Home முந்தைய இதழ்கள் 2019 பிப்ரவரி 2019 வரலாற்றில் பேசப்படும் பெரியார் பிஞ்சுகள் மாநாடு
சனி, 31 அக்டோபர் 2020
வரலாற்றில் பேசப்படும் பெரியார் பிஞ்சுகள் மாநாடு
Print E-mail

சிறப்பு தொகுப்பு

(நிறைவு பகுதி)

தொகுப்பு: சமா.இளவரசன்

பெரியார் பிஞ்சுகள் மாநாடு நடத்தத் திட்டமிட்டபோதே, அனைவரும் முன்மொழிந்த ஒன்று அறிவியல் கண்காட்சி. அருமைப் பெரியார் பிஞ்சுகள் கூடுவோம்; அறிவியல் உலகைப் படைப்போம் என்பது தான் மாநாட்டின் நோக்கம் என்று ஆசிரியர் தாத்தாவும் அறிவித்திருந்ததால், அதற்கான பணிகள் திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன. திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் பள்ளி, திருச்சி மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் விதத்திலும், அறிவியல் உண்மைகளை எடுத்துக்காட்டும் விதத்திலும் ஏராளமான அறிவியல் விளக்கங்களை செயல்முறையிலும், ஓவியங்கள், படங்களைக் கொண்டும் விளக்கிடத் தயாராகியிருந்தனர். அவர்களைத் தவிர, திண்டுக்கல்லைச் சேர்ந்த சில பள்ளி மாணவர்-களும், பெரியார் பிஞ்சு மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலரும் கூட இக் கண்காட்சியில் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கான அரங்கு மாநாடு நடைபெற்ற வளாகத்திலேயே தனியாக அமைக்கப்பட்டிருந்தது.

பார்வையாளர்கள் அனைவரும் ஒவ்வொன்றாகப் பார்த்து விளக்கம் பெற்றுக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, கலிலியோ அறிவியல் மய்யத்தின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் சத்திய மாணிக்கம் ஏற்பாட்டில் மிக விரிவான அறிவியல் விளக்கப் படங்கள் காட்சிப்படுத்தப்-பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வரலாற்றையும், சமூக இயக்கங்கள் குறித்த செய்திகளையும் வரிசைப்படுத்தி அமைக்கப்-பட்டிருந்தது வரலாற்றுக் கண்காட்சி. அதற்கடுத்து குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக்காட்டும் விதத்தில் தனித்திறன் கண்காட்சி. தங்களின் கைவினைப் பொருட்களை, ஓவியங்களை, சமையல் திறமையைக் காட்சிப்படுத்தியும், விற்பனைக்கு வைத்தும் அசத்தினர் பிஞ்சுகள்.

தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் நூலில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள புதுமைகள் அறிவியல் உலகில் எப்படி சாத்தியமாகி இருக்கின்றன என்பதை விளக்கும அரங்கமே கண்காட்சியின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டது.

காலை நிகழ்ச்சிகளைக் காண வந்த ஆசிரியர் தாத்தா மேடையேறி பிஞ்சுகள் அனைவரையும் உற்சாகப்படுத்திவிட்டு, அரங்கின் நடுவில் பிஞ்சுகளுடன் பிஞ்சாக அமர்ந்து மாநாட்டை ரசித்துக் கொண்டிருந்தார். அடுத்து ஆசிரியர் தாத்தாவிடம் கேளுங்கள் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது வந்து சேர்ந்திருந்த இனமுரசு நடிகர் சத்யராஜ் அவர்களும் சேர்ந்து மேடையேற, அரங்கம் குதூகலித்தது. அடேயப்பா... ஆசிரியர் தாத்தாவிடம் கேள்வி கேட்க நீண்ட வரிசை! ஆளுக்கு ஒரு கேள்வி தான் என்று முறைப்படுத்தினாலும், பேரப் பிள்ளைகள் தாத்தாவிடம் உரிமை எடுத்துக் கொண்டு இரண்டு, மூன்று என கேள்விகளை அடுக்கினர்.

தருமபுரி போ.நிரஞ்சனா, சென்னை பிரனதி ஏஞ்சலின் பாரதி, திண்டுக்கல் ஜி.பிரஜன், ஜி.சந்தோஷ், சென்னை இ.கவின், அ.அறிவுமதி, திருவாரூர் பா.இனியன், கிருஷ்ணகிரி ம.நிலவன், திருப்பூர் கா.கிருஷ்ணபிரசாத், தஞ்சை ஜெ.ஜெ.கவின்,  ஹிதாயத்துல்லா, சாதனா, சென்னை 'பொடியன் சி.அறிவன் பாக்யா என பட்டியல் நீண்டது. ஆசிரியர் தாத்தாவிடம் மட்டுமல்லாமல், உடனிருந்த சத்யராஜ் அவர்களுக்கும் கேள்விகள் பறந்தன. திட்டமிட்டதை விட சில நிமிடங்கள் கூடுதலானாலும் நிறைவாக நடந்த முற்பகல் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மதிய உணவுக்கு இடைவேளை விடப்பட்டது. அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

