Home முந்தைய இதழ்கள் 2019 மார்ச் 2019 சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல்
திங்கள், 26 அக்டோபர் 2020
சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல்
Print E-mail

கதை கேளு… கதை கேளு…

விழியன்

மூன்றாவது வரிசையில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. தம்பிங்களா, அதென்ன சத்தம்? வகுப்பை கவனிங்க என்றார் அறிவியல் ஆசிரியர். சார், சைமன் ஒரு விண்கல் எடுத்துட்டு வந்திருக்கான் சார். எங்களுக்கு பயமா இருக்கு என்றான் மூன்றாம் வரிசையில் இருந்த ஒல்லியான மாணவன். கொஞ்ச நேரத்தில் ஆசிரியர் மேசை மீது அந்த வெள்ளைப் பை வைக்கப்பட்டது. அதற்குள்ளே தான் அந்த விண்கல் இருந்தது. சைமன் நடந்ததை வகுப்பின் மேடையில் நின்று விவரித்தான். சார், நேற்று டிசம்பர் 13 இரவு வானத்தில் விண்கல் மழை பார்க்கலாம் என்றார் அப்பா.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மொட்டை மாடிக்கு வரல. நான், அப்பா, அக்கா மூன்று பேரும் மொட்டை மாடிக்கு 12 மணிக்கு கால்மணி நேரம் முன்னாடி போயிட்டோம். கொஞ்சம் மேகக்கூட்டம் இருந்தது. அப்பா ஒரு எட்டு ஆண்டுக்கு முன்னாடி ரொம்ப பிரமாதமான இரவுக் காட்சியை பார்த்திருக்கார் போல. வானத்தில அப்படி ஒரு காட்சியைப் பார்த்ததே இல்லைன்னு சொன்னாரு. நானும் அக்காவும் முகத்துல துண்டு கட்டிகிட்டு அன்னாந்து படுத்துகிட்டோம். போர்வையும் தான். செம குளிர் வேற. சரியா 12.30 மணியில் இருந்து அங்கொரு மழை இங்கொரு மழையா பார்த்தோம். ப்பா..செம செம. திடீர்னு சர்ர்ர்ர்ன்னு கீழ ஒரு வெளிச்சம் வரும். சில நொடிகள் தான். 1.30 மணிக்கு கீழ வந்துட்டோம். மேகம் மறைச்சிடுச்சு. காலையில மாடியில போய் உட்கார்ந்து படிக்கலாம்னு போனா... இந்த கல்லை நாங்க படுத்து இருந்த இடத்தில பார்த்தேன். நிச்சயம் விண்கல் தான்

வகுப்பே பரபரப்பானது. விண்கல் விவரங்கள் குறித்து மாணவர்கள் விடாது கேள்வி கேட்டார்கள். அறிவியல் ஆசிரியர் கரும்பலகையில் படம் வரைந்து விண்கற்கள் பற்றி விளக்கினார். பூமியின் சுற்றுப்பாதை, வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை, விண்கல் அந்தரத்தில் மிதப்பது என்று அவர்கள் வகுப்பில் இருக்கும் அளவிற்கு விளக்கினார். நடத்த நடத்த கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன.

பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல் என்றால் எது?

அந்தக் கல்லை உடைக்க முடியுமா?

இந்தக் கல்லை வைத்து வீடு கட்ட முடியுமா?

உடைத்து உட்டைக்கல் விளையாட முடியுமா?

அது சுடுமா?

தண்ணீரில் கரையுமா?

வால்நட்சத்திரம் சூரியனில் மோதினால் சூரியன் வெடிச்சிடுமா?

மதிய உணவு இடைவேளையின் போது மற்ற வகுப்பு நண்பர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் யாரும் அந்த கல் அருகே செல்லவில்லை. கொஞ்சம் பயந்தார்கள். போலிஸ்கிட்ட கொடுத்திடலாம்டா, நாளைக்கு வந்து பிடிச்சிட்டு போயிட்டா என்றபோதுதான் சைமனுக்கு பயம் தட்டியது. மதியம் நடந்த ஓவிய வகுப்பில் எல்லோருமே விதவிதமான விண்கல்லினை வரைந்தார்கள். அது பூமியில் விழுந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வரையத் துவங்கினார்கள். வகுப்பின் இறுதியில் ஓவிய ஆசிரியர் அடேய் பசங்களா, என் இத்தனை ஆண்டு அனுபவத்தில் இந்த வகுப்பு மாதிரி நிறைவான ஓவிய வகுப்பு அமையவில்லை. மகிழ்ச்சி எனக் கிளம்பினார்.

ஆனாலும் சைமனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பயம் குறையவில்லை. ஒருவேளை போலிஸ் வருமோ? என் வீட்டு மாடியில விழுந்ததுன்னா எனக்குத்தானே சொந்தம்னு யோசித்துப்பார்த்தான். இன்று தமிழ் வகுப்பு இல்லை. ஆனாலும், தமிழ் ஆசிரியர் வந்தார். என்ன தம்பிங்களா எதோ கல் கிடைச்சிருக்காமே காட்டுங்க என்றார். மேசையில் இருந்த வெள்ளைப் பையினைக் காட்டினார்கள். இதுக்கு ரொம்ப நல்ல தமிழ் பெயர் இருக்கு தெரியுமா? விண்வீழ்கல் நல்லா இருக்குல்ல எனக் கிளம்பிவிட்டார். விளையாட்டு நேரத்தில் ஏழு கற்கள் விளையாடினார்கள். சைமன், அந்த கல்லை வெச்சி விளையாட்டு விளையாடுவோமா என கிண்டலடித்துச் சென்றார்கள் அவன் வகுப்புத் தோழிகள்.

பள்ளி முடிவதற்குள் அவன் பள்ளி முழுவதும் கிட்டத்தட்ட விண்கல்லைப் பார்த்துவிட்டது. காலையில பார்த்ததுக்கு இப்ப அளவு குறைஞ்சிடுச்சு சைமன் என்றனர் அவன் நண்பர்கள். ஒருவித பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும், பயமும் ஒருபக்கம் இருந்தது. பள்ளி மைதானத்தில் இருந்து கிளம்பும்போது நூலகரும் அவர் உதவியாளரும் பேசிக்கொண்டு சென்றார்கள். என்னப்பா இன்னைக்கு ஒரே நாள்ல இவ்வளவு பசங்க நிறைய அறிவியல் புத்தகமா எடுத்துகிட்டு போனாங்க. அதுவும் இல்லாம எல்லாமே விண்வெளி புத்தகங்கள்.

வீட்டினை அடைந்தபோது அவன் அக்கா குழலி அழுதுகொண்டிருந்தாள். பையினை வைத்துவிட்டு, ஆடைகளை மாற்றிவிட்டு, தன் பகுதி நண்பர்களுக்கு விண்கல்லைக் காட்டவேண்டும் என எண்ணியபடி முகம் கழுவினான். என்னம்மா அக்கா அழுவுறா? என அம்மாவிடம் மாலை சிற்றுண்டி சாப்பிட்டபடி கேட்டான். அதுவா? அவ மூனு நாளா ஸ்கூல் ப்ராஜக்ட் ஒன்னு செய்திருக்கா. அதை காணோமாம். ஓ... என்ன பிராஜக்ட்? மாடியில கல்லு மாதிரி செய்ஞ்சு காய வெச்சிருக்கா, சாயந்தரம் வந்து பார்த்தா காணோமாம். எதோ விண்கல்லாம்

ஆ...!

Share