Home முந்தைய இதழ்கள் 2019 பிப்ரவரி 2019 ’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா?
சனி, 31 அக்டோபர் 2020
’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா?
Print E-mail

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்

தமிழ்ப் பாட நூல்களில் அந்தணர் என்று சில நேரங்களில் வருவதை விளக்குவதற்கு பூணூல் தரித்த பார்ப்பனர்களை சிலர் அடையாளமாகக் காட்டுகின்றனர். அதாவது, அந்தணர் என்றால் ஆரிய பார்ப்பனர்களைக் குறிக்கும் என்று சிலர் கூறுகின்றனர். இது அப்பட்டமான பொய். அந்தணர் என்ற சொல் தூய தமிழ்ச்சொல். அந்தணர் என்ற சொல் தமிழ்ச் சான்றோர்களைக் குறிக்க அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

பண்டைத் தமிழர்களிடையே எவ்விதமான ஏற்றத் தாழ்வும் ஜாதிப் பாகுபாடும் இல்லை. செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர்கள் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். ஒரு தொழில் செய்வோர் பிறிதொரு பிரிவில் ஈடுபடக்கூடாது என்றில்லை.

செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பெயரிட்டு அழைத்தனர். 1. அந்தணர், 2. அரசர், 3. வணிகர், 4. வேளாளர். அரசர் என்போர் மக்களுக்குத் தலைமை ஏற்று நாட்டை ஆண்டவர்கள். அரசு என்பதற்குக் காவல் என்று பொருள். அவ்வகையில் நாட்டையும், மக்களையும் காக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் அரசர்.

வணிகர் என்போர் நெல், சோளம் போன்ற தானியங்களையும், பயறு வகைகளையம் வணிகம் செய்த தமிழர்கள் ஆவர். வேளாளர் என்போர், பயிர்த் தொழில் செய்து, அனைத்து மக்களுக்கும் உணவளித்த தமிழ் மக்கள். இவை வெறும் தொழில் பிரிவுகளே தவிர ஜாதியல்ல.

வேளாளர் பெண்ணை அரசன் மணந்திருக்கிறான். அழுந்தூர் வேளின் மகளை இருஞ்சேட் சென்னி என்ற அரசன் மணந்தான்; கரிகாலன் என்ற அரசனின் மனைவி நாங்கூர் வேளின் மகள் ஆவாள். சேரன் செங்குட்டுவன் என்ற அரசன் கொங்குவேள் ஒருவனின் மகன். ஆக இவை ஜாதிப் பிரிவுகள் அல்ல என்பது புலனாகிறது.

அந்தணர் என்போர் அரசர், வணிகர், வேளாளர் ஆகிய முப்பிரிவு தமிழ் மக்களில், இல்வாழ்வு நடத்தி, அறிவும், வாழ்க்கை அனுபவமும் பெற்ற சிலர், குடும்பத்தைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களுக்குத் தொண்டாற்றும் பொருட்டு வீட்டை விட்டு வெளியே வந்து சமுதாயத் தொண்டாற்றியவர்களே ஆவர்.

அந்தணர்களில் அரசக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் உண்டு, வேளாளர் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு, வணிகப் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு.

காமஞ்சான்ற கடைக்கோட்காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இருந்ததன் பயனே

(தொல்-கற்51)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்    (குறள்: 30)

மேற்கண்ட வரிகள் இந்த உண்மையை உணர்த்துவனவாகும்.

அந்தணர்கள் ஓரிடத்தில் நிலைத்து தங்காமல், ஊர்தோறுஞ் சென்று மக்களுக்கு நல்வழிகளை எடுத்துக் கூறி வந்தனர். அதற்கு வசதியாய் வெய்யிலுக்குக் குடையும், செருப்பும், நீர் கொண்டு செல்ல செம்பும், ஊன்றுகோலும், படுத்துறங்கப் பாயும், அறநூல்களும் தங்களது உடமைகளாகக் கொண்டனர். இதைத் தொல்காப்பியம் தெளிவாய்க் கூறுகிறது.

நூலே கரகம் முக்கோல் மனையே

ஆயுங்காலை அந்தணர்க் குரிய

(தொல்-மரபி70)

அரசர்கள் போர் செய்யச் செல்லும்போது, நாட்டை ஆளும் பணியையும் அந்தணர்கள் மேற்கொண்டனர்.

