Home முந்தைய இதழ்கள் 2022 டிசம்பர் 2022 கோமாளி மாமா-32
வியாழன், 30 மார்ச் 2023
கோமாளி மாமா-32
Print E-mail

முடியும்!

மு.கலைவாணன்

விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் வரவில்லை.

வழக்கமாக உட்காரும் மரத்தடியில் குழந்தைகளின் வருகைக்காகக் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் மூவரும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள். வந்ததும் வராததுமாக, “கோமாளி மாமா, எங்க பள்ளிக்கூடத்து சார்பில... மாவட்ட அளவுல நடக்கிற கலைப்போட்டியில... எங்க தமிழ் வாத்தியார் எழுதுன நாடகத்தில என்னை மன்னர் வேடத்திலே நடிக்கச் சொன்னாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குது மாமா” என்றான் மாணிக்கம்.

“அட, நல்ல சேதிதானே! எதுக்குப் பயப்படணும்,” என்றார் கோமாளி.

“மன்னராயிட்டா... நாட்டை எப்படி ஆள்றதுன்னு பயந்துட்டியா மாணிக்கம்” எனக் கேலியாகக் கேட்டாள் மல்லிகா.

“அது இல்லே... வந்து...” என மாணிக்கம் சொல்லத் தொடங்கியதுமே... சட்டென்று செல்வம் “எதிரி நாட்டுக்காரங்க படையெடுத்து வந்தா என்ன செய்யிறதுன்னு தெரியலே. அதான் மன்னராக அச்சப்படுறான்”... என்று சொல்லி முடித்தான்.

“அதெல்லாம் இல்லேடா... இன்னும் ஒரு வாரத்துலே போட்டி நடக்கப்போகுது அதுக்குள்ள நான் பேச வேண்டிய வசனத்தை மனப்பாடம் செய்யணும். அதை நல்லபடியா பேசி நடிக்கணும்கிற பயம் வந்துடுச்சு.- அதைத்தான் சொல்றேன்” என்றான் மாணிக்கம்.

“மாணிக்கம், நீ சொல்ற உன் சோகக் கதையைக் கேக்க நாங்க வரலே. கோமாளி மாமா சொல்ற கதையைக் கேக்கதான் நாங்க வந்தோம்...” என்றான் செல்வம்.

“சரி... சரி... கவலையை விடு மாணிக்கம். இன்னும் ஏழு நாள் இருக்கு. அதுக்குள்ள உன்னாலே மனப்பாடம் செய்து சிறப்பா நடிக்க முடியும்னு முதல்ல உன்னை நீ நம்பு. உங்க பள்ளிக்கூடத்திலே எத்தனையோ பேர் உன்னைப் போல இருக்காங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு உன்னாலெ முடியும்னு உன்னை நம்பி ஆசிரியர் உங்கிட்ட இந்தப் பொறுப்பைத் தந்திருக்கிறாரு... அந்த நம்பிக்கைக்கு உரியவனா... நீ இருக்கிறதே பெரிய சிறப்பு. அவரே உன்னை  நம்புறாரு. உனக்கு ஏன் உன் மேலே அவநம்பிக்கை. கவலையை விடு. உன்னாலே முடியும்... என ஆறுதலாகப் பேசினார் கோமாளி-
“ஆமா... உன்னாலே முடியும்... என செல்வமும் மல்லிகாவும் சேர்ந்து சொன்னார்கள்.

“வாங்க... மாணிக்கத்தோட மனக்கவலை போற மாதிரி... நான் முகநூல்லே பார்த்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். என்றார் கோமாளி.
கோமாளி மாமாவைப் பார்த்தபடி மூவரும் உட்கார்ந்தனர். கோமாளி பேசத் தொடங்கினார்.

கொஞ்ச காலத்துக்கு முன்னே கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டுனாங்க. அதுக்காக வெளிநாடுகள்ல இருந்து பெரிய பெரிய இயந்திரங்கள் கப்பல்ல வந்து... அங்கிருந்து லாரியில வந்து இறங்குச்சு. தொழிற்சாலைக்கான வேலைகள் மும்முரமா நடந்தது.

