Home முந்தைய இதழ்கள் 2022 ஆகஸ்ட் 2022 தங்கம் வெல்வாய்
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022
தங்கம் வெல்வாய்
Print E-mail

ஆகஸ்ட்-29 தேசிய விளையாட்டு நாள்

கால்பந்து கூடைப் பந்து
கைப்பந்து மட்டைப் பந்து
நூல்வலைப்பூப் பந்திங் கென்று
நுவன்றிடபல் பந்தாட் டங்கள்!

பலநூறு மீட்டர் தூரம்
பாய்ந்தோட்டப் பந்த யங்கள்;
இலக்கினையே குறிவைத் தெய்யும்
ஈட்டியுடன் அம்பு, குண்டு!

பளுதூக்கல் குத்துச் சண்டை
பயில்வானின் மல்யுத் தங்கள்
குளிர்நீரில் நீச்சல் போட்டி
குதித்தெழுந்து பாயும் ஓட்டம்!

நீளமுடன் உயரம் தாண்டல்
நெடுங்கோலை ஊன்றித் தாண்டல்
வாளதனால் கத்திச் சண்டை
வளையுமுடல் சாக சங்கள்!

பல்வேறு திறமை கொண்டோர்
பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி;
வல்லமையைக் காட்டு தற்கு
வழிவகையைச் செய்யும் போட்டி!

பதக்கங்கள் வெல்வ தற்குப்
பல்லாயி ரம்பேர் சேர்வர்;
நிதமும்தான் பயிற்சி செய்தால்
நீகூட வெல்வாய் தங்கம்!

- கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை


Share