கதை கேளு... கதை கேளு
Print

பழுப்பு மரத்தில் சிக்கிய புப்பா


புப்பா புப்பான்னு ஒரு குட்டி கரடி இருந்துச்சாம். ஒரு நாள் அந்த கரடி பழுப்பு நிற மரத்து மேல இருந்து ‘ஓ’ன்னு கத்திட்டு இருந்துச்சாம். அன்னைக்கு காலையில் என்ன நடந்தது தெரியுமா? பழுப்பு நிற மரத்துல பெரிய தேன்கூடு இருந்துச்சாம். அந்தப்பக்கமா போன புப்பாவிற்கு தேனுடைய வாசனை மூக்கை தொலைச்சுதாம். உடனே கடகடன்னு அந்த மரத்தோட கிளையில ஏறி தேன்கூட்டில் இருந்த தேனை பிழிந்து தேன் குடுச்சிடுச்சாம். தேன் உண்ட மயக்கத்தில் ஒரு கிளையில படுத்து நல்லா ‘கொர் கொர்’ன்னு தூங்க ஆரம்பிச்சிடுச்சாம். மதியமா எழுந்து தான் ‘ஓ’ன்னு கத்திட்டு இருக்கு. ஏன் கத்துது? ஆமா ஏன் கத்துது? அதுக்கு திடீர்னு மரத்தில் இருந்து இறங்க மறந்துடுச்சு. அந்த கிளையில் இருந்து நகரக்கூட இல்ல. ‘ப்பே’ ‘ப்பே’ன்னு கத்திகிட்டு இருந்துச்சு.

அந்தப் பக்கமா போன யானை இந்த சத்தம் கேட்டு வந்துச்சு. “என்ன கரடியாரே இந்த கத்து கத்திட்டு இருக்கீங்க”ன்னு கேட்டுச்சாம். ‘இந்த மாதிரி இந்த மாதிரி வந்தேன்... இந்த மாதிரி இந்த மாதிரி தேன் குடிச்சேன்... இந்த மாதிரி இந்த மாதிரி இறங்க மறந்துட்டேன்... இறக்கி விடுங்க யானையாரே’ன்னு கேட்டுச்சாம் புப்பா. கொஞ்சம் நேரம் யோசித்த யானை

“இந்த மரக்கிளைய உடைச்சிடவா?”

”ஐயோ யானையாரே விழுந்திடுவேன்”

“சரி அப்படியே என் தும்பிக்கையால உன்னை தூக்கி இறக்கிடவா?”

“பயமா இருக்கும் வேணாம்”ன்னு சொல்லிட்டு திரும்பவும் ‘ஓ’வென அழ ஆரம்பித்தது.

மீண்டும் புதிய புதிய யோசனைகள் சொல்லியும் எதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை புப்பா.

சரின்னு, “என் முதுகு மேல குதிச்சிடு. பத்திரமா இறக்கிடுறேன்” ன்னு சொல்லி அந்த கிளைக்கு கீழ நின்னுச்சு. காலை புப்பா கீழ நீட்ட நடு நடுங்கிடுச்சு. “வேணாம். பயமா இருக்கு. இறக்கி விடுங்க...”ன்னு அழ ஆரம்பித்தது.

அந்த பக்கமா ஒரு குரங்கு வந்தது. இப்ப யானை விஷயத்தை சொன்னது. ‘அட இவ்வளவு தானா’ எனச் சொல்லி கடகடவென மரத்தின் மீது தாவியது. அந்த கிளையின் முனைக்கு சென்றதும் “ஐய்யோ குரங்காரே வராதீங்க, உங்க பாரம் தாங்காமல் கிளை உடைந்திடும். ரெண்டு பேரும் விழுந்திடுவோம்”ன்னு அழுதது. “அதெல்லாம் ஒன்னும் ஆகாது புப்பா”ன்னு சமாதானப்படுத்தி அருகே சென்றது. “என் கைய பிடிச்சுக்கோ புப்பா, பத்திரம இறங்கிடலாம்” என்றது. புப்பா கையை கூட உயர்த்தவில்லை. நகரவில்லை. “அட போங்கையா” எனச்சொல்லி குரங்கு கீழே நின்ற யானையின் மீது தாவி குதித்து தரைக்கு இறங்கியது. யானை “ஏன்பா குரங்காரே சொல்லக்கூடாது கொஞ்சம் பத்திரமா நிப்பேன் இல்ல” என்று சொல்லி சிரித்தது. சிரிப்பு சத்தம் கேட்டதும் இன்னும் அழ ஆரம்பித்தது புப்பா.

