Home முந்தைய இதழ்கள் 2019 ஜனவரி 2019 களை கட்டிய காலை நிகழ்ச்சி
ஞாயிறு, 19 ஜனவரி 2020
களை கட்டிய காலை நிகழ்ச்சி
Print E-mail

பெரியார் பிஞ்சுகள் மாநாடு


திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சிகரமான பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து ஏராளமான பிஞ்சுகள் பங்கெடுத்தனர். முன்னதாக, மாநாடு குறித்த விளம்பரம் வெளியாகத் தொடங்கியதி-லிருந்தே, நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொலைப்பேசி, மின்னஞ்சல் வழி முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் தவிர, நேரில் வந்து நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கேட்போருக்கும் வாய்ப்பு வழங்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பெரியார் பிஞ்சுகள் பாடல், நடனம், உரைவீச்சு (தமிழ், ஆங்கிலம்), கவிதை ஒப்புவித்தல், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். மாநாட்டின் நிகழ்ச்சிகளை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். சென்னை இ.கவின் இங்கர்சால், தஞ்சை இரா.செந்தமிழ் அரசி, எ.செண்பகச் செல்வன் ஆகியோர் மிக இனிமையான குரலில், தெளிவாக உச்சரிப்புடன் அனைவரையும் கவரும் வண்ணம் இயக்கப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். திருச்சி க.அ.யாழினி தந்தை பெரியார், ஆசிரியர் குறித்த பாடலுக்கும், புரட்சிக் கவிஞரின் 'தூங்கும் புலியை பாடலுக்கும் பரதம் ஆடினார்.

பெரியார் தாத்தாவிடம் எனக்குப் பிடித்தவை என்ற பொதுத் தலைப்பில், எல்லோரும் ஒண்ணுதான் என்ற தலைப்பில் வேலூர் ஜீவிதா சந்திரமதி, முட்டாள்தனம் வேண்டாம் என்ற தலைப்பில் தஞ்சை ஜெ.ஜெ.காவியா, ஜாதியில்லா சமுதாயம் படைப்போம் எனும் தலைப்பில் தஞ்சை தமிழருவி, நேர்மையும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் காரைக்கால் க.இனியமதி, 'அய்யாவைப் பாதுகாத்த அன்னை மணியம்மையார் என்ற தலைப்பில் கண்மணி ஆகியோரும் உரையாற்றினர். திருச்சி வி.சி.வில்வம் அவர்கள் குழந்தைகளின் கருத்தை, மனப்பாங்கை நுணுகி அறியும் வண்ணம் நடத்திய நிகழ்ச்சி, மேடையில் பங்கேற்றவர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களாகப் பங்கேற்றிருந்த மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரின் கவனத்தையும் பெற்றது. குழந்தை வளர்ப்பில் குழந்தைகளின் கருத்து என்ன என்பதை அவர்களிடமிருந்து வெளிக்கொண்டு வருவதாக அந்நிகழ்ச்சி அமைந்தது.

தொடர்ந்து கோவை சு,நந்தனா, வேலூர் சு.அன்புச் செல்வன், சென்னை அ.கு.செம்மொழி, சுபாஷ் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை அறப்பேரவை மு.கலைவாணன் அவர்கள் எழுதிய ஜாதி- தீண்டாமை குறித்த வில்லுப்பாட்டினை மாணவர்கள் லட்சுமி பிரியா, ஜமீலா, வினிதா, கிருத்திகா, கோகுல், திருநாவுக்கரசன்,  விஸ்வேஸ்வரன் ஆகியோர் நகைச்சுவையுடனும், தெளிவான விளக்கங்-களுடனும், பாடல்களுடனும் நடத்திக் காட்டினர்.

