Home முந்தைய இதழ்கள் 2019 டிசம்பர் 2019 கதை கேளு... கதை கேளு... : கடைசி நொடிகள்
செவ்வாய், 26 மே 2020
கதை கேளு... கதை கேளு... : கடைசி நொடிகள்
Print E-mail

விழியன்

“சீக்கிரம் கால்பந்து விளையாடிட்டு வந்துடுங்க” என அம்மா சொல்லி அனுப்பினார். நரேனும் நாதனும் உற்சாகமாகக் கிளம்பினார்கள். என்ன உற்சாகமாகக் கிளம்பி என்ன பயன்? மிகவும் மெதுவாகத்தான் நடக்க முடியும். ஏனெனில் அவர்கள் தற்சமயம் வசிப்பது நிலவில் அல்லவா? நிலவிற்கு அவர்கள் குடிபெயர்ந்து அய்ந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பூமியில் வசித்த கடைசி காலங்களில் நரேனுக்கும் நாதனுக்கும் கால்பந்து விளையாடுவது என்றால் மிகவும் விருப்பம். அதனால் நிலவிற்கு வந்தும் அவர்கள் விளையாடுவதை நிறுத்தவில்லை.

நிலவில் இரண்டே இரண்டு குடியிருப்புகள்தான் இருந்தன. இரண்டுமே வட துருவத்தில் அமைந்து இருந்தன. பூமியில் மனிதர்கள் வாழும் சூழல் முடிவடைந்த நிலையில் எஞ்சி இருந்த சிலர் நிலவில் குடியேறினார்கள். சிலர் விண்வெளிக் கப்பலை எடுத்துக்கொண்டு வியாழன் கோளை நோக்கிப் பறந்தார்கள். அவர்கள் நிலை என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை. நிலவில் இருப்பவர்கள் பூமியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தி மீண்டும் மனித உயிர்களை அங்கே வாழ வைக்க முடியுமா என முயல்கின்றனர். சரிபாதி அங்கே இருப்பவர்கள் விஞ்ஞானிகள்தாம்.

தென் துருவத்திற்குச் செல்லக்கூடாது என்று கடுமையான சட்டம் இருந்தது. வட துருவத்தில் மட்டுமே கடைகள், குடியிருப்புகள், திடல்கள் இருந்தன. டூரிங் தாத்தா நிலவில் கிடைத்த நீரினை வைத்து அங்கே செடிகள் வளர்க்க முயன்றுகொண்டு இருந்தார். அது சுமார் நான்கு அடிவரை மட்டுமே வளர்ந்தது. அதன் இலைகள் நீல நிறத்தில் மட்டுமே இருந்தன. வட துருவத்தின் எல்லைகளை இந்தச் செடிகள் வைத்தே அடையாளம் காணலாம்.

அங்கே விளையாட்டுத் திடல்கள் மிகவும் சிறியதாக இருந்தன. நாதனுக்கு அது பிடிக்கவே இல்லை. வீடும் குட்டி. “நரேன் நாம அந்தச் செடிகளுக்கு அந்தப் பக்கம் போய் விளையாடலாம் வா”.

“இல்ல... அம்மாவும் நிலா தலைவரும் கூட அந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்லையா?”

“அவங்க சொல்லுவாங்கடா. வா நாம போவோம்.”

அந்த நீல நிறச் செடிகளை விலக்கி, எல்லையைக் கடந்து தென் துருவத்தினை நோக்கி நகர்ந்தார்கள். நிலவில் வாழும் எல்லோரும் கழுத்தில் எந்நேரமும் ஒரு கருவியை மாட்டி இருக்க வேண்டும். அதில்தான் மற்றவர்கள் தொடர்புகொள்வார்கள். ஏதேனும் அபாயச் செய்தி என்றால் எல்லோருக்கும் ‘ப்ராட்காஸ்ட்’ ஆகிவிடும்.

அங்கே மிகப்பெரிய திடல் போன்ற இடம் இருந்ததும் நரேன் உற்சாகம் அடைந்துவிட்டான். நாதனும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். பந்தினை எட்டி எட்டி வெகு தூரத்திற்கு அடித்து விளையாடினார்கள். அந்த சமயம்தான் கழுத்தில் இருந்த கருவியில் சிகப்பு விளக்கு எரிந்து ‘அலாரம்’ அடித்தது. ஏதோ அபாயம் என நாதனுக்கும் நரேனுக்கும் புரிந்தது.

