Home முந்தைய இதழ்கள் 2019 நவம்பர் 2019 அடுத்த தலைமுறைக்கும் பெரியார்
திங்கள், 26 அக்டோபர் 2020
அடுத்த தலைமுறைக்கும் பெரியார்
Print E-mail

பிஞ்சண்ணா


நம் பெரியார் தாத்தா தமிழ்நாட்டில் பிறந்தவராக, தமிழ் பேசுபவராக, தமிழ் மக்களுக்காகப் போராடியவராக இருந்தாலும், அவரது சிந்தனைகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியவையல்ல. உலகம் எங்கும் இருக்கும் மனிதர்களைச் சமமாகப் பார்க்க விரும்பிய உலகளாவிய பார்வை பெரியார் தாத்தாவோடது!

நீங்கள் கூட அடிக்கடி எல்லோரிடமும் பாடிக் காட்டுவீர்களே... ’தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடல், அதில் மூன்றாம் அடி வருகிறதே அது என்ன சொல்கிறது? “மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடியது வெறும் புகழ்ச்சிக்காக அன்று. அது முற்றிலும் உண்மையே என்பதை உலகம் புரிந்துகொள்கிறது இன்று!

பெரியார் தாத்தாவின் அடிப்படைக் கொள்கைகளான மனிதநேயத்தையும், சுயமரியாதையையும் பற்றி பெரியார் பன்னாட்டமைப்பும், அமெரிக்க மனிதநேய சங்கமும் இணைந்து ஒரு மாநாட்டை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகில் உள்ள மேரிலாந்து மாகாணத்தின் சில்வர் ஸ்பிரிங் நகரில் நடத்தினர். 2019 செப்டம்பர் 21, 22 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் தான் “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்” என்ற பெருமைக்குரிய விருது, நம் ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதின் சிறப்பு என்ன தெரியுமா?

1953-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் சிறந்த மனிதநேயருக்கு அவ்வாண்டுக்கான விருது அமெரிக்க மனிதநேய சங்கத்தினரால் வழங்கப்படுகிறது. ஆனால், நம் ஆசிரியர் தாத்தாவுக்கு வழங்கப்பட்ட விருது வாழ்நாள் சாதனைக்கான விருது. இது அரிதினும் அரிதான ஒன்று.

அது மட்டுமல்ல... இந்தியாவிலிருந்து ஒருவர் அமெரிக்க மனிதநேய சங்கத்தின் விருதைப் பெறுவது இதுவே முதல்முறை! மனிதநேயத்திற்கான விருதினைப் பெற பெரியார் தாத்தா கண்ட இயக்கத்தவரை விட வேறு யார் பொருத்தமானவராக இருந்துவிட முடியும்? அதனால்தான் சரியாக அடையாளம் கண்டு விருது வழங்கியிருக்கிறார்கள் அமெரிக்க மனிதநேய சங்கத்தினர்.

விருது பெற்ற நம் ஆசிரியர் தாத்தா, “இந்த விருது எனக்கு உரியதல்ல; என் தலைவர் தந்தை பெரியாருக்குரியது. அதனை நான் பெற்றுக் கொள்கிறேன். அவ்வளவே” என்று அவையடக்கத்துடன் அறிவித்தது மட்டுமின்றி, “என்னோடு களத்தில் உழைக்கும் கருஞ்சட்டை-யினருக்கும் இதில் பங்குண்டு” என்று சொல்லி, அதன் அடையாளமாக பொறுப்பாளர்கள் சிலரையும் மேடையில் ஏற்றி மகிழ்ந்தார். விருது தந்த அமெரிக்க மனிதநேய சங்கத்தினர் உள்பட அனைவரும் இச் செயலால் நெகிழ்ந்து போயினர்.

இப்படி நெகிழ்வோடும், மகிழ்வோடும் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு விசயங்கள் பேசப்பட்டன. அவையெல்லாமே மனிதநேயச் சிந்தனைகளை விரிவாக அலசின. அதைவிட முக்கியமாக அடுத்த தலைமுறைக்குப் பெரியார் தாத்தாவை அறிமுகப்படுத்தி, நெறிப்படுத்தும் வேலைதான் இந்த மாநாட்டுல நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி!

“பெரியார் பிஞ்சு” இதழைத் தொடங்கி, குழந்தைகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்துவர்ற நம்ம ஆசிரியர் தாத்தா, நம்ம நிகழ்ச்சிகள் எல்லாத்திலேயும் குழந்தைகள் பங்கேற்கணும்னு சொல்வாங்கள்ல! அது அப்படியே அங்கேயும் பின்பற்றப்பட்டது.

மாநாட்டை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக 9 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலைவர்களின் படங்களுக்கு வண்ணம் தீட்டுதல், தலைவர்களின் படங்களை வரைதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பலர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை காண்பித்தனர். அதே போன்று மழலைகளுக்கும் 12 வயது உட்பட்டவர்களுக்கும் மாறுவேடப் போட்டி நடந்தது. அதில் ரோசா பார்க்ஸ், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் போன்ற வேடங்களில் குழந்தைகள் மேடை ஏறியது காண்போரை ஈர்த்தது.

அதைத் தொடர்ந்து மனித நேய மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் பள்ளி மாணவர்கள் உரையாற்றிய பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. அந்த மேடையிலேயே பலர் தங்கள் உரைகளை நிகழ்த்தியும் கைதட்டலைப் பெற்றனர்.

பிறகு மழலைகள், வளர் இளம் குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்குமான சீஷீuஜிuதீமீ போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளிகள் மேடையில் திரையிடப்பட்டன. குழந்தைகள் உள்பட அனைவரும் பங்கேற்ற பாடல், ஆடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டாம் நாள் மாலையில் இரண்டு பெரியார் பிஞ்சுகள் கடவுள்மறுப்பு சொல்லி பாராட்டு பெற்றனர்.

மாநாட்டை ஒருங்கிணைத்த டாக்டர் சோம.இளங்கோவன் தாத்தாவோடு இணைந்து இந்தப் போட்டிகளை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்தவர்கள் அருள் பாலு, துரைக்கண்ணன், சுபாசு சந்திரன், சரவணன், பிரபாகரன், வினோத், வினோ பிரியா, கனிமொழி உள்ளிட்ட ஏராளமான அத்தை - மாமாக்கள், பெரியம்மா - பெரியப்பாக்கள்,  சித்தி - சித்தப்பாக்கள்!

மாநாட்டில் நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்ச்சியில அமெரிக்காவிலிருந்த நம் சகோதர, சகோதரிகளான பெரியார் பிஞ்சுகள் அவங்கவங்க குடும்பத்தோட கலந்துக்கிட்டாங்க! அதில வித்தியாசமான கெட்-அப்புல நம்ம ஆசிரியர் தாத்தாவும் கலந்துக்கிட்டாரு... அது என்ன தெரியுமா? அடுத்த இதழ்ல நம்ம ஆசிரியர் தாத்தா மூலமே அதைக் கேட்போம்.

Share