Home முந்தைய இதழ்கள் 2019 மே 2019 வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!!
புதன், 28 அக்டோபர் 2020
வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!!
Print E-mail

பண்பாட்டுப் பகிர்வு

சா.மூ.அபிநயா

"சே சீஸ்..." கிளிக் கிளிக்.. மன்னிக்கணும். கொஞ்சம் நிழற்படம் எடுத்துட்டு இருந்தேன். ஓ... சென்ற மாதம் ஆஷ்வி மெக்னலி பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா? எனக்கு நிழற்படம் எடுப்பது ரொம்பப் பிடிக்கும். இதை நான் அவளிடம் சொன்னேன். மறுநாள் என்னிடம் வந்து ஒரு புத்தகத்தை தந்தாள். அது புகைப்படக் கலை பற்றிய புத்தகம். எனக்கு புத்தகம் என்றாலும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு பாம்பனோ பீச் உயர்நிலைப் பள்ளியில் ரொம்பப் பிடித்தது, எங்களை அவர்களுள் ஒருவராக நினைத்து அவர்கள் பழகிய விதம். எங்கள் விருந்தோம்பி குடும்பமும், எங்களை அப்படியே கருதியது. நாங்களும்தான்.

அன்றிரவு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா செய்தோம். தேக்கரண்டி, முட்கரண்டியை மட்டுமே பயன்படுத்திய ஜாம்பரானோ (Zambrano) குடும்பத்தினருக்கு, வெறும் கையால் சாப்பிடுவது கடினமாக இருந்தது. அவர்கள் அப்படி சாப்பிடுவதைப் பார்க்க, எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது! இந்தியப் பொருட்களை அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தோம். எங்களுக்கு ஒரு பயம் இருந்தது; அவர்களுக்கு பிடிக்கமோ பிடிக்காதோ என்று! ஆனால், அவர்களுக்கு அவை மிகவும் பிடித்துப் போய்விட்டன. இன்னும் சொல்லப்போனால், எங்களின் தாவணியை அணிந்துகொண்டனர்.

 

பண்பாட்டு நிகழ்ச்சியில் நம் பழம்பெரும் இசைக்கருவியான பறையை வாசித்தோம். பறையிசைக்கு துருக்கியில் இருந்து வந்த ஆசிரியர் ரசிகர் ஆகிவிட்டார். ஏனோ தெரியவில்லை. நாங்கள் கொண்டு சென்ற சங்கு அங்கு முழங்கவில்லை. எங்களை அவர்கள் கேலி செய்யாமல் கைதட்டி ஊக்கப்படுத்தினர். அந்த அணுகுமுறை எங்கள் அனைவரையும் மேலும் கவர்ந்துவிட்டது.

பின்னர், ஃப்ளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்திற்கு (Florida Atlantic University) சென்றோம். அங்கு 103 நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து பயில்கிறார்கள்.

அதன் பிறகு தென் ஃப்ளோரிடா ஃபேர் (South Florida Fair). அங்கு இருந்த ராட்டினங்கள் பல நம்மை தலைகீழாக்குபவையாக இருந்தன. சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கண்ணில்பட்டது. சாக்லேட் சாப்பிடும் ஆர்வத்தில் என்னுடன் வந்திருந்த சாய்ரசிகா அவளது செல்பேசியை கடையிலேயே விட்டுவிட்டாள். நாங்கள் அங்கிருந்து நகர்ந்து ஓவியக் கண்காட்சிக்குச் சென்றோம். ஓவியக் கண்காட்சியில் ஓவியங்களை ரசிக்கையில் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் செல்பேசியுடன் ஒரு பெண்மணி வந்து, எங்களிடம் அதை தந்துவிட்டுப் போனார். ரசிகா நெகிழ்ந்துவிட்டாள்.

காகிதத்தில் மட்டும்தான் ஓவியம் இருக்குமா என்றால், அப்படி அவசியமில்லை என்பதுபோல் ஒரு அழகுக் குட்டிச் செல்லம் நடந்துசென்றாள்.

