யாவும் ஆசான்!
Print

செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்

தாய்மை அன்பைக் கற்பிக்கும்

தாய்தான் நமக்கு முதலாசான்;

தூய்மை யான பாசத்தைக்

கற்பிப் பாரே தந்தையும்தான்;

எண்ணும் எழுத்தும் கற்பிப்பார்

என்றும் ஆசான் பள்ளியிலே;

மண்ணில் இயற்கைத் தோற்றமெல்லாம்

நமக்கே ஆசான், அறிவீரே!

கடமை தவறாச் செயல்புரிய

கற்பிப் பதுவோ கதிரவன்தான்;

திடநெஞ் சினையும் கொண்டிடவே

தெளிவாய்க் கூறும் பெருமலையே;

காலைச் சேவல் கூவலிலே

கற்போம் நேரம் தவறாமை;

வேலை செய்யும் சுறுசுறுப்பை

விளக்கிக் கூறும் தேனீக்கள்!

வருங்கா லத்தின் தேவைக்கு

வாழ்வில் இன்றே சேமிக்க

உருவில் சிறிய எறும்புகள்தாம்

உயர்ந்த பாடம் கற்பிக்கும்!

கவள உணவே ஆனாலும்

காகம் பகிர்வைக் கற்பிக்கும்;

எவரும் நன்றி கற்றிடலாம்

எளிய நாயின் செயலாலே!

பரிகற் பிக்கும் வேகத்தை;

பசுகற் பிக்கும் பாசத்தை;

அரிகற் பிக்கும் வீரத்தை;

அலைகற் பிக்கும் விடாமுயற்சி!

இயற்கை விளைவுகள் ஒவ்வொன்றும்

இங்கே நமக்கு ஆசான்கள்!

வியந்தும் உணர்ந்தும் தெளிந்திட்டால்

விளங்கும் வாழ்வின் அர்த்தங்கள்!

 

* பரி - குதிரை

* 'அரி' என்னும் பெயர்ச் சொல்லுக்கு பொருள்கள் பல உண்டு. இங்கு சிங்கம் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

கே.பி.பத்மநாபன்,

சிங்காநல்லூர்-கோவை

 

கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர்-கோவை

 

பரி - குதிரை

அரி என்னும் பெயர்ச் சொல்லுக்கு பொருள்கள் பல உண்டு. இங்கு சிங்கம் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4
Share