Home முந்தைய இதழ்கள் 2022 டிசம்பர் 2022 படித்தீர்களா பெரியார் தாத்தா
வியாழன், 30 மார்ச் 2023
படித்தீர்களா பெரியார் தாத்தா
Print E-mail

பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,

தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் “பெரிய(£ர்) தாத்தா” என்ற அருமையான கதைச் சொல்லி, அறிவியல் சிந்தனையைப் பிஞ்சு உள்ளத்தில் பதியுமாறு எப்படி சுவைபடச் சொல்லிக் கொடுப்பது என்பதை அனைத்துப் பெற்றோர்களுக்கும் உணர்த்தியுள்ளார். அறிவியல் மனப்பாங்கை வளர்க்க தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்து, -தான் மட்டுமே சில நேரங்களில் ரத்தம் சிந்தினாலும்கூட, பிறருக்கு அந்த அவதியை - விளையாட்டுக்குக் கூட ஏற்படுத்தாது, ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் அமைதிப் புரட்சியை செய்து வெற்றி கண்ட பெரிய(£ர்) தாத்தாவைக் குழந்தைகள் உலகமும் இன்று குதூகலித்துக் கொண்டாடுகிறது!

அதை அருமையான _ புதுமையான ‘உத்தி’யுடன் ஒரு சுவையும் குறையாமல், சொக்க வைக்கும் வகையில் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அருண்.மோ அவர்கள், எழுதி வெளியிட்டிருக்கிறார்!

படித்தேன்... சுவைத்தேன்... மகிழ்ந்தேன்.

நாம் பெறும் இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டாமா?

எனவேதான் இதுபற்றி நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். ‘பெரியார் பிஞ்சு’ வெளியீடுகள் மூலம் குழந்தைகளுக்கு அறிவியலை சொல்லிக் கொடுக்கிறோம். அதுபோல தோழர் அருண்.மோ அவர்களின் இந்த புதிய ‘கதை சொல்லி’ புத்தகத்தின் பாணியே அலாதி! அற்புதம்!! மிக அருமை!!
பெரியார் தாத்தாவை அறிவியல் கேள்வி கேட்கும் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லி அறிமுகப்படுத்தி ஆழமாகப் பதிய வைக்கும் இம்முறை மிகவும் பாராட்டத்தக்க ‘டெக்னிக்’ ஆகும்!

முற்போக்கு, சுதந்திரச் சிந்தனையை குழந்தைகளிடம் விதைக்க விரும்பும் அனைவர் வீட்டிலும் அறிவியலை அறிமுகப்படுத்த நூலாசிரியர் அருணின் இந்த நூலை வாங்கி அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாகத் திரட்டி, குடும்பத்தோடு அமர்ந்து படித்து படித்துக் கேள்வி கேட்டு, நினைவிற் பதித்து, பிறகு அடுத்த பகுதிக்குச் சென்றால், மனதில் தானே பதிவாகி விடும்!

கண்ணுக்கும் அருமை; வண்ண வண்ண விருந்து - கருத்துக்கும் அருமை, கதைபாணி மள மள வென ஓடுகிறது!

‘இனிவரும் உலகம்’ பற்றிச் சிந்தித்தார் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பெரியார் தாத்தா! அதை உலகம் இன்று அனுபவித்து மகிழ்கிறது; பயன் பெற்று வளருகிறது!

புத்தக ஆசிரியர் இந்த நூலை அவரது “என் உயிர்ப் பொருள் மகன்  மகிழ்மாறனுக்கு” என்று அன்புடைமையாக்கியுள்ளது மிகப் பொருத்தம். அவரது பிறந்த நாளில் இந்த வெளியீடு!

அதன் தொடக்கத்திலேயே வீட்டில் மாட்டியிருக்கும் போட்டோவிலிருந்து கிளம்புகிறார் பெரியார் தாத்தா

அவரது பிஞ்சுகளுக்குப் புத்தக ஆசிரியர் அருண்.மோ அவர்கள் எப்படி பெரியாரைப் புரிய வைத்து ஈர்ப்பு ஏற்படுத்துகிறார் தெரியுமா?
இதோ:

அப்பா யோசிக்கும்போதே மாறன் கேட்டான், “அப்பா, ஹால்ல தாடி வச்ச தாத்தா ஒருத்தர் போட்டோ மாட்டியிருக்குல்ல அவரு யாருப்பா?” என்றான்.
“அவருதான் பெரியார்”

“பெரியார்னா”

“பெரியாருன்னா...?”

“ஸ்கூல்-ல உன் கூட எவ்ளோபேர் படிக்கிறாங்க?”

“ஹ்ம்ம்... 35 பேர் பா”

“35 பேரும் எப்படி உட்கார்ந்திட்டு இருக்கீங்க?”

“டெஸ்க்ல... ஒண்ணா”

“ஹ்ம்ம்.. அதுக்கு காரணம் பெரியார்தான். பல வருசத்துக்கு முன்னாடி இருந்த ஸ்கூல்ல எல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதினு ரெண்டா பிரிச்சு, மேல்ஜாதி பசங்கள தனியாவும் கீழ்ஜாதி பசங்கள தனியாவும் நடத்துவாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா ஒக்காந்துகூட சாப்பிட முடியாது. இதையெல்லாம் மாத்தினது பெரியார்தான். இது ஒரு சின்ன உதாரணம், இந்த மாதிரி நிறைய பண்ணியிருக்கார்..”

“ஜாதின்னா என்ன பா?”

“அத நீ போகப் போக தெரிஞ்சிப்ப, இப்ப நீ சின்னப் பையன்ல, உனக்கு அது தேவையில்லை.”

இப்படி, அடுத்து பெரியார் தாத்தா தானே வந்து விஞ்ஞான பாடம் எடுக்கிற முறையும் பிரமாதம்!

நூலை வாங்கிப் படியுங்கள்! விலை இன்றைய நிலவரத்தில் கூடுதல் அல்ல- ரூ.350 தான்!

எங்கும் பரவட்டும் இந்நூல்!

அறிவியல் பாலையும் அருந்துங்கள்!
பெரியார் தாத்தா பற்றி அறியுங்கள்!!

இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா
கி.வீரமணி


Share