
வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சு பயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சு!
புதிய ஆசான் வந்தாச்சு புதிய பாடம் எடுத்தாச்சு அதிக நேரம் படித்தால்தான் ஆகும் வெற்றி என்றாச்சு!
வீட்டுப் பாடம் செய்கின்ற வேளை எல்லாம் வந்தாச்சு பாட்டும் கூத்தும் சற்றொதுக்கிப் படிக்கும் நேரம் வந்தாச்சு!
தூங்கும் நேரம் குறைஞ்சாச்சு துள்ளும் ஆட்டம் குறைஞ்சாச்சு ஓங்கி உயர வாழ்ந்திடவே உழைக்கும் நேரம் வந்தாச்சு!
பழைய நண்பர் இருந்தாலும் புதிய நட்பும் சேர்ந்தாச்சு விழைந்து கூட்டாய்ப் படித்திட்டால் வெற்றி கிட்டும் என்றாச்சு!
வருடந் தோறும் புதுப்பாடம் வளர்த்தும் வாழ்க்கை நெறிப்பாடம்! அருமை யான பகுத்தறிவால் ஆளும் நேரம் வந்தாச்சு!
கே.பி.பத்மநாபன், கோவை
|