Home முந்தைய இதழ்கள் 2019 நவம்பர் 2019 கதை கேளு... கதை கேளு... ஷொய்ன்யிங் ளை டவ் இண்டு
திங்கள், 26 அக்டோபர் 2020
கதை கேளு... கதை கேளு... ஷொய்ன்யிங் ளை டவ் இண்டு
Print E-mail

விழியன்


காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்றால் பெரியப்பாவின் வீட்டுக்கு ஓடிவிடுவான் சீனு. பெரியப்பா மாமல்லபுரத்தில் கடை வைத்திருக்கின்றார். பெரியப்பாவிற்கு சீனு வயதில் ஒரு மகள் உண்டு. இருவரும் ஒரே வயதென்றாலும், பானு, சீனுவைவிட ஒரு வகுப்பு சீனியர்.  பானுவின் புத்தகங்கள் அனைத்தும் சீனுவுக்குக் கிடைத்துவிடும். இவ்வாண்டு காலாண்டு விடுமுறை சீனுவுக்கு பெருத்த ஏமாற்றமே! பெரியப்பா கடற்கரை அருகே கடைபோடவில்லை; போடவிடவில்லை.

சீனக் குடியரசுத் தலைவர் மாமல்லபுரம் வர இருக்கிறார் என்று ஒரு மாதமாகவே பயங்கர கெடுபிடி. அவர் வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தாலும் கடைகள் எதுவும் போடக்கூடாது என ஆணை பிறப்பித்து இருந்தனர். ஊரே ஒரு வாரத்தில் சுத்தமாக நம்பமுடியாத அளவுக்கு மாறி இருந்தது. ஒவ்வொரு வீதியிலும் நடக்கும்போது, “அட, இது நம்ம ஊரா!” என வியக்கும் அளவிற்கு இருந்தது.

சீனுவிற்கும் பானுவிற்கும் பெரிய ‘செட்’ இருந்தது. ஆனால், விடுமுறை நாள்களில் இவர்கள் அனைவருமே பெரும்பாலும் கடைகளில் அடங்கிவிடுவார்கள். தத்தமது பெற்றோர்களுக்கு உதவியாகவோ, நண்பர்கள் ஒன்றாகவோ ஏதேனும் விற்பார்கள். இந்த விடுமுறைக்கு எல்லோர் வீட்டிலும் பிரச்சனை. இங்கே பெரும்பாலானவர்கள் கடற்கரையில் கடை வைத்திருப்பவர்கள்தாம்! குறிப்பாக ‘குழந்தைகள் வரவேகூடாது’ என்று சொல்லிவிட்டார்கள். மாமல்லபுரம் கடற்கரையை விட்டால் புலிக் குகைக்குப் (Tiger Caves) படையெடுப்பார்கள் சிறுவர்கள். ஒரு மிதிவண்டியில் மூவர் என கிளம்பிடுவார்கள். அங்கேயும் இதே போல ஏதேனும் பொருள்கள் விற்பார்கள். சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வருவார்கள்.  பொருள்கள் விற்பதில் ஈடுபடக்கூடாது என்று பானுவிடம் அவர் அப்பா ரொம்ப கண்டிப்பாக  கடந்த ஆண்டே சொல்லிவிட்டார். “கண்ணு, நீ படிப்புல மட்டும் கவனம் வை ஆத்தா, காசு பணத்தை நானும் அம்மாவும் பார்த்துக்கறோம்” என்று சொல்லிவிட்டார். சீனு வந்தாலும் அவனுக்கும் இதே ஆணைதான்.

