Home முந்தைய இதழ்கள் 2019 ஜூன் 2019 கதை கேளு... கதை கேளு : சோனனுக்கு வந்த சோதனை
வியாழன், 02 பிப்ரவரி 2023
கதை கேளு... கதை கேளு : சோனனுக்கு வந்த சோதனை
Print E-mail

விழியன்

சோனனை இரண்டு நாட்களாகக் காணவில்லை. காட்டிற்குள் எங்கே சென்றாலும் சோனன் ஒரு நாளில் திரும்பிவிடும். சோனன் ஒரு புலி. அதன் தாயும் தந்தையும் எல்லா இடத்திலும் தேடிவிட்டு காட்டின் காவல் நிலையத்திலும் தெரிவித்துவிட்டார்கள். காட்டின் எல்லையில் இருந்த எல்லா கண்காணிப்பு கேமராக்களிலும் பார்த்துவிட்டு “ஒரு புலி கூட காட்டைவிட்டுப் போகவில்லை ஆகவே சோனன் காட்டிற்குள் தான் இருக்கவேண்டும்’’ என்று சொல்லிவிட்டனர்.

மூச்சிறைக்க கரடி பப்லு ஓடிவந்தது. காவல் நிலையத்திற்குள் சென்று சோனன் எங்கே இருக்கின்றது என்ற தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தது. ‘‘சோமசொம்பி ஏரியில் கழுத்தளவு நீரில் சோனன் நின்று இருப்பதாக கழுகு ஒன்று தெரிவித்துள்ளது” என்றது. இன்ஸ்பெக்டர் மித்ரன் நரியும் இவர்களுடன் சோமசொம்பி ஏரிக்கு சென்றது. ஏரியில் சோனன் இருந்தது. இரண்டு நாட்களாக அந்த நீரில் தான் அமர்ந்து இருக்கின்றது சோனன். யார் அழைத்தாலும் சோனன் வெளியே வரவே இல்லை.

சோனனை வெளியே வரவழைக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். சோனனின் பள்ளி நண்பர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். “சோனன்... யூ ஆர் எ குட் புலி நோ” என்று ஆங்கிலத்தில் பேசியது தலைமை ஆசிரியர் புலி. மசியவில்லை. தன் நண்பன் பப்லு கரடியிடம் மட்டும் என்ன செய்தி என்பதைச் சொல்கின்றேன் எனச் சொன்னது. எல்லோரையும் தூரப் போகச் சொன்ன இன்ஸ்பெக்டர் மித்ரன், பப்லுவை மட்டும் சோனனிடம் போகச்சொன்னது.

செய்தியை சோனனிடம் கேட்டதும் பப்லு தொபதொபவென ஓடி வந்தது. “சோனனின் உடம்பில் இருந்த கோடுகள் காணாமல் போய்-விட்டதாம். கோடுகள் இல்லை என்றால் அதை புலியாக ஏற்றுக்கொள்ளாமல் காட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள் என சோனன் பயப்படுகின்றது” என்றது. அதற்குள் தொலைக்-காட்சியில் பப்லு சொன்னதை அப்படியே ஒளிபரப்பிவிட்டார்கள். காடு முழுவதற்கும் இந்த செய்தி தெரிந்து “புலிக்கு கோடு போய்விட்டதா? அய்யோ? இனி என்ன செய்வார்கள்?” என தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியும் துவங்கி-விட்டது.

காட்டுப் பஞ்சாயத்து தலைவர் (சரியான தீர்ப்புகளை உடனுக்குடன் சொல்பவர்) சிங்கராஜாவும் சோமசொம்பி ஏரிக்கரைக்கு வந்தார். முதன்முதலாக இங்கே சோனனைப் பார்த்த கழுகு ஒரு யோசனையைச் சொன்னது. பக்கத்துக் காட்டில் விஞ்ஞானி வீராச்சாமி என்ற ஆந்தை இருப்பதாகவும் அது விலங்குகளுக்கு என்ன நோய், வியாதி வந்தாலும் சரி செய்யும் என்றும் தெரிவித்தது. ஆனால் அந்த ஆந்தையிடம் அலைபேசி இல்லை என்று சொன்னது. கழுகை உடனே சென்று அந்த விஞ்ஞானியை அழைத்துவரச்சொன்னது பஞ்சாயத்து தலைவர்.

சோனனின் நிலைமையைச் சொல்லி விஞ்ஞானி வீராச்சாமியை அழைத்து வந்தது கழுகு. வீராச்சாமி தன்னுடன் யானை ஒன்றினை அழைத்து வந்தது. யானையின் முதுகு முழுக்க மூலிகைச் சாமான்கள், ரசாயனப் பொருட்கள், ஆராய்ச்சி திரவங்கள் என தொங்கிக்கொண்டு இருந்தது.

“ஓ... பெரிய மருத்துவர்தான் போல” எனப் பேசிக் கொண்டார்கள்.

சோனன் இரவானதும் தான் வெளியே வருவேன் என்று சொல்லிவிட்டது. மேலும் எல்லா விலங்குகளும் சென்றுவிட வேண்டும் என கேட்டுக்கொண்டது. இன்ஸ்பெக்டர் மித்ரன் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தியது. நடுச்சாமம் சோனன் வெளியே வந்தது. குளிரில் அதன் உடல் நடுங்கியது. ஆந்தை ஒரு போர்வையை போர்த்தி சோனனை பரிசோதனை செய்தது. அரைமணி நேரத்திற்கு பிறகு,

“பரிசோதனை முடிந்தது. சோனனின் பெற்றோர்களை வரச்சொல்லுங்கள்” என்றது விஞ்ஞானி வீராச்சாமி.

ஒரு துண்டுச் சீட்டில் எதையோ கிறுக்கி கொடுத்தது.

“மருத்துவரே இதைச்செய்தால் சோனனுக்கு கோடுகள் திரும்ப வந்திடுமா?” என்றனர் இருவரும். பப்லு துண்டுச்சீட்டை பறித்து படித்தது.

1.            தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்கவும்.

2.            நிறைய கீரை வகைகளை சாப்பிடவும்.

”இதை இரண்டும் செய்தால் கோடுகள் வளர்ந்திடுமா?” என ஆச்சரியத்துடன் கேட்டது பப்லு.

விஞ்ஞானி வீராச்சாமி தன் சாமான்களை எடுத்து வைத்தபடியே சொன்னது. “கோடுகள் வளராது. ஆனால் கோடுகள் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். சோனனுக்கு கண்பார்வை கொஞ்சம் குறைந்துவிட்டதுப்பா” என்றதும் எல்லோரும் சிரித்தார்கள்.

Share