தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி
Print

அந்தக் கணினி செஸ் ஆடியபோது விஸ்வநாதன் ஆனந்த் வாய் பிளந்து நின்றார். அதைப் பற்றிக் கேட்டபோது “ கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது” என்றார்.

கூகுள் நிறுவனம் உருவாக்கிய Alpha Zero எனும் செயற்கை அறிவுத்திறன் பொருந்திய கணினியை பார்த்துதான் விஸ்வநாதன் ஆனந்த் இப்படிச் சொன்னார். அந்தக் கணினி உண்மையில் அற்புதமாக விளையாடியது ஒரு நொடிக்கு சுமார் 80 ஆயிரம் செஸ் நகர்த்தல்களை(moves) கணிக்கக் கூடியது.

நிற்க. இதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு IBM நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Deep Blue எனும் கணினியைவிட Alpha zero மிக மெதுவாக செஸ் விளையாடும் கணினி. Deep Blue ஒரு நொடிக்கு சுமார் 20 கோடி நகர்த்தல்களைக் கணக்கிடும். இது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஆனால் ‘Alpha zero’ விஸ்வநாதன் ஆனந்த் முதல் அனைவரின் புருவத்தையும் உயர்த்தக் காரணம், இந்தக் கணினி தாமாகவே செஸ் விளையாட்டை விளையாடக் கற்றுக் கொண்டது என்பதால்தான்.

Deep Blue கணினியில் முழுக்க முழுக்க செஸ் விளையாட்டு என்பது பல அல்காரிதம்களாக ஏற்கெனவே ஏற்றி விடப்பட்டது. ஆனால், Alpha zero யார் உதவியும் இல்லாமல் சொந்தமாக இணையத்தின் உதவியுடன் தானே செஸ் விளையாட கற்றுக் கொண்டது.

ஒரு கணினி தானாகவே விஷயங்களைக் கற்றுக் கொள்வது என்பது மிகவும் வியப்பானதுதான். விஸ்வநாதன் ஆனந்த் வியந்ததும் இயல்பான நிகழ்வுதான். ஆனால், அவர் கூறிய இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் “Scary”.

- வினோத்குமார் ஆறுமுகம்

 

 

Share