பயணம் - பாடம்
Print

தேன் எடுப்போமா?


அடலேறு

கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழகைப் பற்றி அல்ல. தேனீக்களைப் பற்றி!

தேனின் சுவையும் நன்மைகளும் நமக்குத் தெரியும். ஆனால் தேன் எப்படிக் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியுமா? தேனீக்கள் தேனடையில் சேகரிக்கும் தேனை, நாம் எடுத்துக் கொள்கிறோம் என்ற அளவுக்கு நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனால், நாம் சுவைக்கும் தேன் அவ்வளவும் அப்படி இயற்கையில் கிடைப்பது அல்ல. எல்லா மக்களும் பயன்படுத்தும் அளவுக்குத் தேன் வேண்டுமென்றால், எல்லா நிறுவனங்களும் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் அளவுக்குத் தேன் வேண்டுமென்றால் அவை எங்கோ உருவாக்கப்பட வேண்டும் அல்லவா? நாம் இன்று பயன்படுத்தும் தேன் எப்படி கிடைக்கிறது? தேனில் எது இயற்கையானது? எது வளர்ப்புத் தேனீக்கள் தருவது? எது போலி என கண்டுபிடிக்க வேண்டுமா? இதை அறியும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. அங்கே உங்களையும் அழைத்துச் செல்கிறேன்.

வாருங்கள் செல்வோம்! இது கேரள மாநிலத்தில் தமிழக எல்லைக்கருகில் அமைந்திருக்கும் வண்டிப்பெரியார் என்ற ஊரில் அமைந்துள்ள “Jothy's Natural Bee Farms”!  நீளமான மரங்கள் சூழ, நீரோடும் ஆறு என அழகிய இடத்தில் அமைந்துள்ளது இத் தேன் பண்ணை! (தேன் பண்ணையா? தேனீ பண்ணையா? பால் பண்ணை இருக்கும்போது தேன் பண்ணை இருக்கக் கூடாதா?) உள்ளே சென்றதும் ஏராளமான பெட்டிகளைக் காண முடிகிறது. ஒவ்வொரு பெட்டியும் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கபட்டுள்ளது. பெட்டிகளின் வெளியே தேனீக்கள் வந்து வந்து செல்வதை பார்க்கலாம். அனைவரையும் வரவேற்ற இப் பண்ணையின் நிர்வாகியும், தேன் பண்ணை வைப்பதற்கென்றே படித்து பயிற்சி பெற்றவருமான ஜோதி பூக்களில் தேன் எடுப்பது முதல் நம் உணவாக தேன் அமைவது வரை நடக்கும் அனைத்து செயல்முறைகளையும் விவரமாக எடுத்து கூறினார்.

எல்லாப் பூக்களிலுமிருந்தும் தேனீக்கள் தேன் எடுப்பதில்லை. காயாக மாறும் பூக்களில் தான் தேன் கிடைக்கும் என்று, முதல் வியப்புச் செய்தியோடு தொடங்குகிறார். அதாவது மாங்காய், வாழைக்காய் போன்று பயன் தரும் தாவரங்கள், மரங்களிலுள்ள பெண் பூக்களில் மட்டுமே தேன் கிடைக்கும். ஆண் பூக்களில் மகரந்தம்(Pollen) இருக்கும்.

பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் நிறுவனங்களின் தேன் ஒரே நிறத்தில் ஒரே சுவையில் இருக்கிறது. அது தேனீக்களால் தயாரிக்கப்படும் தேன் தான் என்றாலும் இயற்கையான தேன் அன்று. வளர்ப்புத் தேனீக்களை(Broiler bees) செயற்கைப் பண்ணைகளில் வளர்க்கும்போது, அத் தேனீக்கள் ஒரே இடத்தில் ஒரே வகை மரங்களில் தேன் எடுக்கின்றன. ஆனால் இயற்கை தேனீ வளர்ப்புக் கூடங்களில், கிடைக்கும் தேனும், மரங்களில் கிடைக்கும் தேனடையிலிருந்து நாம் பெறும் இயற்கைத் தேனும் ஒரே சுவையில் நிறத்தில் இருப்பதில்லை.

ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப வெவ்வேறு மரங்களில் உள்ள பூக்களில் தேன் சேகரிப்பதால் அவற்றின் சுவையும் அவ்வப்போது மாறுபடும். எடுத்துக் காட்டாக மாம்பூக்களில் எடுக்கபடும் தேன் அதே சுவையை ஒட்டி இருக்கும். பூக்களில் இருந்து உறிஞ்சும் தேனை விழுங்கி, தேனீ அதை மீண்டும் வாய் வழியே வெளியிடும்போது தேன் உருவாகிறது.

ஒவ்வொரு தேனீயும் தன் வாழ்நாளில் 1/12 (பன்னிரண்டில் ஒருபங்கு) தேக்கரண்டி தேனைத் தான் உருவாக்கும். (அப்படியெனில் எவ்வளவு தேனீக்களின் உழைப்பை நாம் உறிஞ்சுகிறோம்?) அப்படி உருவாகும் தேனை நாம் பிரித்தெடுத்ததும் 45 நாட்களில் அது கெட்டுப் போய்விடுமாம். கெடாமல் பாதுகாப்பதற்காகவே தேனைச் சுட வைத்து ஆறவைப்பார்களாம். சுட வைத்த தேன் ஆயிரம் வருடங்கள் கெடாமல் இருக்கும் என்று கூறுகிறார். ஜோதி தேன் பண்ணையில் மழைக்காலத் தேன்கள் வெயில்காலத் தேன்கள் என்று பிரித்துப் பார்க்கிறார்கள். தேனில் தண்ணீரும் கலந்து இருக்கும். சூடாக்கும்போது தான் தண்ணீர் இல்லாமல் தூய தேன் மட்டும் கிடைக்கிறது. மழைக் காலத்தில் கிடைக்கும் தேனில் தண்ணீரின் அளவு வெயில்கால தேனைவிட அதிகமாக இருக்கும். கட்டியாகக் கிடைக்கும் தேன்களை தவிர்க்க வேண்டும். அதில் ஒரு வித சத்தும் இருக்காது. பல இனத் தேனீகளில் இந்தியத் தேனீகளே சிறந்தவை. இவை 80_-100 கிமீ வேகத்தில் செல்லக் கூடியவை என்கிறார் அத் தேன் பண்ணையின் பொறுப்பாளர்.

சரி, இப்போது முன் சொன்ன பெட்டிக்கு வருவோம். பண்ணையிலுள்ள ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு ராணித் தேனீ இருக்கும். அது ஒவ்வொரு நாளும் 1000_-2000 முட்டைகள் இடும். இதன் ஆயுள் நான்காண்டு காலம். அதே பெட்டியில் வேலைக்காரத் தேனீக்களும் ஏராளமாக இருக்கும். இவை தாயாகும் தன்மை இல்லாத பெண்கள். இவற்றின் ஆயுள் எழுபது நாட்கள் மட்டுமே. ஆண் தேனீக்கள் தான் பெட்டியில் சோம்பேறி. ஆண்களின் ஆயுள் தொண்ணூறு நாட்கள். தேனீக்களால் நம்மை  கடிக்கவும் கொத்தவும் முடியும். கொத்தும் தேனீக்கள் இறந்துவிடும். கடிக்கும் தேனீக்கள் இறப்பதில்லை. இதனால் ராணித் தேனீக்கள் கொத்துவது இல்லை.

தேனீக்கள் இருக்குமிடத்தில் கல், மண் இவற்றோடு சேர்த்து தேனீக்களைப் பிடித்து வருவார்களாம். அதை அப்படியே ஓரிடத்தில் கொண்டு போய் வைக்கும்போது, தேனீக்கள் பிரியாமல் கலையாமல் அதே இடத்தில் இருந்தால், அந்தக் கூட்டத்தில் ராணித் தேனீயும் இருப்பதாகப் பொருள். ஒருவேளை நாம் வைத்த இடத்திலிருந்து அவை பிரிந்து சென்றால், அந்தக் கூட்டத்தில் ராணித் தேனீ இல்லை என்று பொருள்.

அவ்வாறு பெட்டியில் அடைக்கும்போது, தேனீக்கள் வெளியில் சென்று வர, பெட்டியில் ‘னிuமீமீஸீ நிணீtமீ’ ஒன்று அமைக்கபடும். உருவத்தில் பெரிதாக இருக்கும் ராணித் தேனீயைத் தவிர அனைத்து தேனீக்களும் வெளியே சென்று வரலாம். ராணி வெளியே போக முடியாததால் தொடக்கத்தில் முட்டை போடுவதை நிறுத்திவிடுமாம். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி மொத்தமாக

15000_-25000 முட்டைகள் இடுமாம். ஒரு மாதம் கழித்துப் பெட்டியைத் திறந்து ராணித் தேனீ கண்டுபிடிக்கபடும். அது ஓடுவதை தவிர்க்க அதை கொன்றுவிடுவார்களாம். அச்சோ... பாவம்!

