Home முந்தைய இதழ்கள் 2023 பிப்ரவரி2023 பொங்கல் நாள் ஜனவரி 14 என்பது ஜனவரி 15 ஆக மாறிய மர்மம் என்ன?
சனி, 10 ஜூன் 2023
பொங்கல் நாள் ஜனவரி 14 என்பது ஜனவரி 15 ஆக மாறிய மர்மம் என்ன?
Print E-mail

த.வி.வெங்கடேஸ்வரன்

இந்த ஆண்டு பொங்கல் விழாவை ஜனவரி 15 அன்று கொண்டாடினோம். முன்னர் பொதுவாக ஜனவரி 14 அன்று தான் பொங்கல்.  அதாவது தமிழ் மாதமான தை-1, பொதுக்கணக்கு ஜனவரி 14ஆம் நாள் அன்று வரும். தற்போது, சில ஆண்டுகளில் ஜனவரி 14, சில ஆண்டுகளில் ஜனவரி 15 இல் பொங்கல் வருகிறது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1901 மற்றும் 1905 இல் ஜனவரி 13 அன்றும் 1902, 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14 அன்றும் பொங்கல் அமைந்தது. 2015, 2019, 2023, 2024, 2027 போன்ற ஆண்டுகளில் ஜனவரி 15 அன்றும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஜனவரி 14 அன்றும் பொங்கல் அமைகிறது. சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 13 அல்லது 14 இல் பொங்கல் என இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் ஜனவரி 14, சில ஆண்டுகளில் ஜனவரி 15 இல் பொங்கல் என மாறியுள்ளது.

ஏன் இந்த மாற்றம்?
மிகமிகச் சுருக்கமான விடை: - பஞ்சாங்கக் கணிதம் பிழை கொண்டது.  நெருப்புக் கோழி மணலில் தன் தலையைப் புதைத்துக் கொள்வது போலப் பழமை எனும் சேற்றில் பஞ்சாங்கம் புதைந்து விட்டது.
சற்று நீளமான விளக்கம்: பூமி தன்னில் தானே சுழன்று கொண்டிருக்கிறது. மேலும் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. சூரியனைச் சுற்றிவரும் பாதையைக் கணக்கில் கொண்டால் பூமி தன்னில் தானே சுழலும் அச்சு 23.5 டிகிரி சாய்வாக உள்ளது.  இந்த இரண்டு இயக்கம் தவிர பூமிக்கு அச்சுத்திசை மாறுமியக்கம் (precessional motion) எனும் இயக்கம் உள்ளது. இந்த இயக்கத்தைப் பஞ்சாங்கக் கணிதம் கணக்கில் கொள்வதில்லை. இது தான் பஞ்சாங்கக் கணிதத்தில் பிசகு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.
பஞ்சாங்கம் என்பது இந்தியாவிலிருந்த அந்தக் காலத்து நாள்காட்டி, வானியலில் அன்றைக்கு இருந்த அவதானிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன்பின் நிகழ்ந்திருக்கும் புதிய கண்டு பிடிப்புகளை அது கவனத்தில் கொள்ளவில்லை ஜோசியம், ஜாதகம் பார்ப்போர் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

அச்சுத்திசைமாறுமியக்கம்:
பூமியின் வடக்கு அச்சைக் கற்பனையாக நீட்டிக்கொண்டு போனால் வடக்கு திசையில் வானத்தில் குறிப்பிட்ட ஒரு புள்ளியை நோக்கி இருக்கும். இரவு வானில் அந்தப் புள்ளி அருகே தற்போது வடதுருவ விண்மீன் உள்ளது. ஆனால் பூமியின் அச்சு ஆண்டுக்கு ஆண்டு இந்த புள்ளியிலிருந்து விலகிச் செல்கிறது.  இந்த நகர்ச்சி மிகமிகச் சிறிதாக இருப்பதால் நம்மால் எளிதில் உணர முடியாது.
பம்பரம் சுற்றும் போதும் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதுடன் அதன் தலையும் தள்ளாடும் அல்லவா? அதுபோல் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதுடன், பூமியின் அச்சுத் திசையும் சுழல்கிறது.  இன்று பூமியின் வடக்கு அச்சு முனை துருவ விண்மீனை நோக்கி உள்ளது.  அச்சு சுட்டும் திசை மாறுவதால் முற்காலத்தில் துருவ விண்மீன் நோக்கிப் பூமியின் அச்சு இருக்கவில்லை. எதிர்காலத்தில் இதே போல இருக்காது. எடுத்துக்காட்டாகக் கிபி 15000 ஆம் ஆண்டில் பூமியின் வடக்கு அச்சு வேகா (அபிஜித்) எனும் விண்மீனை நோக்கி அமையும்.


