தங்கும் எங்கும் பேரின்பம் |
|

புது ஆண்டுந்தான் பிறந்தாச்சு புதுமை எங்கும் மலர்ந்தாச்சு இதழ்களில் புன்னகை பூத்தாச்சு இல்லறம் எங்கும் ஒளியாச்சு; *மதுகை என்றும் உண்டாச்சு *மேவினர் ஒன்றாய் சேர்ந்தாச்சு முதுமை இளமை கண்டிடவே முந்தி யுரைத்தேன் வாழ்த்தொன்று!
தைமகள் வந்தாள் நடைபோட்டு தரணிக்கெல்லாம் உலையிட்டு! கைத்தளை யெல்லாம் நொறுங்கிடவே கழனிவாழ் உழவர் மகிழ்ந்திடவே அய்வகை நிலமும் விளைந்திடவே அம்பலம் ஏறி வந்தனளே வையகம் வாழ வந்திடவே வரவேற் றளித்தேன் வாழ்த்தொன்று!
பொங்கும் பொங்கல் செங்கரும்பும் பட்டொளி வீசும் ஆடைகளும் எங்கும் பாட்டுக் கொண்டாட்டம் ஏக போக ஒளிவெள்ளம் தங்கும் எங்கும் பேரின்பம் தமிழர்க் கின்று ஆனந்தம் பொங்கல் நாளில் அனைவருக்கும் பணிவாய்த் தந்தேன் என்வாழ்த்து!<
- நல்லாசிரியர், கவிஞர், கே.வி.ஜெனார்த்தனன்.
*மதுகை - வலிமை, அறிவு *மேவினர் - உறவினர்
|