சின்னச் சின்னக் கதைகள்
Print

நேரம்

வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் நேரம்.

எறும்புக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் ராணி எறும்பு உயர்ந்த இடத்தில் இருந்து ஓங்கிக் குரல் எழுப்பிச் சொன்னது.

“தோழர்களே!’’ வெகு விரைவில் மழைக்காலம் வரப்போகிறது. அதற்குள் நாம் ஒவ்வொருவரும் உணவைத் தேடிக் கொண்டு வந்து நம் புற்றுக்குள் சேகரித்து வைக்க வேண்டும்.

மழை வந்துவிட்டால் நம்மால் வெளியில் செல்ல முடியாது. அப்படியே போனாலும் உணவும் கிடைக்காது; உயிரோடு திரும்பவும் முடியாது.

ஆகவே, உரிய காலத்தில் வேக வேகமாக உணவைத் தேடிச் சேர்க்க வேண்டியது நம் கடமை’’ என்று எச்சரித்தது.

அதை உணர்ந்த எறும்புகள் உணவு தேட உடனே புறப்பட்டன.

இரண்டு சின்ன எறும்புகள் மட்டும் ராணி எறும்பு சொன்னதைக் கண்டுகொள்ளாமல் விளையாட்டும், வேடிக்கையுமாய் பொழுதைக் கழித்தன.

ராணி எறும்பு பேசுவதுபோல் பேசி கேலி செய்து சிரித்தன.

மழைக்காலம் எப்போதும் போல் இல்லாமல் முன்கூட்டியே தொடங்கியது.

வானம் வற்றாத அருவிபோல் மழையைக் கொட்டிக்கொண்டே இருந்தது.

புற்றுக்குள் எறும்புகள் சேமித்து வைத்த உணவு அவ்வளவும் சில நாள்களில் தீர்ந்துபோனது.

கேலி பேசிய எறும்புகளுக்கு உணவே கிடைக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. புற்றை விட்டு வெளியே வர முடியாத நிலை.

பசி தாங்காத சின்ன எறும்புகள் இரண்டும் ஏதாவது உணவு கிடைக்காதா எனத் தேடி புற்றை விட்டு வெளியே வந்தன.

பலத்த காற்றும், மழையும் அந்த எறும்புகளை பலி வாங்கின.

உயிர்போகும்போது அந்தச் சின்ன எறும்பு தன் சன்னக் குரலில் சொன்னது....

“வேளைக்கு செய்யாத வேலை

வேதனை தந்திடும் நாளை...’’

கலை: மு.கலைவாணன்

ஓவியம்: மு.க.பகலவன்

Share