ஃப்ளோரிடாவில் வானிலையைக் கணிப்பது கடினம்தான். தொழில்நுட்பம் இல்லையென்றால் எங்கள் நிலை ரொம்பவே கவலைக்கிடமாகி விட்டிருக்கும்! ஃப்ளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது வெயில் வாட்டியது. தென் ஃப்ளோரிடா ஃபேரில் இருந்தபோது திடீரென குளிராகிவிட்டது. நாங்கள் கிளம்பும் நேரமானதும் வெளியே செல்லும் வழி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடந்து கொண்டிருந்தபோது என்னுடன் வந்திருந்த கரனும், சாஹிலும் மலைத்துப் போய்விட்டனர். உங்களுக்கு பைக் பிடிக்குமா? அப்ப நிச்சயம் ஹார்லி டேவிட்சன் பிடித்திருக்கும். நடுவில் ஏன் இது வருகிறது என்று யோசிக்கிறீங்களா? சுமார் 10 நிமிடங்களுக்கு வெறும் ஹார்லி டேவிட்சன் அணிவகுப்பு. மலைக்காமல் எப்படி?

அங்குள்ள மாணவர்களுக்கு நம் நாட்டின் சிறப்பை எடுத்துக்கூற 2 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதலாவது, இந்தியா பற்றிய செய்திகளை கணினி வாயிலாக ஏதேனும் ஒரு வகுப்பில் எடுத்துரைக்க வேண்டும். பின்னர், அவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

இரண்டாம் நிகழ்ச்சி, இந்தியாவின் பண்பாட்டை விளக்கப் படம் (Chart) மூலம் விளக்க வேண்டும்.வகுப்புகளுக்கு முதலில் சென்றோம். மூன்று மாத உழைப்பின் விளைச்சலாக அந்த Power Point Presentation விளங்கியது. கேள்வி நேரம் வந்தது. அதில் பல மாணவர்கள் கேட்ட கேள்விகள், உங்களின் பள்ளி நேரம் என்ன?, உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

மற்றொரு வகுப்பில், நடந்த கேள்வி நேரம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அதில் வந்த கேள்விகளில் ஒன்று, உங்கள் மொழியில் எத்தனை எழுத்துகள் உள்ளன? 247 என்றதும், அவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். பின்னர், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஒவ்வொருவரின் பெயரையும் எழுத, எழுத்துகளின் வடிவம் அவர்களை கவர்ந்துவிட்டது. (நாங்கள் சென்றது ஆங்கில வகுப்பு).

 

இரண்டாம் நிகழ்ச்சி உணவு இடைவேளையில் நடைபெற்றது. நாங்கள் ஒரு முன்முடிவில் இருந்தோம், மருதாணி அம் மக்களுக்குப் பிடிக்காது என்று! ஆனால், வெகுவிரைவில் அம்முன்முடிவு உடைக்கப்பட்டுவிட்டது.

முதலில் ஒரு மாணவன் முன் வந்து மருதாணி வைத்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து, ஏன் என் கையைக் கழுவியபோது, இந்த ஓவியம் அழியவில்லை? என்று அவன் சொன்னதும் எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. பிறகு மருதாணி பற்றி சொன்னவுடன், புரிந்து கொண்டான்.

11 நாடுகளின் விளக்கப் படங்களில், இந்தியாவின் விளக்கப் படத்தின் அருகில் கூட்டம் அலைமோதியது. பொட்டு, தின்பண்டங்கள், மருதாணி மற்ற நாட்டு மாணவர்களை, அவர்களின் விளக்கப் படங்களை விட்டு இந்தியாவிடம் வரவைத்துவிட்டது. ஆஃப் தி வால் டிராம்போலைன் ஃபன் சென்டர் (Off the wall trampoline fun center) எனும் இடத்திற்குச் சென்றோம். ஓர் அறை இருக்கும். அறை முழுவதும் வீழ் தடுப்புறைகள் (Trampoline) இருக்கும். கங்காரு போல் குதித்து விளையாடிவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

கரண், சாஹிலின் விருந்தோம்பிக் குடும்பம் ஓர் ஆந்திரக் குடும்பம். இந்திய உணவிற்கு நாங்கள் காத்திருப்பதைக் கண்டு அன்றிரவு எங்களுக்குப் பொங்கல் கொண்டு வந்திருந்தனர் மம்தா ஆண்ட்டி _ கரண், சாஹிலின் விருந்தோம்பித் தாய். பொங்கல் உண்டுவிட்டு சீக்கிரம் உறங்கச் சென்றோம். மறுநாள் சீக்கிரம் எழவேண்டுமே! ஏனெனில் அது மிக முக்கியமான நாட்களுள் ஒன்று. என்ன தெரியுமா??

(பயணிப்பேன்)

Share