ராணி முதல் இரண்டு வருடங்களில் அதிக முட்டையிடும். வயதாக ஆக முட்டைகள் இடுவது குறைந்துவிடும். பெட்டியில் இருக்கும் எல்லாத் தேனீக்களாலும் ராணி ஆக முடியாது. அதனால் எல்லாம் சேர்ந்து ராணியை உற்பத்தி செய்யத் தொடங்குமாம். எடுத்துக்காட்டாக, 6000 முட்டைகளில் 1000 ஆண்களும் 5000 வேலைக்காரப் பெண்களும் இருக்கும். அந்த அய்ந்தாயிரம் முட்டைகளில் இருபது முட்டைகளை ராணியாக தேர்ந்தெடுத்து அவை அனைத்திற்கும் ராணியின் உணவான “Royal Jelly” அளிக்கபடுமாம். (அந்த உணவின் மார்கெட் மதிப்பு ஒரு கிலோ நான்கு லட்சம் வரை விற்கபடுகிறது என்கிறார் அவர். எல்லாத்துக்குமா மார்க்கெட் வேல்யூ பார்க்கிறது?) அதென்ன ராயல் ஜெல்லி? வேலைக்காரப் பெண் தேனீகளின் வியர்வையே “Royal Jelly”  இதனை உண்ணுவதன் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட இருபது தேனீகளும் ராணிக்கான போட்டிக்குத் தயாராகின்றன.

முதலில் ராணி ஆகும் தேனீ, மற்ற ராணிகளை கடித்து கொன்றுவிடும். Survival of the Fittest! பெட்டியில் உள்ள தகுதி வாய்ந்த ஆண் தேனீயை கண்டெடுத்து வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் இனச்சேர்க்கை செய்யும். சில நாட்களில் முட்டையிடத் தொடங்கும். அதன்பின் ஒரு மாதத்தில் தேன் கிடைத்துவிடும். இவை பாரம்பரியமாக இத் தொழிலில் ஈடுபடுபவர்களின் அனுபவத்தில் கிடைத்த செய்திகள் இதற்கென தனி சான்றிதழ். படிப்பும், பயிற்சியும் இருக்கிறதாம். கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முறையாக தேன் பண்ணை அமைக்க கற்றுத் தருகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது சுற்றிலும், தேனீக்கள் வந்து சென்றபடியே இருந்தன. பயமில்லாமல் எங்களை அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன அவர், தேனடை உருவாகியுள்ள தகட்டைக் கையில் கொடுத்தார். தூக்கிப் பார்த்தோம். யாராவது தேனீயைக் கையில் பிடித்துப் பார்க்கிறீர்களா என்றார். யம்மாடி, கொட்டுனா என்னாகிறது? என்று தான் நினைத்தோம். ஆனால், பயப்பட வேண்டியதில்லை. கைகளில் தேனீக்கள்  இருக்கும் போது  கைகளை ஆட்டக்கூடாது. தேனீக்கள் இருக்கும் இடத்திலும் கைகளை அதிகம் ஆட்டக்கூடாது. அப்படி ஆட்டும்போது தான், தனக்கு எதிரி இருப்பதாக எண்ணி அது கடிக்கும். அப்படி அது கடித்தாலும் அந்த இடத்தை தேய்க்கக் கூடாது. அது மற்ற தேனீக்களை வரச் செய்யும். அதே போல்  மஞ்சள் சுண்ணாம்பு தடவுவதைத் தவிர்த்து எச்சில் அல்லது பச்சை இலை முதலியவற்றை மருந்தாக தடவலாம் என்று சொல்லி முடித்தார். பிறகுதான் நம்பிக்கையுடன் கையில் தேனீக்களைப் பரவ விடச் சொன்னோம்.. அடடா... எப்படி கெத்தா இருக்கு! வாய்ப்பிருந்தால் நீங்களும் செல்லுங்கள் தேனீக்களின் வாழ்க்கையை காண! கண்டிப்பாக சிறந்ததொரு அனுபவமாக இருக்கும்.

 

Share