கொஞ்ச நேரத்தில் அந்தப் பக்கமாக பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்ற முயல்குட்டிகள் என்ன பிரச்சனை என்று கேட்டன. இம் முறை குரங்கு பிரச்சனையை சொன்னது. “நாங்க இன்னைக்கு ஒரு பாட்டு பாடினோம் அதை பாடி புப்பாவை மகிழ வைக்கிறோம்” என்றன.

“மனித மாமா மனித மாமா எங்க போறீங்க”

“நாட்டுப் பக்கம் தேர்தல் நடக்குது அங்க போறேங்க”

“தேர்தலிலே தேர்தலிலே என்ன செய்வீங்க?”

“நாட்டை ஆள நல்ல ஆளை தேர்ந்தெடுப்போம்ங்க”

மூன்று முறை முயல்குட்டிகள் பாட, யானையும் குரங்கும் புப்பாவும் பாடின. ‘ஹா ஹா’வென எல்லோரும் சிரித்தனர். திடீரென அமைதி நிலவியது. “அவ்வ்வ், நான் சிரிக்க வெக்க சொல்லியா கேட்டேன். என்னை இறக்க வழி பாருங்க” என மீண்டும் அழுதது புப்பா.

அட ஆமால்ல. சிங்கம், புலி, மான்கள், முதலை என எல்லோரும் வந்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அப்போது முயல்களின் ஆசிரியர் மயில் அந்தப்பக்கம் வந்தது. பிரச்சனையைக் கேட்டது. சத்தமாகச் சிரித்தது. ”நான் இதை ரொம்ப சுலபமா தீர்க்கிறேன்” என்றது. “எல்லோரும் வரிசையில் அமருங்க” என கட்டளையிட்டது. பின்னாடி நின்ற முயல்கள் “அய்யோ, இவங்க வகுப்பு எடுக்கப் போறாங்களா” என குசுகுசுத்தன.

“நான் ஒரு கதை சொல்றேன். ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்தாங்களாம். அப்ப ஒரு காக்கா...” என ஆரம்பித்து கதை சொல்லுச்சாம் மயில். பத்து நிமிடத்தில் எல்லோரும் உறங்கிவிட்டனர். எல்லோரும்னா எல்லோரும். மரத்தில் இருந்த கரடி புப்பாவும். கொர் கொர் கொர். கொர்ர்ர்ர் கொர்ர்ர் கொர்ர்ர். அந்த குறட்டை சத்தத்தில மயிலும் தூங்கிவிட்டது.

கொஞ்ச நேரத்தில் கணீரென்று ஒரு குரல் “என்னப்பா எல்லோரும் இங்க தூங்கறீங்க. என்ன விஷயம்?” என்றது. ஒவ்வொரு விலங்காக முழித்து அதிசயித்து நின்றன. ஆமாம், அந்தக் குரல் புப்பாவினுடையது தான். அது மரத்திற்குக் கீழே நின்று கொண்டிருந்தது. “என்ன யானையாரே” என்று கேட்டது புப்பா. யானை வாயைத் திறந்து பேச முயன்றது; ஆனால் காத்து மட்டுமே வந்தது.

தூங்கி எழுந்ததும் புப்பாவிற்கு மரத்தில் இறங்குவது எப்படி என நினைவிற்கு வந்துவிட்டது போல. சரி சரி கிளம்புங்க கிளம்புங்க!

Share