அப்படி வந்து இறங்குன ஒரு பெரிய இயந்திரத்தை முப்பது அடி ஆழம் உள்ள பள்ளத்துக்குள்ள இறக்கி வைக்கணும்.

தொழிற்சாலையின் கட்டுமானம் செய்யிற பெரிய பெரிய பொறியாளர்கள் என்னென்னமோ முயற்சியெல்லாம் செய்து பார்த்தும் அதை பள்ளத்துக்குள்ள இறக்கி வைக்க முடியலே. இப்ப இருக்குற கிரேன் வசதியெல்லாம் அப்ப இல்லே.

அதனாலே பல டன் எடை கொண்ட இந்த இயந்திரத்தை முப்பது அடி பள்ளத்துக்குள்ளே பத்திரமா இறக்கித் தர்றவங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றோம்னு விளம்பரப்-படுத்துனாங்க.

பல பேரு வந்து அந்த இயந்திரத்தை நேரிலே பாத்தாங்க. பாத்ததுமே சில பேரு, அய்யய்யோ... இது நம்மாலே முடியாதுப்பா... அப்படின்னு ஓடியே போயிட்டாங்க. ஒரு சிலரு ரொம்ப கஷ்டம், நாங்க முயற்சி செய்து பாக்குறோம். ஆனா இயந்திரத்தை பள்ளத்துக்குள்ள இறக்கும்போது அதுக்கு சேதாரம் ஆனாலும் ஆகலாம்னு சொன்னாங்க. அதுக்கே பத்து இலட்ச ரூபா கொடுங்க... பதினைஞ்சு இலட்ச ரூபா கொடுங்கன்னு கேட்டாங்க. ஆனா... எல்லாருக்குமே பள்ளத்துக்குள்ளே இயந்திரத்தை இறக்கும்போது பக்கவாட்டுல இடிச்சி இயந்திரத்துக்கு ஏதாவது சேதாரம் ஆயிடுமோன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ள இருந்தது.

அந்த நேரத்திலே ஒரு இளைஞன் வந்து அந்த இயந்திரத்தைப் பாத்தான். முப்பது அடி பள்ளத்தையும் பாத்தான்.

“இந்த இயந்திரத்து மேலே தண்ணி பட்டா ஏதாவது பழுதாகுமா?”ன்னு அங்கே இருந்த அதிகாரிகள் கிட்டே கேட்டான்.

“மழையிலேயே நனைஞ்சாலும் இயந்திரத்துக்கு எந்தவித பாதிப்பும் வராது”ன்னு அதிகாரிகள் சொன்னாங்க.

“அப்படியா சரி... நாளைக்கே இந்த இயந்திரத்தை பள்ளத்துக்குள்ள எந்தவித பாதிப்பும் இல்லாம இறக்கித் தர்றேன். எனக்கு அஞ்சு இலட்ச ரூபா கொடுங்க போதும்”னு சொன்னான்.

அங்கிருந்த அதிகாரிகளுக்கெல்லாம் ஆச்சரியம். அட இவன் மட்டும் இவ்வளவு குறைவான தொகை வாங்கிக்கிட்டு பத்திரமா பள்ளத்துலே இறக்கித் தர்றேன்னு சொல்றானே... எப்படி முடியும்னு யோசிச்சாங்க...

அதிகாரிகள் சில பேரு அந்த இளைஞனைப் பார்த்து “தம்பி... அது எப்படி முடியும்?”னு கேட்டாங்க.

“எந்தப் பழுதும் ஆகாமல் பத்திரமா பள்ளத்துக்குள்ள இந்த இயந்திரத்தை இறக்கித் தர்றேன். நம்பிக்கை இருந்தா அனுமதி கொடுங்க. அதை எப்படிச் செய்வேன்னு சொல்ல முடியாது.” அப்படின்னு திட்டவட்டமா சொன்னான்.

