Home முந்தைய இதழ்கள் 2022 ஆகஸ்ட் 2022 கதை கேளு.. கதை கேளு..:மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்)
செவ்வாய், 29 நவம்பர் 2022
கதை கேளு.. கதை கேளு..:மா.கனிமொழி ,பத்தாம் வகுப்பு ,(நோ செக்சன்)
Print E-mail

விழியன்

ள்ளிக்கு வழக்கத்தைவிட சீக்கிரம் கிளம்பி விடுகின்றாள் கனிமொழி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு (நோ செக்சன்) பிரிவில் படிக்கின்றாள்.

சிறு வயதில் இருந்தே என்ன செக்சன் என்று கேட்டுப் பழகியதால் இது வந்துவிட்டது. அய்ந்து நாள்களாக பள்ளியின் பின்புறம் புத்தகக் காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். பள்ளியின் மைதானத்தில்தான் புத்தகக் காட்சி அரங்கங்கள் இருக்கு. வகுப்பறையின் சன்னலில் இருந்து பார்த்தால் புத்தகக் காட்சி அரங்கின் பின்புறம் தெரியும். முன்புறம் சில உணவுக் கடைகளும் இருந்தன.

புத்தகக் காட்சி காலை 11:00 மணிக்குத்தான் தொடங்கும். ஆனால், சீக்கிரமே 8:30க்கு எல்லாம் சென்றுவிடுவாள். வாசலில் கீழே கிடக்கும் துண்டுச் சீட்டுகள், புத்தகங்களின் பட்டியல் கொண்ட துண்டறிக்கைகள் இவற்றை எடுத்து ஒவ்வொன்றாகப் படிப்பாள். அவள் வசிப்பது சின்ன நகரத்தில்தான். இதுவே இரண்டாவது புத்தகக் காட்சி. நகரத் தூய்மைப் பணியாளர்கள் வந்து பெருக்கும்போது அவர்களுடன் பேச்சுக்கொடுப்பாள்.

“ஆயா, நீ என்ன படிச்சிருக்க?”

வலது கையில் பிடித்த துடைப்பத்தின் பின்புறத்தை இடது கையில் குத்தி சரி செய்து விட்டு, தன் ஒட்டைப் பல் சிரிப்புச் சிரித்துவிட்டுக் கடந்துவிட்டார். முதல் இரண்டு வகுப்புகள் சன்னலில் இருந்து காட்சி அரங்கங்களைப் பார்ப்பாள். பின்புறம் தான் என்றாலும் அந்தப் பக்கம் புத்தகங்கள் என்ற குதூகலம் அவளுக்கு. வழக்கமாக இந்த இருக்கையில் அவர் அமர மாட்டாள். அய்ந்து நாள்களாக அனுமதி கேட்டு அமர்ந்து கொள்கின்றாள்.

“என்னடி வெளியவே பார்க்குற, மிஸ்கிட்ட சொல்லவா?”

“ச்சீ போ”

காலை இடைவேளையின்போது விட்டாள் ஓட்டம். நேராக புத்தகக்     காட்சிக்குச் சென்றிடுவாள். தினம் தினம் ஏதோ ஒரு பள்ளியில் இருந்து மாணவர்கள் வருவார்கள். அவர்கள் என்ன வாங்குகின்றார்கள் என ஆசையாகப் பார்ப்பாள். சில சமயம் அவற்றை வாங்கி அட்டைகளைப் புரட்டுவாள். எங்கே எந்தப் புத்தகங்கள் இருக்கு என அத்துபடியாகிவிட்டது. இரண்டாம் நாள் ஒரு பாடவேளையை இங்கே செலவழித்தாள். ஓரமாக அமர்ந்து ஒரு புத்தகத்தினை வாசித்ததில் பள்ளியையே மறந்துவிட்டாள். மீண்டும் ஒரு பாடவேளையை முடித்துவிட்டு மதியம் வந்துவிட்டாள். ஒரு நிமிடத்தில் வேகவேகமாகச் சாப்பிட்டு ஓடிவிட்டாள்.

ஓர் அரங்கில் “அன்பிற்கு ஆயிரம் முகங்கள்” என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றினைத் தேர்வு செய்து வைத்திருந்தாள். அதன் விலை அறுபது ரூபாய். கழிவு போக 54 ரூபாய். சிலரிடம் 55 ரூபாய் வாங்குவதையும் பார்த்தாள். சில்லரை இல்லை என்று சொன்னார்கள். கனிமொழியிடம் அவ்வளவு பணம் இல்லை.