“டேய், அந்த விருந்தினர்கள் சந்திப்பு எங்க நடக்குது?” என்று கேள்வி எழுந்து, நண்பர்கள் அனைவரும் அந்த அய்ந்து நட்சத்திர ஓட்டலுக்கு நடையைக் கட்டினார்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியிலேயே அடிக்கடி மழை பெய்ய ஆரம்பித்து இருந்தது. மொத்தம் பதினொரு நண்பர்கள். அய்ந்து பெண்கள் அதில் அடக்கம். ஓட்டலின் நாலா புறமும் நூறடிக்கு யாருக்கும் அனுமதி இல்லை என தடுப்புத் தட்டிகள் வைத்திருந்தார்கள். சோமு மாமாவின் டீக்கடையில் எல்லோரும் ஒதுங்கினார்கள். யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவது என்னவென்று அப்போது தான் பார்த்தார்கள். “என்ன மாமா, பயங்கர வேலையா?” என கிண்டலடித்தான் அந்த ‘செட்’டின் தைரியசாலியான சதீஷ். “அட, நீ வேறப்பா. இந்தப் பக்கமே யாரையும் வரவிட்றதில்லை. சண்டை போட்டு கடைய தொறந்து வெச்சிருக்கேன்” சில பையன்கள் கடைக்குள் புகுந்து சாமான்களைக் கழுவினார்கள். சோமு மாமா எல்லோருக்கும் சூடான டீ போட்டுக்கொடுத்தார். பானு மட்டும் பால் போதும் என்றாள்.

டீக்கடையில் இருந்து ஓட்டலில் நடந்ததைப் பார்க்க முடிந்தது. வரவேற்பு ஒத்திகை நடைபெற்றது. அதாவது இந்திய விருந்தினர்கள் மற்றும் இந்திய அதிகாரிகள் வருகை புரிந்தால் எப்படி வரவேற்க வேண்டும் என ஒத்திகை. “எதோ பராட்டோகாலாம்“ என்றார் சோமு மாமா. பானு அவரை திருத்தினாள். “மாமா, அது ப்ரோட்டோகால்.”

சீனுவிற்கு அந்த எண்ணம் தோன்றியது. “நாம ஒரு டிராமா போடலாமா?” என்றான். அனைவரும் ஆர்வமாகிவிட்டனர். நாடகத்தின் மய்யம் சீன அதிபர் இந்தியா வருகையும் அவர் யாரும் எதிர்பாராத வண்ணம் கடலோரக் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளைச் சந்திப்பதும்தான். சீனு தான் முழுக் கதையையும் வடிவமைத்தான். பானுவின் ரப் நோட்டின் கடைசி பக்கங்களில் ஒவ்வொரு காட்சியாக எழுதினான். எல்லாம் சோமு மாமாவின்  கடையிலேயேதான் நிகழ்ந்தது. சுமார் இரண்டு மணி நேரத்தில் ஆளுக்கு ஒரு பாத்திரமும் கதையும் தயாராகிவிட்டது. சோமு மாமா கொஞ்சம் ஆசையாக, “எனக்கும் ஒரு ரோல் தாங்களேண்டா” என்றார். சிறுவர்கள் மறுத்துவிட்டார்கள்.

அன்றைய மாலை கதை வேறு வடிவத்தினை அடைந்து இருந்தது. எப்போதும் மொபைலுடன் சுத்திக் கொண்டிருக்கும் மோனிகா அக்காவிடம் தான் அதற்கான சீன மொழிபெயர்ப்பினைக் கேட்டார்கள். தலைப்பு “வெல்கம் டு இந்தியா”.

அது தான் “ஹொய்ன்யிங் ளை டவ் இண்டு”. அந்தத் தலைப்பைச் சொல்லிச் சொல்லி எல்லோரும் சிரித்தார்கள். சீன அதிபர் காரில் இருந்து இறங்கியதும் எல்லாரும் இதனை சத்தமாகச் சொல்ல வேண்டும். மறுநாள் காலை மீண்டும் எல்லோரும் சோமு மாமா கடையில் குழுமினார்கள். அப்போது கடையில் ஒரு கான்ஸ்டபிள் அமர்ந்து இருந்தார். பார்க்க வெடுக்கென இருந்தார். எல்லாரும் அமைதியாக இருந்தார்கள். சோமு மாமா, “டேய், தம்பிகளா! அந்த டிராமாவை இவருக்குச் சொல்லுங்க” என்றார். கதையைச் சொன்ன பிறகுதான் அவருக்கு சிரிக்கத் தெரியும் என்று புரிந்தது. “ஒரு கான்ஸ்டபிள் ரோல் வை. சோறு தண்ணி இல்லாம நிக்கிற மாதிரி கேரக்டரை வை” என்றார். பாவம்! கதையில் இன்னும் சில நுணுக்கங்களை வைக்கச் சொன்னார்.

