மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும்
Print

தந்தை பெரியாரின் கதை

சுகுமாரன்

ஓவியம்: கி.சொ

(1) கடவுள், (2) மதமும், ஜாதியும், (3) ஜனநாயகம் _ இம்மூன்றும் இந்நாட்டை பிடித்துள்ள பேய்கள் என்றும், (1) பார்ப்பான், (2) பத்திரிக்கை, (3) சட்டசபை, (4) தேர்தல் (அரசியல் கட்சிகள்), (5) சினிமா ஆகியன இந்நாட்டை பிடித்துள்ள அய்ந்து நோய்கள் என்றும் பெரியார் வடநாட்டு சுற்றுப் பயணத்தின்போது கூறினார்.

தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும்   தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும் ஜாதி ஒழிப்புக்காகவும் பாடுபட்டனர்.

மதம் கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது... ஜாதி மனிதனை இழிவுபடுத்துகிறது என்றும் கூறினார் பெரியார்.

ஜனநாயகம் மோசடி அரசியல்வாதிகளால் கேலிக் கூத்தாக மாறி விட்டது என்று சாடினார்.

தன்னை சந்தக்க வரும் மாணவர்களிடம் பெரியார் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துவார். தேர்தல் வேலைகளில் ஈடுபடக்கூடாது என்பார். நம் நாட்டு பத்திரிகைகளும் சினிமாவும் நல்ல பயன்களை தரவில்லை. அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுவார்.

தனி மனிதர்களைத் தான் எதிர்க்கவில்லை. பார்ப்பான் என்பது மேல்ஜாதி வெறிபிடித்தவர்களின் தத்துவத்தை குறிக்கும் சொல் என்று விளக்கமளித்தார்.

சட்டசபை மூலமோ, பார்லிமென்ட் மூலமோ ஜாதியை ஒழிக்க முடியாது. ஜாதி வேற்றுமையை ஒழிக்க பெருங் கிளர்ச்சியால்தான் முடியும் என்று எடுத்துரைத்தார்.

சமுதாயத்தின் குறைகளைக் கூறி அதைப் புரட்டிப் போட புதுவழி காட்டிய பெரியார் சமுதாய விஞ்ஞானி ஆவார்.

பெரியாரின் மொழிக் கொள்கை

பெரியார் தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று ஒரு கூட்டத்தில் பேசினார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. ஓர் இளைஞன் பெரியார் மீது கோபம் கொண்டான்.

கூட்டம் முடிந்தது. பெரியார் பயணிகள் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். கோபம் கொண்ட அந்த இளைஞன் அங்கு வந்தான். பெரியாரை சந்திக்க அனுமதி கேட்டான்.

பெரியார் உள்ளே அழைத்தார்.

என்ன என்பதுபோல் தலையைத் தூக்கிப் பார்த்தார்.

நீங்கள் செந்தமிழ் மொழியை காட்டுமிரண்டி மொழி என்று கூறலாமா? என்று ஆத்திரத்தோடு இளைஞன் கேட்டான்.

பெரியார் அமைதியாக பதில் சொன்னார்.

தமிழ்மொழி எதுக்கு உதவும்?.... தமிழில் அறிவியல் வளர்ச்சி இருக்குதா? தொழில் படிக்க உதவுமா? காட்டுமிராண்டி காலத்தில் உள்ளதுபோல்தான் இருக்குது. போ... போ... சிந்தித்துப் பார் என்றார்.

அந்த இளைஞன் சிந்தித்தான். ஆம். மொழி ஒரு கருவி. மொழி புத்தம் புது கருவியாக இருந்தால் தானே வாழ்க்கைக்கு உதவும். பழம் பெருமை பேசக் கூடாது. கையிருப்பை எண்ணிப் பார் என்றுதானே பெரியார் சொன்னார்.

பெரியார் தமிழ் வாழ்க! என்று வெறும் கூச்சல் போடவில்லை.

தமிழ்மொழியை சீர்திருத்தம் செய்தார். குறைந்த அளவு எழுத்துகள் போதும் என்றார்.

தமிழ்மொழியை எளிதில் கற்க வழிகண்டார். தமிழை புதுமை செய்தார். தமிழில் அறிவியல் நூல்களை எழுதினால் அதனைத் தாம் பதிப்பிக்கத் தயார் என்றும் அறிவித்தார். பெரியாரின் கருத்துதான் தமிழில் புதுமைச் சிந்தனைகளை ஊக்குவித்தது.

Share