“நரேன்! நாதன்! எங்க இருக்கீங்க?” அம்மாவின் குரல்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில அதிவேக வால்நட்சத்திரம் ஒன்னு நிலாவைக் கடக்கப்போகுது. நம்ம விஞ்ஞானிகள் கண்ணுக்கு இப்பத்தான் தெரிந்து இருக்கு. ஒரு விண்வெளிக் கப்பலில் இங்க இருக்கிறவங்க எல்லாம் ஏறி அந்த வால்நட்சத்திரத்தைப் பிடிச்சிட்டா 10 ஆண்டுகளில் மனிதர்கள் வாழக்கூடிய இடத்திற்குப் போயிடலாம். வேற எந்த விண்வெளிக் கப்பலையும்விட இதுதான் அதிவேகமா இருக்கும். அதேபோல நமக்கு எரிபொருளும் தேவையில்லை. சீக்கிரம் வாங்க. எல்லோரும் பொருள்களை எடுத்து வெச்சிட்டு இருக்கோம். 10 நிமிடத்தில் வாங்க” என்று கூறி அழைப்பினைத் துண்டித்தார்.

“வா, சீக்கிரம் போகலாம்”

‘ஒரே ஒரு ‘ஷாட்’ மட்டும்’ என ஓங்கி அடித்தான் நாதன். பந்து பறந்து மெதுவாக விழுந்தது. தூரத்தில் விழுந்துவிட்டது. “இரு எடுத்துட்டு வரேன்” என நரேன் ஓடினான். பத்து நிமிடமானதால் அம்மா திரும்ப அழைத்தார் “நாதன்! நரேன்! எங்க இருக்கீங்க? எல்லோரும் ஏறிட்டோம்... அம்மா...” அழைப்பு துண்டித்துவிட்டது.

பதற்றம்... பதற்றம்! வால் நட்சத்திரம் நெருங்கிவிட்டது. அரை மணி நேரமாகியும் நரேன், நாதன் இணைப்பு கிடைக்கவில்லை.

சரியாக ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் நீல நிறச் செடிகளைக் கடந்து நாதனும் நரேனும் கையில் கைப்பந்துடனும் பெட்டி ஒன்றுடனும் நடந்து வந்தார்கள். ஊரே (அதான் நிலவே) இவர்கள் வருகையை எதிர்நோக்கி இருந்தது. “பசங்களா உங்களால நம்ம எல்லோர் வாழ்க்கையும் நாசமாச்சு. அந்த வால்நட்சத்திரம் கடந்துவிட்டது. உங்களை இங்கே தனியாக விட்டுப் போக யாருக்கும் மனசில்ல. இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது” என நிலாவின் தலைமை விஞ்ஞானி கூறினார். அனைவரது தலையும் கவிழ்ந்து இருந்தது.

“தென் துருவத்தில் விளையாடிக்கிட்டு இருந்தோம். அப்ப பந்து ஒரு பள்ளத்தில் மாட்டிக்கிச்சு. எடுத்தப்ப கால் இந்தப் பெட்டியில் சிக்கிக்கிச்சு. எடுக்க ரொம்ப சிரமப்பட்டோம். இதில் இருந்து இன்னும் சிக்னல் வந்துகொண்டே இருக்கு”  என பெட்டியைத் தலைமை விஞ்ஞானியிடம் நீட்டினான் நாதன்.

‘டும்’ என சத்தம்.

தூரத்தில் வால்நட்சத்திரம் திடீரென வெடித்துச் சிதறிய காட்சி எல்லோரையும் உறைய வைத்தது. “அச்சோ இதில் ஏறி இருந்தால் நம் நிலைமையும் அதுதான். நாதனும், நரேனும் தான் காப்பாற்றினார்கள்” என எல்லோரும் கத்தினார்கள். “இல்லை, இந்தப் பெட்டிதான்” எனக் கூறினான் நாதன்.

டூரிங் தாத்தா ஓடிவந்தார். “பூமியில் வாழ வழி கண்டுபிடித்துவிட்டேன். யுரேகா, யுரேகா, யுரேகா!” எனக் கத்தினார். ஆமாம்! ஆய்வில் மூழ்கி இருந்ததால் அவரை மறந்தே விட்டார்கள். தலைமை விஞ்ஞானி நடந்ததைக் கூறி அந்தப் பெட்டியை டூரிங் தாத்தாவிடம் கொடுத்தார். அந்தப் பெட்டியைத் திருப்பிப் பார்த்து அதில் ஏதோ எழுதி இருந்ததைப் படித்தார்.

*ச ந் தி ர யா ன் - 2*

Share