“ஆமாம், யாருக்கு இந்த டிராமாவை போட்டு காட்டப்போறீங்க?” என்று கேட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.

“ஆமால்ல? யாருக்குப் போட்டுக் காட்றதாம்” என்று குழப்பம். மறுநாள் அதிபர் வருகின்றார் என்று ரேடியோவில் ஒலித்தது. மேலும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் எல்லாம் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார்களாம்! ஊருக்குள் கடைகள் எதுவும் கூடாது, எல்லோருக்கும் விடுப்பு என்றும் அறிவிப்பு. “தம்பிங்களா, ஊருக்கு நடுவுல இருக்கற ஆலமரத்தடியில போடுங்க உங்க ஆட்டத்தை” என்று இடத்தையும் நேரத்தையும் சோமு மாமாவே கூறினார்.

பானுவின் வீட்டுப் பக்கத்திலேயே ஒரு திரையரங்கம் உள்ளது. மாடியில் உட்கார்ந்தால் 11 மணிக்கு மேல் சினிமா வசனங்கள் எல்லாமே கேட்கும். அன்றைய நாள் மாலை திரையரங்குகள் ஹவுஸ்புல். “கடலுக்கும் போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதான் சினிமாவுக்கும் கும்பலா வந்துட்டோம். வாங்க அண்ணே நீங்களும் சினிமாவுக்கு” என்று பெரியப்பாவை அழைத்தார், தூரத்து உறவினர் ஒருவர். மறுத்துவிட்டார் பெரியப்பா. பெரியப்பா பணக்கஷ்டத்தில் இருப்பது நன்றாகவே புரிந்து இருந்தது. ஊரில் இருந்து சீனு வந்தால் விதவிதமான உணவினை பெரியம்மா சமைப்பார்கள். தன் மகனைப் போலவே பெரியம்மாவும் கொஞ்சுவார்கள். ஆனால், இந்த விடுமுறைக்கு அப்படி இல்லை. சில நாள்கள் பழைய சோறுகூட கிடைக்கவில்லை. பத்துநாள் கடைக்குப் போகாமல் இருந்தால் என்னாவது! சேமிப்பு எல்லாம் போயே போயிடுச்சு! பெரியம்மாதான் பெரியப்பாவை தேத்தினார்கள். “இன்னும் ரெண்டு நாள்தான். மொட்டை மாடியில் சினிமா வசனங்கள் கேட்டு தூங்கலாம்” என்று பெரியப்பா சீனுவையும் பானுவையும் அழைத்தார். பானுவும் தன் பள்ளிப் பையுடனே மாடிக்கு வந்தாள். “இவ ஒருத்தி” என்று சீனு கிண்டலடித்தான். புதிதாக வெளியான ‘அசுரன்’ திரைப்படம். படம் முடியும்போது இப்படி ஒரு வசனம் வந்தது.

“ஆனா படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுக்கவே முடியாது. அவனை ஜெயிக்கணும்னு நெனச்சின்னா படி. நல்லா படிச்சி அதிகாரத்தில போய் உட்காரு. ஆனா அதிகாரத்துக்கு வந்த அப்புறம் அவனுக நமக்குப் பண்ணினதை எவனுக்கும் பண்ணாத!”

“கேட்டீங்களா, பசங்களா! கல்விய மட்டும்தான் யாரும் புடுங்கிக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் படிக்கணும். படிச்சு பெருசா வரணும். ஆனா யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலேயும் ஒரு தொந்தரவும் தந்திடக்கூடாது. உங்களுக்கு வலின்னா என்னன்னு புரியுமில்லையா?” என்று சொல்லும்போது கண்கலங்கினார்.

பானு தன் பள்ளிப் பையினை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். சீனு பெரியப்பாவை அணைத்துக்கொண்டான்.

மறுநாள் காலை ஒத்திகைக்கு எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தபோது, சீனு, டிராமாவின் புதிய தலைப்பினைக் கூறினான்

“ஹொய்ன்யிங் ளை டவ் இண்டு!”

“அப்படின்னா?”

“வெல்கம் டு நியூ இந்தியா!”

Share