அந்தணாளர்க் கரசுவரை வின்றே

(தொல்-மரபி-82)

ஆக அந்தணர் என்போர் தமிழ்ச் சான்றோர்களே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்லர். உயர்ந்தவற்றை எல்லாம் தனதாக்கும் முயற்சியில் பார்ப்பனர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் அந்தணர்க்குரிய பெருமையைத் தாங்கள் அபகரிக்க முயன்றே தங்களை அந்தணர் என்றனர். அது ஏற்கத்தக்கதல்ல.

வேதங்கள் உயர்ந்தவையா?

ஒன்றைப் பற்றி ஒன்றுந்தெரியாமலே, பலரும் சொல்கிறார்கள் என்பதால், தானும் அதை உயர்ந்ததாக எண்ணுவதும், கூறுவதும் மக்களிடையே காணப்படுகிறது. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, வேதம் உயர்ந்தது, அவர் கூறினால் அது என்ன வேதமா? என்பன போன்ற சொல் வழக்குகள்.

இக்கருத்து முற்றிலும் அறியாமையின் பாற்பட்டது மட்டுமல்ல; தவறானதும் ஆகும்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபின் அவர்கள் வாழ்வியலில் வழிபாட்டைக் கூட புனையப்பட்டவையே வேதங்கள்.

1. ரிக், 2. யஜூர், 3. சாமம், 4. அதர்வணம். ஆகியவை நான்கு வேதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. ரிக் வேதம் என்றால் என்ன? ஆரியர்கள் தாங்கள் வணங்கிய காற்று, நீர், இடி, மழை போன்ற இயற்கைச் சக்திகளைப் போற்றி பாடிய பாடல்கள் அடங்கியது ரிக்வேதம்.

2. சாம வேதம்: ரிக் வேதத்தை இசையுடன் பாட ஏற்படுத்தப்பட்டதே சாம வேதம். 3. யஜூர்: தாங்கள் வணங்கிய இயற்கைச் சக்திகளுக்கு சடங்கு செய்யும் முறைகளைப் பின்னாளில் உண்டாக்கினர். யாகங்கள் செய்யும் முறைகளை உண்டாக்கினர். இம்முறைகளை விளக்குவதே யஜுர் வேதம்.

4. அதர்வண வேதம்: ஆரியர்களது முற்கால வாழ்க்கையையும், பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியது அதர்வண வேதம்.

வேதத்தின் சாரம், ஆரியர்கள் வாழ வேண்டும், வளம் பெற வேண்டும். அவர்களின் எதிரிகள் அழிய வேண்டும் என்பதற்காக வேண்டுவ-தேயாகும்.

இயற்கையாய் உள்ள காற்று, நீர், உணவு எல்லாம் எதிரிகளுக்கு விஷமாக ஆகவேண்டும் என்று வேண்டிக் கொள்வதே வேதங்கள்.

மற்றபடி அதில் மக்கள் நலனுக்கும்; வளர்ச்சிக்குமான எந்தக் கருத்துக்களும் இல்லை.

வள்ளுவன் என்ற தமிழன் எழுதிய திருக்குறளின் ஓரம் நிற்க முடியுமா இவை? இவ்வுலகில் வேறு எவராவது ஏற்பாரா இவற்றை?

எனவே, வேதம் என்றால் ஏதோ புனிதம், உலகின் உயிர் மூச்சு என்பது போல் ஆர்ப்பரிப்பது அறியாமை மட்டுமல்ல தவறும் ஆகும்.

போகி - போக்கியா?

போகி என்பதை போக்கி என்ற பொருள் கொண்டு, பழையவற்றைப் போக்குதல் என்று எண்ணி, பழைய ஓலைச்சுவடிகள், பழைய பொருட்களை எல்லாம் கொளுத்தி காற்றை புகையால் மாசடையச் செய்யும் மடமை இன்று நகரங்களிலே அதிகம் காணப்படுகிறது. எதையாவது கொளுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணி, பழைய தாள், டயர் போன்றவற்றை எரித்து மூச்சுத் திணறச் செய்வது முட்டாள்தனம் ஆகும்.

போகி என்பதை இனி மழைத் திருநாள் என்றே கொண்டாடுவோம். அதுவே அர்த்தம் உடயது. அறிவுக்கும் உகந்தது.

சென்ற இதழிலில் வெளிவந்த போகி கட்டுரை தொடர்பான கூடுதல் செய்தி.

Share