அழகு நடன எந்திரன் சுரங்கம் தனிலும் வேலையைச் சுழன்று செய்யும் எந்திரன்
மருத்துவத் துறையில் கூடத்தான் சிறுத்த உடம்பு எந்திரன் திருத்தமாக அறுவையைச் சிறப்பாய்ச் செய்யும் எந்திரன்
அணுவுலை தன்னுள் சென்றுமே ஆக்க வேலை செய்திடும் மனிதத் தோழன் எந்திரன் மகிழ்ச்சி அளிக்கும் எந்திரன்
தீயை அணைக்கும் துறையிலும் திறமை காட்டும் எந்திரன் தீய எண்ணம் சிறிதுமே தன்னில் இல்லா எந்திரன்
மூழ்கி ஆழக் கடலிலே முத்துக் குளிக்கும் எந்திரன் ஆள்கள் செய்ய முடிந்திடா அனைத்தும் செய்யும் எந்திரன்
திங்கள் செவ்வாய்க் கோள்களில் தங்கி வேலை செய்திடும் அங்கே ஆய்வு செய்ததை அனுப்பி வைக்கும் எந்திரன்
வண்ணப் பொம்மை உருவிலே வளைந்து நெளிந்து பாடியே சின்னக் சின்னக் குழந்தையைச் சிரிக்க வைக்கும் எந்திரன்
கேள்விக் குரிய பதில்களைக் கேட்ட உடனே சொல்லிடும் ஆழ்ந்த நுட்பச் செயலியின் அறிவு கொண்ட எந்திரன்
அறிவியல் நுட்ப வளர்ச்சியால் அடையப் பெற்ற எந்திரன் அறியா மை நோய்க்கெலாம் ஆட்ப டாத எந்திரன்.
- பெரு.இளங்கோ
|