Home முந்தைய இதழ்கள் 2022 டிசம்பர் 2022 கதை கேளு... கதை கேளு...
வியாழன், 30 மார்ச் 2023
கதை கேளு... கதை கேளு...
Print E-mail

விழியன்

அதிசய மலர் கதம்பழகி

மூச்சு வாங்கியபடி குளத்தின் அருகே சென்றுவிட்டது குட்டி யானை சிரா. குட்டி யானை சிராவிற்கு அந்தக் குளம் என்றால் ரொம்பவே பிடிக்கும். அந்தக் குளம் காட்டின் நடுவில் இருக்கின்றது. சின்னஞ்சிறு குளம்தான். நிறைய செடிகளும் கொடிகளும் பூக்களும் நிறைந்து இருக்கும். சிரா அந்தக் குளத்திற்குள் இறங்காது. ஆனால், குளத்தின் ஓரத்தில் நின்று தன் தும்பிக்கையால் தண்ணீர் எடுத்து, பூக்களின் மீது மழைபோலப் பொழியும். செடிகள் மகிழும். குட்டித் தவளைகள் குதித்து ஓடும். வெட்டுக்கிளிகள் சிதறி அடித்துக்கொண்டு ஓடும். ஒரு நாள் குளத்தில் இருந்த பூ ஒன்று சிராவிற்கு நன்றி சொன்னது.
“குட்டி யானையே ரொம்ப நன்றி. இது வெயில்காலம். மழை பொழிந்தால்தான் என் மீது தண்ணீர் பொழியும். எனக்கோ ஒரே ஒருநாள்தான் வாழ்க்கை. நல்லவேளை உன்னால் தண்ணீர் என்மேல் விழுந்துவிட்டது”

“அட... நான் நாள்தோறும் இப்படித்தான் செய்வேன். இனியும் செய்வேன்.” அன்றில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு பூவுக்கும் சிரா அங்கே வருவது நன்றாகத் தெரியும். தண்ணீரைப் பீய்ச்சி அடித்துவிட்டு, பூக்களிடம் “உங்க பெயர் என்ன?” என்று கேட்கும். அதுவே நாள்தோறும் வழக்கம். இன்றும் அப்படித்தான். ஆனால் ஒருவிதமான பதட்டம் இருந்தது. தண்ணீர் ஊற்றியது; பூ மகிழ்ந்தது. பெயரைக் கேட்டது. அந்தப் பூ மஞ்சளும் நீலமும் கலந்த நிறத்தில் இருந்தது. பார்த்தாலே மனம் அமைதியாகும் அளவிற்கு சாந்தமாக இருந்தது.

“கதம்பழகி”

“அருமையா இருக்கே!”

“ஏன் சிரா பதட்டமா இருக்கீங்க?”

“காட்டுல ஒரு சிங்கம் இருக்கு, அதுகிட்ட மட்டும் பத்திரமா இருக்கணும்னு அப்பா சொல்லி இருக்காங்க. அந்தச் சிங்கம் என்னைத் துரத்திக்கிட்டு வருது”
“அச்சச்சோ”

“அடேய் பூவே, என்னை இப்படிப் பயமுறுத்தாதே. நானே பயத்துல இருக்கேன்”

யானையின் கால்களைப் பார்த்தது கதம்பழகி. ஆம், அதன் கால்கள் வெடவெடவென ஆடிக்கொண்டு இருந்தன. என்ன செய்யலாம்னு யோசனை செய்துகொண்டு இருந்தது. இரண்டு குரல்கள் தூரத்தில் இருந்து கேட்டன.

“சிரா, அந்தச் சிங்கம் பக்கத்துல வந்துடுச்சு”. ஒன்று குட்டிக் குரங்கு கும்குமாக்கியின் குரல். மற்றொன்று குட்டிக் கரடி கண்ணாத்தாளின் குரல். அவை இரண்டுமே குளத்தின் அருகே இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டன. “மேல வா சிரா...” எனக் கத்தியது கண்ணாத்தாள். மூவருமே நண்பர்கள். ஒன்றாக விளையாடுவார்கள். கதம்பழகி சில நொடிகள் யோசித்தது.

“சிரா, என் மேல ஏறிக்கோ” என்றது.

மரத்தில் இருந்த கும்குமாக்கி குரங்கும், கரடி கண்ணாத்தாளும், சிராவும் விழித்தார்கள். குளத்தில் கால் வைக்காமல் வெளியே நிற்பதற்குக் காரணமே அங்கிருக்கும் தண்ணீர் வெளியேறிவிடும் என்றுதான். இதில் பூ மீது கால் வைக்கச் சொல்கின்றதே என யோசித்தது சிரா. அதே வேளையில் கதம்பழகி மெல்ல தலை சாய்த்தது.

சரி, வெச்சுத்தான் பார்ப்போமே என முன்னங்காலை எடுத்து பூ மீது வைக்கச் சென்றது. சர்ர்ரென சின்னப்பூ மிகப்பெரிய பூவாகி அதன் தண்டு நீண்டு சிராவினை மேலே எழுப்பிவிட்டது. குளத்தில் இருந்து ஒரு நீண்ட மரம் வளர்ந்து இருப்பதுபோலத் தெரிந்தது. சிரா மேலே செல்லவும் சிங்கம் வரவும் சரியாக இருந்தது.

சிங்கம் யானையைத் தேடியது. கர்ஜித்தது. காணாமல் போகவே இன்னும் கோபம் கொண்டது. ஆனால் நண்பர்கள் இருவரும் பதட்டத்தில் இருந்தார்கள். ஆமாம், சிராவின் வால் நன்றாகத் தெரிந்தது. வாயைத் திறந்தால் சிரா மாட்டிக்கொள்ளும். சிங்கம் மேலே பார்த்தது. மரத்தின் மீது சத்தம் சலசலப்பு வருதே என்றும் பார்த்தது. திரும்ப குளத்தினைப் பார்த்தது.

“செடியின் தண்டு ஏன் இவ்வளவு பெரியதாக என்று கூடவா யோசிக்காது”

“நாம இருப்பதுகூட அதுக்கு தெரியல”

குட்டிச் சிங்கம் அங்கிருந்து கொஞ்ச நேரத்தில் நகர்ந்தது. வெகு தூரத்திற்குச் சென்றதும் கதம்பழகி மேலிருந்து சிராவைக் கீழே இறக்கியது. சிரா நன்றி சொன்னது. நண்பர்களும் நன்றி சொன்னார்கள். அனைவர் மீதும் தண்ணீரை தன் தும்பிக்கையால் பீய்ச்சி அடித்தது.

இதனிடையில் குட்டிச் சிங்கத்தின் அம்மா அதனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தது- _ “புல்புல், இந்தக் கீரையை மட்டும் சாப்பிடு கண்ணு” என்று.

Share