பூமியைச் சுற்றி பந்து போன்ற உருவில் வானம் உள்ளது என கற்பனை செய்யலாம். இந்தக் கற்பனை பந்தை தான் ககோளம் (Celestial sphere, வான மண்டலம்) எனக் கூறுவார்கள். விண்மீன்கள் எல்லாம் இந்தப் பந்தில் பதிந்து உள்ளன போலக் கற்பனை செய்யலாம். பூமியின் பூமத்தியரேகைக்கு இணையாக ஒரு வட்டத்தைக் கற்பனையாக இந்த ககோளத்தில் வரைந்தால் அதுதான் வான நடுக்கோடு (Celestial equator). இதனை விஷுவத் வட்டம் அல்லது நாடிவலயம் எனக் கூறுவார்கள்.
ககோளத்தில் சூரியன் ஊர்ந்து செல்லும் ஞாயிற்றின் தோற்றப்பாதையை சூரிய வீதி என்பார்கள். இந்த இரண்டு வட்டங்களும் ககோளப் பந்தில் இரண்டு புள்ளிகளில் வெட்டும்.  இந்த இரண்டு புள்ளிகளைத் தான் விஷு என்கிறார்கள்.


இந்தப் புள்ளிகளில் தோற்றப்பார்வைக்கு சூரியன் நிலை கொள்ளும்போது பூமியில் சம இரவு பகல் நாள் - அல்லது விஷு தினம் ஏற்படும்.  பூமி சூரியனைச் சுற்றி வரும்போது சரியாக ஓர் ஆண்டு கடந்த பின்னர் வானில் அதே நிலையை அடைய வேண்டும். ஆனால் அச்சுத்திசைமாறுமியக்கத்தின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் அந்தப் புள்ளியைச் சுமார் இருபது நிமிடம் முன்னர் அடைந்து விடும்.  இதன் பொருள் சுமார் 72 ஆண்டுகளில் சுமார் ஒரு நாள் முன்னதாக அதே புள்ளியை வந்து அடைந்து விடும்.
இப்படித் தான் 72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் வீதம் என்ற முறையில் கடந்த 1900 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 14 இல் நிகழ்ந்த சித்திரை விஷு 26  நாள்கள் முன் சென்று  மார்ச் 21 இல் தற்காலத்தில் நிகழ்கிறது. சுமார் கிபி 78இல் தான் சாலிவாகன சகாப்தம் அல்லது சகா சகாப்தம் எனப்படும் நாள்காட்டி முறை வழக்கில் வந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வானியல் நிலைகளைக் கொண்டு அமைந்த பஞ்சாங்கக் கணிப்பையே தொடர்ந்து நிகழும் வானவியல் மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல் இன்றும் பின்பற்றுவதால் வானியல் படி மெய்யான சித்திரை விஷு (சம இரவு பகல் நாள்) மார்ச் 21அன்று நிகழ்ந்தாலும் பஞ்சாங்கம் இன்றும் ஏப்ரல் 14 என்று பிழையாகக் கூறுகிறது.
மேலும் பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் கால அளவு 365 நாள்கள் 5 மணி 48 நிமிடம் 46 வினாடி. ஆனால் ஆரியபட்டர் கணிப்பின் படி இது 365 நாள்கள் 6 மணி 12 நிமிடம் 30 வினாடி. சூரியச் சித்தாந்தத்தின் அடிப்படையில் இது 365 நாள்கள் 6 மணி 12 நிமிடம் and 36.56 வினாடி. இந்தப் பிழைகளும் பொங்கல் தினம் நகர்ந்து செல்வதிலும், பஞ்சாங்கக் கணக்கில் பிசகு ஏற்படுவதிலும் பங்கு செலுத்துகிறது.