வீட்டில் கேட்கவே முடியாது. பள்ளிக்குக் கட்டணம் இல்லை என்பதால் தப்பித்தாள். இல்லை என்றால் படிப்பையே நிறுத்தி இருப்பார்கள். தன் தோழிகள் பத்து பேரிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் கடனாய்க் கேட்டாள். ஒரு ரூபாய் என்பதால் கொடுத்துவிட்டார்கள். சங்கரன் மட்டும் அய்ந்து ரூபாய் கொடுத்தான்.

“ஒரு ரூபாய் போதும்டா” என்றாள்.

“பரவால்ல வெச்சுக்க” என்றான்.

அப்பவும் இருபது ரூபாய்தான் சேர்ந்தது. கையில் சேமிப்பாக அய்ந்து ரூபாய் வைத்திருந்தாள்.

அய்ந்தாம் நாள் மதியம் ஒரு சம்பவம் நடந்தது. புத்தக அரங்க வாசல் ஒன்றில் அய்ந்து ரூபாய் நாணயம் கிடைத்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் எடுப்பது போலத் தெரியவில்லை. எல்லா அரங்கத்தினையும் பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். ஓர் அரங்கத்தில் இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன.

“ஏன் அழறீங்க?”

“அக்கா, எங்க அம்மா அஞ்சு ரூபாய் கொடுத்தாங்க புக் வாங்க. ஆனா தாராந்துட்டேன். அதான் அழறேன்”

“நீ ஏன் பாப்பா அழற?”

“என் ஃப்ரெண்ட் அழறா, அதான் நானும் அழறேன்”

இதோ என்று அய்ந்து ரூபாயையும் அவள் பாக்கெட்டில் இருந்த மற்றொரு ரூபாயையும் வைத்து இருவருக்கும் புத்தகம் ஒன்றினை வாங்கிக் கொடுத்தாள். ஆரம்ப விலையே 10 ரூபாயாக இருந்தது.

இன்று கடைசிநாள். மனமெல்லாம் புத்தகக் காட்சியிலும் அந்தப் புத்தகத்திலும் இருந்தது. கையில் காசு சேரவே இல்லை. மதிய உணவு இடைவேளையின் போது எல்லா அரங்கத்தையும் சுற்றி வந்துவிட்டு அவளுக்கு விருப்பமான புத்தகத்தைத் தொட்டுப் பார்த்தாள். இதுவரையில் 3 கதைகளைப் படித்துவிட்டாள்.

பிரியா விடைகொடுத்துவிட்டு வகுப்பிற்கு வந்துவிட்டாள். சோகமாக தன் வழக்கமான இடத்தில் சென்று அமர்ந்தாள். சன்னலின் எட்டிப் பார்ப்பதைத் தவிர்த்தாள். அவள் பக்கத்தில் அமர்ந்த தோழியின் கையில் புதிய புத்தகம் இருந்தது.

“வாங்கினியா?”

“அங்க பூவரசன்னு ஒரு மாமா காட்சிக்கு வந்திருக்காரு. நிறைய புத்தகங்களை பசங்களுக்கு வாங்கிக் கொடுத்தாரு. உன்னைத் தேடினேன். ஏதாச்சும் ஒரு புத்தகமாச்சும் நீ வந்திருந்தா கிடைச்சிருக்கும்.”

அவ்வளவுதான் அடுத்த விநாடி பறந்தாள். எதிரே வந்த ஆசிரியரிடம், "மிஸ் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திட்றேன்" என ஓடினாள்.

புத்தகக் காட்சியில் நுழைவுச்சீட்டு இல்லை. நேராக உள்ளே நுழைந்தாள். அரங்கத்தைக் கவனிப்பவர்கள் சாப்பிடச் சென்றிருந்தனர். காலியாகவே இருந்தது. யார் பூவரசன், எப்படி இருப்பாரு, எங்க இருப்பாரு என்று எதையும் கேட்காமல் வந்துவிட்டாள். எதிரே அந்தப் பாட்டி வந்தார்.

“கனி பாப்பா சாப்பிட்டியா?”

“இரு பாட்டி அப்புறமா பேசறேன்...”

“நீ எங்க போயிட்ட...” என்பதைக்கூட கேட்காமல் யார் பூவரசன் எனத் தேடினாள். அரங்கங்களில் குழந்தைகள் இல்லை. வெளியே சாப்பிட போயிருப்பாரோன்னு ஒவ்வொருவரையுமாக பூவரசனா இருப்பாரோ என்று பார்த்தாள். அப்படி யாருமே தென்படவில்லை. சோர்ந்து போய் விழா மேடைக்கு எதிரே இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. தொண்டை வறண்டுவிட்டது.
பின்னால் இருந்து ஒரு குரல். “கனிமொழி...”. அவர் கையில் “அன்பிற்கு ஆயிரம் முகங்கள்” புத்தகம்.

Share