Home முந்தைய இதழ்கள் 2022 ஆகஸ்ட் 2022 பேரண்டத்தைப் பார்த்தீர்களா?
செவ்வாய், 29 நவம்பர் 2022
பேரண்டத்தைப் பார்த்தீர்களா?
Print E-mail

விண்வெளிக்குப் பல செயற்கைக் கோள்களை ராக்கெட்டில் அனுப்பும்பொழுது ஆ.... வென்று வாய் பிளந்து வானையே பார்த்திருப்போம். பிரபஞ்சம் எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை உலகில் அறிவியல் சிந்தனை படைத்த அனைவருக்கும் உண்டு. அதை நிறைவேற்றும் வகையில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பேரண்டத்தை ஒளிப்படமெடுத்து அனுப்பியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாக்கியுள்ள தொலைநோக்கிக் கருவியான ஜேம்ஸ் வெப் அடுத்த தலைமுறைக்கான விண்வெளித் தொலைநோக்கியாய்த் திகழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது நாசாவின் புதிய மைல்கல் எனவும் கூறுகிறார்கள். நாசாவின் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்த பேரண்டத்தின் முதலாவது வண்ண ஒளிப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2022 ஜூலை 11 அன்று வெளியிட்டார். இந்தப் ஒளிப்படத்தின் மூலம் விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மய்யமாகத் திகழும் நாசா ஆய்வு மய்யம் இதுவரை மனிதர்கள் பார்த்திராத விண்வெளி உண்மைகளை உலக நாடுகளுடன் சேர்ந்து கண்டறியும் பணியில்  ஈடுபட்டு வருகிறது.

அய்ரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ஜேம்ஸ்வெப் என்னும் விண்ணாய்வுத் தொலைநோக்கியை நாசா சுமார் ரூ.80,000 கோடி செலவில் உருவாக்கியது. இதுபற்றி நமக்கு அய்ன்ஸ்ரூலி தொடரில் யாழு சிவா விரிவாக எழுதியுள்ளதைப் படித்திருப்பீர்களே!
இது 2021ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்களால் பாதிக்கப்படக் கூடும் என்பதால் இத்தொலைநோக்கியை பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தியுள்ளனர். இது அங்கிருந்து பேரண்டத்தைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது. மனிதக் கண்களுக்குப் புலப்படாத பகுதிகளையும் அகச்சிவப்புக் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்துள்ளது. பூமியிலிருந்து 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த பேரண்டத்தைப் படமாக எடுத்துள்ளதாகவும், பேரண்டத்தின் மிகச் சிறந்த முறையில் மிகச் சிறந்த தரத்துடன் (ஸிமீsஷீறீutவீஷீஸீ) பிடிக்கப்பட்ட படம் இதுவே எனவும், இந்த ஒளிப்படத்தை எடுத்து வெளியிடுவதற்கு ஆறு மாதங்கள் தேவைப் பட்டதாகவும், இந்தக் காட்சியைப் படமெடுக்க மட்டும் தொலைநோக்கிக்கு சுமார் ஒரு நாள் ஆனதாகவும் அதைச் செயல் முறைப்படுத்தி முறையாக வெளியிட இத்தனை நாள்கள் ஆயிற்று எனவும் நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் இந்தச் சாதனைமிக்க ஒளிப்படத்தை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது விண்வெளி ஆய்வுக்குப் புதிய வாசலாக இது அமைந்துள்ளது. நமது கண்களுக்குப் புலப்படாமல் இருந்த பால் வெளி உலகினை மிகப் பெரிய தலைசிறந்த தொலைநோக்கி படம்பிடித்துக் காட்டியுள்ளது" என்றும் கூறினார்.

இந்தப் படங்களைப் பற்றிய கூடுதல் செய்திகளை அடுத்தடுத்த இதழ்களில் விரிவாகப் பார்க்கலாம். இப்போது படங்களை பக்கம் 17_20இல் பாருங்கள். எப்போதும் பார்வையில் படும்படி வையுங்கள்.
- நிவேதா மகேந்திரன்


Share