உணவு இடைவேளையின் போதும் அனை-வரும் கண்டுகளிக்க, பயனுறு கருத்துகள் புகைப்படங்-களுடன் பார்வைக்கு வைக்கப்-பட்டிருந்தன. காலையில் பதிவு செய்தோர் அனைவருக்கும் அடையாள அட்டை, நிகழ்ச்சி நிரல், பெற்றோருக்கென்று தனியாக ஒரு துண்டறிக்கை ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. பெற்றோர் கவனத்திற்கு என்று வழங்கப்பட்ட துண்டறிக்கையில் இருந்த செய்திகள் அனைவரும் சிந்திக்கச் செய்தன.

மதிய அமர்வில் திண்டுக்கல் அகரா, ஆரா ஆகியோர் பாரதிதாசன் பாடலைப் பாடினர். கிருஷ்ணகிரி நன்மதி அனைவரும் வியக்கும் வண்ணன் பாரதிதாசன் ஆத்திச்சூடியை உணர்ச்சி பொங்க சொல்லிக் காட்டினார். திருநெல்வேலி அறிவரசியின் பாடல், திண்டுக்கல் சந்தோஷ் சொன்ன பெரியார் பொன்மொழிகள், கலைச்செல்வன், சென்னை ஏஞ்சலின் பாரதி, இ.ர.அன்புச் செல்வன் ஆகியோரின் உரைகள், தருமபுரி நிரஞ்சனாவின் கவிதை, மதுரை திவ்யா, மகாமதி, போடி எழில் ஆகியோரின் பாடல்கள் ஆகியவை பெரும் வரவேற்புடன் நிகழ்த்தப்பட்டன. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி, பெற்றோருக்குப் பெருமிதம் எல்லாம் கலந்திருந்தது அந்த அவையில்!

அனைவரையும் மகிழ்விக்க கலை அறப் பேரவை மு.கலைவாணன் குழுவினரின் அறிவுக்கொழுந்து அஞ்சலை பொம்மலாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை காலை முதலே தெற்குநத்தம் சித்தார்த்தன், கோ.செந்தமிழ்ச்செல்வி, பேராசிரியர் எழிலரசன், பவானி, அன்புச்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆரவாரத்துடன் அனைவரும் ரசிக்க, அடுத்து பேரணி என்ற அறிவிப்பு வந்ததும் குதூகலமாய அணிவகுக்க ஆயத்தமாயினர் பிஞ்சுகள். அலங்காநல்லூர் வேலுவின் சமர் கலைக்குழு பிஞ்சுகளின் பறையிசை முழக்கம் தெரிக்க, அணிவகுத்து நின்ற பிஞ்சுக் கைகளில் பெரியாரின் கருப்பு சிவப்புக் கொடி சடசடக்க, திடீரென மழைச் சாரல் சரசரக்க ஒரு சில நிமிடங்கள் மீண்டும் அரங்கத்துக்குள் நுழைந்தது பிஞ்சுகளின் கூட்டம். என்னடா பிஞ்சுகளைப் பார்க்க நாம் வந்தால், நம்மால் பிஞ்சுகளின் பேரணி தடைப்படுகிறதே என்று மேகம் யோசித்ததோ என்னவோ, பிஞ்சுகளுக்கு வாழ்த்துச் சொல்லி வழிவிடுவதைப் போல மேகம் தூறலோடு விடைபெற்றுச் செல்ல, மீண்டும் உற்சாகத்தோடு அணி வகுத்தனர் பிஞ்சுகள். திண்டுக்கல் நகர மக்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்க, அறிவியல் விளக்க முழக்கங்களோடு ஆர்ப்பரித்து எழுந்தன பிஞ்சுக் குரல்கள். தந்தை பெரியார் (சஞ்சய்), அறிஞர் அண்ணா (அபி யோகேஸ்வர்),  கல்வி வள்ளல் காமராசர் (குருநாத்), அன்னை மணியம்மையார் (வினிதா), டாக்டர் கலைஞர் (லூர்து சேவியர்), ஆசிரியர் கி.வீரமணி (அமுத வேங்கை), டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (கிருத்திகா), கல்பனா சாவ்லா (சாதனா), மேரி கியூரி (ஜமீலா) ஆகியோரின் வேடங்களில்  பேரணியில் வந்தனர்.

அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பதாகைகளாகச் சுமந்து வந்ததும் கவனம் பெற்றது. பெரியார் பிஞ்சு புதுச்சேரி கி.ரா.பிரபாகரனும் குட்டிப் பெரியாராக வேடம்பூண்டு வலம் வந்தார். சடையார்கோவில் நாராயணசாமி குழுவினரின் பிஞ்சுகள் கோலாட்டம் பகுத்தறிவுப் பாடல்களை இசைத்தபடி, சாலையை அளந்து அசைந்து ஆடி வந்தது, ஆட வைத்தது. ஸ்கேட்டிங் செய்தபடி கையில் கழகக் கொடியோடு வந்த பிஞ்சுகளை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பிஞ்சுகளின் அணிவகுப்பை திண்டுக்கல் பெரியார் சிலை மேடையில் நின்றபடி பார்வையிட்டார் ஆசிரியர் தாத்தா.. அடடா... எத்தனை பூரிப்பு அவர் முகத்தில்! அணிவகுப்பு மாலை மாநாடு நடக்கவிருக்கும் மணிக்கூண்டு அருகில் அமைக்கப்பட்ட அரங்கில், ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடந்தது. எப்படி மக்கள் மூடநம்பிக்கைகளாலும், சாமியார்களாலும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அவர் விளக்கிச் சொல்லச் சொல்ல, பக்திக் கோலத்தில் இருந்தவர்கள் கூட வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்து தொடர்ந்தது மேடையில் மள்ளர் கம்பம் எனப்படும் வீரவிளையாட்டு! சீரிய உடற்கட்டு, திடமான தோள்களுடன் அந்த இளம் மாணவர்கள் சாகசம் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து பறை இசை. தொடர்ந்து பிஞ்சுகளின் மேடை. சித்தார்த் அம்பேத்கர், செம்மல்வீரமணி, அறிவுமதி ஆகியோரின் ஆங்கில உரைகள், இன்சொல் எடுத்துச் சொன்ன பெரியார் பொன்மொழிகள், இனியமதி, கண்மணி, மணிமாறன் ஆகியோரின் நடனங்கள், கரகமெடுத்து ஆடிய திருவாரூர் பிஞ்சுகள் சந்துரு - குணா ஆகியோரைத் தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் காஞ்சிபுரம் எஸ்.எம்.அபிநயா, கவிநிஷா ஆகியோர் அறிவியல் உலகைப் படைப்போம் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்கள்.

மேடையில் நிகழ்ந்த பெரியார் பிஞ்சு! ஆம். பெரியார் பிஞ்சு இதழை அப்படியே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும்? இதில் வரும் கதைகள் நடிக்கப்பட்டால், அறிவியல் விளக்கங்கள் காட்சி வடிவமானால், கதாபாத்திரமாக வரும் மானும் புலியும், யானையும் சிங்கமும் உயிர்கொண்டெழுந்தால் எப்படியிருக்கும்? அது தான் பெரியார் கல்வி நிறுவனங்கள் நிகழ்த்திக் காட்டிய ஒலி-ஒளி நாடகத்தின் மையக் கரு. அசந்து போயினர் அனைவரும்! பெரியார் பிஞ்சு இதழில் வந்து கொண்டிருக்கும் அய்ன்ஸ்ரூலியும், தந்தை பெரியாரின் கதையும், பிற கதைகளும் நாடக வடிவம் பெற்றன. மேடை வண்ணமயமான நடனங்களுடனும், கதாபாத்திரங்களுடனும் பிரகாசித்தது.

பெரியார் பிஞ்சு அ.க.செவ்வியன் இணைப்புரையாற்ற, பெரியார் பிஞ்சு வெளியீடாக ஆசிரியர் தாத்தா குழந்தைகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புகளாக 5 புத்தகங்களும், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பாடல் வடிவில் தந்த தங்கத் தாத்தா வாழ்க்கையிலே புத்தகமும் வெளியிடப்பட்டது. பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம், திண்டுக்கல்லில் இம் மாநாட்டை நடத்த பெரும் உழைப்பை நல்கிய திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரபாண்டி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மண்டலத் தலைவர் நாகராசன், மண்டலச் செயலாளர் கருஞ்சட்டை நாகராசன், பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், ராஜா, அன்புச்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான  தோழர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பிஞ்சுகளின் பிரகடனத்தை வெளியிட்டார் ஆசிரியர். அதனை அறிமுகப்படுத்தி கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.  தன் அனுபவங்களையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் தொகுத்து, எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் மிக நீண்டதோர் உரையை வழங்கிச் சிறப்பித்தார் இனமுரசு நடிகர் சத்யராஜ். நிறைவாக ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 51 ஏ(ஹெச்) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதே நமது நோக்கம் என்பதை எடுத்துக் காட்டி உரையாற்றினார். திராவிடர் இயக்க வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாடு, முதல் முறை என்பதால் மட்டுமல்ல.. அதன் வெற்றியினாலும் வரலாற்றில் பேசப்படும். அம் மாநாட்டில் பங்கேற்ற பிஞ்சுகள் அனைவருக்கும் அந்தப் பெருமை போய்ச் சேரும்.

Share