
துள்ளித் திரியும் முயல்கூட்டம்; தொட்டால் சுருளும் முள்பன்றி;* புள்ளி மான்கள் பெருங்கூட்டம்; புலியின் கோப உறுமல்கள்;
சீறும் சிறுத்தைப் பதுங்கல்கள்; சிலிர்க்கும் சிங்கக் கர்ச்சனைகள்; ஊறிக் கிடக்கும் நீர்யானை உலவும் காண்டா மிருகம்தான்;
கூட்ட மாக யானைகள் குரங்கின் கூட்டம் மரங்களிலே; வேட்டை யாடும் வேங்கைகள்; வீரம் நிறைந்த காட்டெருது;
ஒட்டகச் சிவிங்கி உயரம்காண்; ஓநாய் நரிகள் கூட்டம்காண் எட்ட நிற்கும் வரிக்குதிரை; இடையே நகரும் மலைப்பாம்பு;
காட்டில் வாழும் விலங்குக்கு கடின மான வாழ்க்கைதான் வீட்டில் வளரும் நாய்பூனை விருந்தைத் தினமும் சுவைத்திடுமே;
பட்டி தன்னில் ஆடுகள்தாம்; பசுவும் கன்றும் தொழுவத்தில்; முட்டித் தள்ளும் காளைக்கும்; முழுதாய்க் காப்பு உழவனிடம்;
வண்டி இழுக்கும் குதிரைக்கும் பொதியைச் சுமக்கும் கழுதைக்கும் அண்டி வாழும் நிலைதனையே ஆண்டாண் டுகளாய்த் தந்துவிட்டோம்
வனத்தை அழிக்கா திருந்திட்டால் வாழும் காட்டில் விலங்குகள்தாம்; மனமி ரங்கி விலங்குகளை மனிதத் தோடு காத்திடுவோம்!
- கே.பி.பத்மநாபன் கோவை
|