Home முந்தைய இதழ்கள் 2022 ஆகஸ்ட் 2022 புரியாத புதிர் அல்ல! : வேற்றுலக வாசிகள் வாழ்ந்த இடமா?
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022
புரியாத புதிர் அல்ல! : வேற்றுலக வாசிகள் வாழ்ந்த இடமா?
Print E-mail

உண்மைக்குப் புறம்பான, கற்பனைக் கதைகளுக்கு பஞ்சமில்லாத உலகம் இது.

கற்பனை உலகத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று மேற்குலகம்; மற்றொன்று கிழக்கு உலகம். அதாவது, அய்ரோப்பா, அமெரிக்கா போன்றவை மேற்குலகம்; ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்றவை கிழக்கு உலகம்.

கிழக்கு உலகக் கதைகள் பெரும்பாலும் மூடநம்பிக்கை மற்றும் மதக்கோட்பாட்டின் அடிப்படையில்  உள்ளவை. மேற்குலகம் அறிவியல் மற்றும் பகுத்தறிவில் சிறந்துவிளங்கும் காரணத்தால் அங்கேயும் அறிவியல் உண்மைகளை கதைகளாகத் திரித்துக்கூற ஒரு கூட்டம் உருவாகிவிட்டது
அப்படிக் கூறும் கதைகளில் வேற்றுலக மனிதர்கள், பறக்கும் தட்டு, பிளாமா ரேய்ஸ் மனிதர்களை உருமாற்றும் இன்ன பிற கதைகளைக் கூறுவார்கள்.

இவர்கள் சில இயற்கை நிகழ்வுகளையும் அறிவியல் கதைகளோடு ஒப்பிட்டுக்கூறி நம்பவைப்பார்கள்.

அப்படி அவர்கள் கூறும் ஒரு கதைதான் இங்கொரொங்கோரோ பள்ளத்தாக்கு பற்றியது. ஆப்ரிக்காவில் தான்சானியா நாட்டில் உள்ளது இந்தப்  பள்ளத்தாக்கு.

பொதுவாக, குளங்கள் வற்றிய பிறகு சுற்றிலும் குளத்துமேடு, நடுவில் பள்ளம், அங்கே புற்கள் மற்றும் களைச்செடிகள் வளர்ந்து இருக்கும்,  நாரைகள், கொக்குகள் மற்றும் தண்ணீர் வற்றிய பிறகு அந்த ஈரப்பதத்தில் வளரும் புல் பூண்டுகளயும் அதனும் இருக்கும் பூச்சி புழுக்களையும் உண்ணும் பலவகைப் பறவைகளின் சரணாலயமாகத் திகழும், சென்னையைப் போன்ற பெரு நகரத்தையே உள்ளே விழுங்கும் அளவிற்கு பள்ளம் கொண்ட பகுதி என்றால் அப்படியான ஒரு பள்ளம் தான் இங்கொரொங்கோரோ.

டைனோசர்கள் அழிந்ததற்கு காரணம் பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதால்தான் என்று படித்திருப்பீர்கள். டைனோசர்களுக்கு முந்திய ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம்தான் இந்த  இங்கொரொங்கோரோ.

பூமியில் இல்லாத, விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருந்த ஒரு விண்கல் இங்கு விழுந்ததால் இப்பகுதி மண்ணில் இன்றளவும் மெல்லிய கதிர்வீச்சு உள்ளது. அதுமட்டுமல்ல இந்தப் பகுதி மிகவும் செழுமையான பகுதியாக அறிவிக்கப்-பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் இங்கொரொங்கோரோ காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இப்பகுதியில் மனித குடியிருப்புகளுக்கும், வாழ்வாதார வேளாண்-மைக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், மசாய் மேய்ப்பர்கள் இப்பகுதியில் இருந்து வேறிடம் பெயரவேண்டி ஏற்பட்டது.

இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த பெரும்பாலான பழங்குடியின மக்கள் அந்தப் பள்ளத்தாக்கை விட்டு வெளியே வந்ததே கிடையாது, கி.பி.1800களில் ஜெர்மானிய காலனி ஆதிக்கத்தின் போதுதான் பள்ளத்தாக்கில் பெரிய உலகமே இருக்கிறது என்று அறிந்துகொண்டனர்.

இதற்குப் பெயர் வைக்க அவர்கள் திணறிய போது, சங்கு மற்றும் சிப்பிகளால் செய்யப்பட்ட பெரிய பெரிய மணிகள் கால்நடைகளின் கழுத்தில் கட்டப்பட்டு அவை மேய்ச்சலுக்குச் செல்லும் போது ஏற்படும் ஓசையைக் கொண்டு அப்படியே டிங்கொ ராங் டிங்கோரோங் என்று அழைத்து பின்னர் இங்கொரொங்கோரோ என்று பெயர் சூட்டப்-பட்டதாகச் சொல்கிறார்கள்.

இது தொடர்பான ஒரு நவீன புனைகதை ஒன்று உண்டு.

வேற்றுக் கோள்களில் வாழும் மக்கள் தங்களது பறக்கும் தட்டில் இங்கு வந்து இறங்கினார்கள் என்றும், அப்படி வந்து இறங்கிய வேற்றுக்கோள் வாசிகள் இப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்களை எல்லாம் விலங்குகள் ஆக்கிவிட்டார்கள் என்றும் கூறுவார்கள்.  இன்றும் இப்பகுதியில் கதிர்வீச்சின் காரணமாக வளரும் வித்தியாசமான தாவர வகைகளையும், இப்பகுதியில் மட்டும் காணப்படும் சிலவகை காட்டுப்பூனை மற்றும் மூக்கு நீளமான எறும்புதின்னி போன்றவற்றையும் காட்டி இது எல்லாம் வேற்றுக்கோள் உயிரினங்கள் என்றும் கூறுவார்கள்.

சரியான சட்டங்கள் இல்லாமல் செல்வந்தர்களின் வேட்டைக்காடாக 1900 முதல் 1950 வரை இந்தப் பள்ளத்தாக்கு இருந்தது, இதனால் இப்பகுதியில் பெரும்பாலான வேறுபட்ட உருவங்களைக் கொண்ட விலங்குகள் அழிந்தே போயின. இறுதியாக 1976ஆம் ஆண்டின் வேட்டை விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதிக்கு என்று தனி அமைச்சரவை உருவானது.

கிண்ணக்குழிப் பகுதி உள்பட இங்கோ-ரொங்கோரோ பாதுகாப்புப் பகுதிக்கு உட்பட்ட பெரும்பாலான நிலங்கள் இந்த அமைச்சரவையின் கீழ் வந்தது.இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி 1979இல் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் ஆனது.

வேற்றுலகவாசிகள் பூமிக்கு வந்ததற்கு இதுவரை எந்தச் சரியான ஆதாரமும் இல்லை. வேற்றுலகில் உயிர்கள் இருக்கின்றனவா எனத் தொடர்ந்து அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்துகொண்டே உள்ளனர்.

Share