பஞ்சாங்கப் பிழை:
அச்சுத்திசைமாறுமியக்கம் (Precessional motion) எனும் இயக்கத்தைப் பஞ்சாங்கங்கள் தங்களது கணிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  இதன் காரணமாக உள்ளங்கை நெல்லிக்கனி போலச் சில பிழைகள் தெளிவாகத் தெரியும்.
பொங்கல் நாளை உத்தராயணம் எனவும் கூறுவார்கள். உத்தராயணம் அன்று தான் கிழக்கு அடிவானில் சூரிய உதயப் புள்ளி அதிக பட்ச தென்கிழக்கில் அமைய வேண்டும். அதன் பின்னர் அடுத்தடுத்த நாள்களில் சூரிய உதயப் புள்ளி கிழக்கு அடிவானில் முந்தைய நாளை விடச் சற்றே வடக்கு நோக்கி அமையும்.   உள்ளபடியே டிசம்பர் 20/21 இல் தான் மெய்யாக உத்தராயணம் நிகழ்கிறது. எனினும், வாக்கியம், திருக்கணிதம் போன்ற எல்லா பஞ்சாங்கங்களும் பிழையாக ஜனவரி 14/15 - ஐ உத்தராயணம் எனத் தவறாகக் கூறுகின்றன.
மேலும் பொங்கல் நாளை மகர சங்கராந்தி எனவும் கூறுகிறார்கள். அதாவது வானில் சூரியனின் நிலை மகர ராசியில் இந்த நாளில் தான் புகும் என்பது இதன் பொருள். ஆனால் உள்ளபடியே ஜனவரி 14/15 இல் சூரியன் தனுர் ராசியில் தான் இருக்கிறது. டிசம்பர் 19 முதல் சுமார் ஜனவரி 19 வரை தனூர் ராசியில் இருக்கும் சூரியன், மெய்யாக ஜனவரி 20 அன்று தான் மகர ராசியில் புகும். எனவே பொங்கல் தினத்தை ஒட்டியுள்ள இரண்டு பஞ்சாங்கக் கணிப்புகளும் பிழை பட்டவை.

முன்னோர்கள் முட்டாள்களா?
ஆரியபட்டர் போன்ற புகழ்மிக்க வானவியலாளர்கள்  அச்சுத்திசைமாறுமியக்கத் தைக் கணக்கில் கொள்ளாமல் வானவியல் கணிதங்களைச் செய்தார்களா?  விண்மீன்களின் நிலையை உற்றுநோக்கி அதன் தொடர்ச்சியாக விஷ்ணுசந்திரா போன்ற வானவியலாளர்கள் அச்சுத்திசைமாறுமியக்கத்தை இனம் கண்டனர். பல பண்டைய இந்திய வானவியலாளர்கள் ஊஞ்சல் முன்னும் பின்னும் ஊசல் செல்வது போல அச்சுத்திசைமாறுமியக்கம் முன்னும் பின்னும் ஊசல் செய்கிறது என கருதினர். ஆனால் மெய்யாகப்  பூமியின் அச்சு சுட்டும் புள்ளி வானில் வட்ட இயக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதைச் சரியாக மஞ்சுளா (கிபி 932)  கணித்தார். இந்த இயக்கத்தினைக் கணக்கில் கொண்டு பஞ்சாங்கக் கணிதம் திருத்தம் செய்யப்பட்டு செழுமை செய்யப்படவேண்டும் என்பது வெள்ளிடைமலையானது.
அச்சுத்திசைமாறுமியக்கத்தைக் கணக்கில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய திருத்தம் ‘அயனாம்சம்’ எனப்படுகிறது. ஆயினும் பஞ்சாங்கங்கள் அயனாம்சத் திருத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை. பஞ்சாங்கக் கணிப்புகளில் அச்சுத்திசைமாறுமியக்கத்தைக் கணக்கில் கொள்ளாத நிராயனா முறையைத் தான் பின்பற்றி வருகிறார்கள்.
இந்திய பஞ்சாங்க முறை நாள்காட்டியில் மட்டும் பிழை ஏற்பட்டதா?
தொடரும்
(நன்றி: அருஞ்சொல்)    


Share