அதிகாரிகள் அவங்களுக்குள்ளே கலந்து பேசுனாங்க. மற்ற எல்லாரையும்விட இவன் குறைவான தொகை கேக்குறான். அதே நேரத்தில பத்திரமா இயந்திரத்தை பள்ளத்திலே இறக்கித் தர்றேன்னு உறுதியாவும் சொல்றான். அதனால இவன்கிட்டேய இந்த வேலையைக் கொடுப்போம்னு முடிவு செய்தாங்க. அந்த இளைஞனுக்கே அனுமதியும் தந்தாங்க.

மறுநாள் காலையில தொழிற்சாலைக்கு நிறைய லாரிகள் வந்து நின்றன.

இளைஞன் வந்து அந்தப் பள்ளத்துக்குப் பக்கத்திலே வந்து நின்னு ஒவ்வொரு லாரியிலே இருந்தும் ஆட்கள் பெரிய பெரிய அய்ஸ் கட்டிகளை இறக்கி பள்ளத்துக்குள் அடுக்குனாங்க. கொஞ்ச நேரத்துல தரைக்குச் சமமா பள்ளத்தை அய்ஸ் கட்டிகளாலே மூடிட்டாங்க.

இப்ப இயந்திரத்தை மெதுவா தள்ளிக்கிட்டு வந்து அய்ஸ்கட்டி மேலே நிறுத்திட்டாங்க.

பனிக்கட்டி உருக உருக மெல்ல மெல்ல இயந்திரம் பள்ளத்துக்குள்ளே இறங்க ஆரம்பிச்சுது.

அதுக்குள்ள இளைஞன் ஒரு வண்டியிலே இருந்து ஒரு தண்ணி இறைக்கிற சின்ன மோட்டாரைக் கொண்டு வந்து ரப்பர் குழாயை இணைச்சு பள்ளத்துக்குள்ள சேர்ந்த தண்ணியை வெளியே இறைக்க ஏற்பாடு செய்துட்டான்.

அவ்வளவுதான்! நாலு, அஞ்சு மணி நேரத்துல எந்த சோதாரமும் ஆகாம சிரமம் இல்லாம இயந்திரம் பள்ளத்துக்குள்ள பத்திரமா இறங்கிடுச்சு.
இதைப் பார்த்த அதிகாரிகள் எல்லாம் கைதட்டி கட்டி அணைச்சு இளைஞனைப் பாராட்டுனாங்க.

அவன் கேட்ட மாதிரியே அவனுக்கு அஞ்சு இலட்ச ரூபா பணத்தையும் கொடுத்தாங்க.

அய்ஸ்கட்டிகள், அதைக் கொண்டு வந்த லாரிகள் நீர் இறைக்கிற மோட்டார் எல்லாத்துக்குமே அவனுக்கு ஒரு இலட்ச ரூபாதான் செலவாச்சு. மீதி நாலு இலட்ச ரூபா லாபமும் கிடைச்சுது.

யாருகிட்டேயெல்லாம் இப்படிப்பட்ட மாற்று சிந்தனையும், சவால்களை எதிர்கொண்டு எளிமையா, சிறப்பா, செய்து முடிக்கிற ஆற்றலும் இருக்கோ அவங்க எல்லாருமே எங்கேயுமே வெற்றி பெறுவாங்க.” என்று சொல்லி முடித்தார் கோமாளி மாமா.

“மாமா... யாராலயும் செய்ய முடியாததுகூட நம்மளாலேதான் செய்ய முடியும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. அந்த இளைஞனைப் போல நானும் என் ஆசிரியர் எனக்குக் கொடுத்த மன்னர் வேடத்தை சிறப்பா நடிச்சு பள்ளிக்கூடத்துக்குப் பரிசு வாங்கித் தருவேன். வர்றேன் மாமா” என்று நம்பிக்கையோடு எழுந்தான் மாணிக்கம்.

அவனோடு கைகோத்தபடி மல்லிகாவும், செல்வமும் “யாராலும் முடியாதது. நம்மால் மட்டுமே முடியும்.... நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது” என்றபடி உடன் சென்றனர்.

(மீண்டும் வருவார் கோமாளி)


Share