தொடர்ந்து ஏகலைவனை ஏமாற்றிய துரோணாச்சாரியாரின் கதையை, கேள்வி கேட்டு சீர்செய்யும் நேர் செய்வோம் நாடகத்திலும், தொடர்ந்து நடைபெற்ற நடனங்களிலும் திருச்சி பெரியார் கல்வி நிறுவன மாணவர்கள் திவ்யா, சத்யா, தினிஷா, ஷாலினி, ஹீரா, சிநேகா, ஜெனிபர், தர்ஷணி, பவதாரணி, ரஷிதா முனைவர், சுமையா, ரிஃபானா பர்வீன், தாக்சாயினி, மகாலட்சுமி, சந்தியா,  சாந்தினி, மாலினி, க்ரிஷிகா, பூர்ணிகாஸ்ரீ, கனிகா, அமலீனாகிற்ஸ்டி, ரோஹினி, கவிப்பிரியா, தர்ஷினி, சாய்ரிதனி, வர்ஷினி, சாஹித்யா, போஜா, இந்திரா, கனிஷ்கா, ஹரினி, லூர்து சேவியர், அமுதவேங்கை, கீர்த்திகா ஆகியோர் பங்கேற்றனர். நேர் செய்வோம் நாடகத்தில் ஏகலைவனுக்கு ஆதரவான குரல் கைத்தட்டலை அள்ளியது.

தமிழகம் அறிந்த உளவியல் மருத்துவர் ஷாலினி பெரியார் பிஞ்சுகளுடன் உரையாடினார். அவர்களுக்கு கருத்துகளை வழங்கினார். கேள்விகளைக் கேட்டு உள்ளத்தை அறிந்தார். பெரியார் பிஞ்சுகளின் உள்ள வளம் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அறிவான சமுதாயத்தை உருவாக்கும் பெரியாரியத்தின் பண்பை மெச்சினார். பிஞ்சுகள் அரங்கில் இருந்தபடியே பதிலளித்து அசத்தினர்.

பெரியார் ஆயிரம் சிறப்பு விநாடி வினாவில் மதுரையைச் சேர்ந்த மு.தென்றல், மு.கனிமொழி, சு.திவ்யதர்ஷினி, சு.மகாமதி, திருச்சியைச் சேர்ந்த செ.சாதனா, அ.இதயத்துல்லா, திருப்பூரைச் சேர்ந்த கா.இளையபாரதி, தர்மபுரி கா.தென்னரசு பெரியார், காரைக்கால் தி.வெண்மதி, கிருஷ்ணகிரி ம.கதிரவன், தஞ்வாசூர் இரா.செம்மொழிச் செல்வன், கோபிச் செட்டிப் பாளையம் கு.ஸ்ரீஹரிணி உள்ளிட்டோர் சுயமரியாதை, இன உணர்வு, பகுத்தறிவு, சமூகநீதி என்று நான்கு அணிகளாகப் பிரிந்து பங்கேற்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான முதல்கட்டத் தேர்வு தமிழகம் முழுக்க சென்னை, புதுவை, திருச்சி, திருவாரூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய 8 மய்யங்களில் நடைபெற்றது. அதில் தேர்வான மாணவர்களே மேற்கண்டவாறு மாநாட்டு மேடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நேரடிக் கேள்விகள், விரைவுச் சுற்று, ஒளிப்படச் சுற்று, காணொளி - கேட்பொலிச் சுற்று, வண்டொலிச் சுற்று (Buzzer Round) உள்ளிட்ட 5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் முடிவில் சுயமரியாதை அணி முதலிடமும், இன உணர்வு, சமூகநீதி, பகுத்தறிவு ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் தாத்தா அவர்களும், இனமுரசு சத்யராஜ் அவர்களும் பரிசுகளை வழங்கினர். திரையில் கணினி ஒளிபரப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. விநாடி வினா நிகழ்ச்சி, அறிவியல்-வரலாற்றுக் கண்காட்சி தயாரிப்புப் பணியில் பேராசிரியர் கலைச் செல்வம், இறைவி, வை.கலையரசன், ச.தீபிகா, ரா.அருள், பெரியார் தொண்டறம் பிரசாந்த், கைத்தடி அறிவழகன், உடுமலை வடிவேல், பகலவன், பால்பாண்டியன், மு.கலைவாணன், இரா.சிவகுமார், அ.செ.செல்வம், உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

காலை நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளே இன்னும் முடிந்தபாடில்லை. அறிவியல் - வரலாற்றுக் கண்காட்சி, ஆசிரியர் தாத்தாவுடன் பிஞ்சுகளின் கேள்வி-பதில், மதியம் நடைபெற்ற பொம்மலாட்டம், குழந்தைகள் நிகழ்ச்சிகள், பேரணி, மாலை நிகழ்ச்சிகள்.... அப்பப்பா!

(தொடரும்)

Share